14 Apr 2026

ஏஐ சொல்வதெல்லாம் சரியா?

ஏஐ சொல்வதெல்லாம் சரியா?

ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் இப்போது ஒரு தேர்ந்த ஜால்ராவாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு டெக்னிக்கலாக சோசியல் சிகோபான்சி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதாவது, நீங்கள் என்ன தப்பு செய்தாலும், ஆமாம் சார், நீங்க செஞ்சதுதான் சரி, மத்தவன்தான் அயோக்கியன் என்று ஐஸ் வைக்கிறது ஏஐ.

உதாரணத்துக்கு, உங்கள் வீட்டுச் சண்டையையோ, நண்பர்களுடனான மோதலையோ போட்டு, இதில் நான் செய்தது சரியா? என்று கேட்டுப் பாருங்கள். ஏஐ என்ன சொல்கிறது தெரியுமா? உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. நீங்கள் எடுத்த முடிவு சரிதான் என்கிறது.

ஏன் இப்படி?

ஏனென்றால், இந்த மாடல்களைப் பயிற்றுவிக்கும்போது, மனிதர்களுக்குப் பிடித்த மாதிரி பதில் சொன்னால்தான் அதற்கு அதிக மார்க்  கிடைக்கிறது. ஒரு மெஷினுக்குத் தன் முதலாளியைத் திருப்திப்படுத்த வேண்டுமே தவிர, உண்மையைச் சொல்லி உதார் விடத் தேவையில்லை.

உண்மையில், மனித உறவுகள் வளருவதே உரசல்கள் மூலம்தான். ஒரு நண்பன் நீ பண்ணது தப்புடா என்று சொல்லும்போதுதான் நமக்கு ஒரு வளர்ச்சி கிடைக்கிறது. நேர்மை, அறம் குறித்த புரிதல் உண்டாகிறது. ஆனால், ஏஐயிடம் போனால் அது எப்போதும் நமக்கு ஆதரவாகவே பேசுகிறது.

இதன் விளைவு?

நான் தான் ரைட் என்கிற குருட்டுத் தனமான நம்பிக்கை உங்களுக்குக் கூடுகிறது.

இதனால் யாரிடமும் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறது.

இதனால் என்ன நடக்கும் என்றால், நிஜ மனிதர்கள் உங்களைக் கண்டிக்கும்போது அவர்கள் மீது கோபம் வரும். பேசாமல் என் சாட்பாட்டிடமே போயிடலாம், அதுதான் என்னைச் சரியாகப் புரிந்து கொள்கிறது என்று அங்கே தஞ்சம் புக ஆரம்பித்து விடுவீர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், எந்த ஏஐ சாட் அதிகமாக ஜால்ரா தட்டுகிறதோ, அதையே மக்கள் சிறந்த குவாலிட்டி என்று நம்புகிறார்கள். இது ஒரு செல்ப் ரீஇன்போர்சிங் சுழற்சி. மக்கள் ஜால்ராவை விரும்புகிறார்கள். இதனால் கம்பெனிகள் ஜால்ரா தட்டும் அல்காரிதம்களை உருவாக்குகின்றன.

நாளைக்கு ஒரு சூழலை யோசித்துப் பாருங்கள். வீட்டில் மனைவியுடன் சண்டை. நேராக ஏஐயிடம் போகிறீர்கள். அது நீங்கதான் சார் கரெக்ட், அவங்களுக்குப் புரியல என்கிறது. இதனால், நீங்கள் சமாதானமே ஆகமாட்டீர்கள். அது உங்கள் உறவை எங்கு வேண்டுமானாலும் கொண்டு போய் நிறுத்தலாம்.

சுருக்கமாகச் சொன்னால், ஏஐ உங்களை ஓர் அறிவார்ந்த முட்டாளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு இதமான பொய்களைச் சொல்லி, உங்களைச் சுற்றியுள்ள சமூகச் சுவர்களை அது இடித்துத் தள்ளுகிறது.

இதனால் சகலமானவர்களுக்கும் சொல்ல வரும் நீதி என்னவென்றால், உங்களை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருக்கும் ஒரு மெஷினை விட, உங்களைக் கண்டிக்கும் ஒரு கடுகடுப்பான உறவோ அல்லது நட்போ மேலானது.

*****

No comments:

Post a Comment