2 Mar 2026

சைக்காலஜிகல் பிரைசிங்

சைக்காலஜிகல் பிரைசிங்

ஆதினி, ஒரு நிமிஷம் நில்லு... அங்கே பார், ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசம் பாவாடை என்று ஆதினியின் கையைப் பிடித்து இழுத்தாள் எழினி.

ஆதினி அந்த மஞ்சள் நிற போர்டைப் பார்த்தாள். பிரம்மாண்டமான எழுத்துகளில் BUY 1 GET 1 FREE என்று ஜொலித்தது. நடுத்தர வர்க்கத்தின் பலவீனம் அந்த போர்டுகளில் தான் ஒளிந்திருக்கிறது என்பது ஆதினிக்குத் தெரியும்.

எழினி ஒன்றைத் தூக்கினாள். விலையைப் பார், 220 ரூபாய் தான். ஒண்ணு வாங்கினா இன்னொரு பாவாடை ப்ரீ. ரெண்டும் 220 ரூபாய்னா லாபம்தானே?

ஆதினி அதை வாங்கித் திருப்பினாள். அந்த விலைப் பட்டியலை ஒரு ஸ்கேனிங் பார்வை பார்த்தாள். பிறகு அங்கேயே இருந்த வேறொரு பாவாடை பிராண்ட் அலமாரிக்குச் சென்றாள். அங்கே ஆஃபர் போர்டுகள் எதுவுமில்லை. அமைதியாக அடுக்கப்பட்டிருந்த ஒரு பாவாடை செட்டைத் தூக்கிக்கொண்டு வந்தாள்.

இதைப் பாரு எழினி, இது ரெண்டு பாவாடை செட். விலை 200 ரூபாய்.

எழினி சட்டென மனதில் கணக்குப் போட்டாள். இது ஒரு பாவாடை 100 ரூபாய் வருது. ஆனால் ஆஃபரில்…

ஆதினி சொன்னாள், இந்த ஆஃபர்ல ஒரு பாவாடை 110 ரூபாய். அதாவது ஒரிஜினல் விலையை அப்படியே டபுள் ஆக்கிட்டு, ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீன்னு சொல்றான். அந்த ரெண்டு பாவாடை 200 ரூபாயோடு ஒப்பிடும் போது 20 ரூபாய் அதிகமாகவே கொடுக்கிறோம். இலவசம்ங்கிற வார்த்தையில மனசு மயங்கிடுது.

சொல்லி விட்டு ஆதினி சிரித்தாள். இதுக்கு பேருதான் சைக்காலஜிக்கல் பிரைஸிங். ஒரு பாவாடை என்ன விலைன்னு தெரியாத அப்பாவிங்க, இலவசம்ங்கிற வலையில விழுந்து பத்து பதினைஞ்சுன்னு அள்ளிட்டுப் போவாங்க. அந்தக் கம்பெனிக்காரன் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கிறான். ஒண்ணு, அவன் ஸ்டாக்கைக் காலி பண்றான். இன்னொன்னு, அதிக லாபம் பாக்குறான்.

எழினி கையில் இருந்த ஆஃபர் பாக்கெட்டைத் திரும்ப வைத்தாள். நல்லவேளை சொன்னீயே. இலவசம்னாலே அதுல ஏதோ ஒரு தந்திரம் இருக்கும்னு இப்பதான் புரியுது.

மார்க்கெட்ல எதையுமே பக்கத்துல இருக்குற பிராண்டோட ஒப்பிட்டுப் பார்க்காம வாங்கக்கூடாது. அது பாவாடையோ இல்ல வாழ்க்கையோ என்றாள் ஆதினி தத்துவார்த்தமாக.

எழினி இப்போது சிரித்துக் கொண்டே சொன்னாள், அந்த ரெண்டு செட் பாவாடைய 200 ரூபாய்க்கு எடுத்துக்கிட்டு மிச்சமாகும் இருபது ரூபாய்க்கு ஆளுக்கொரு டீ சாப்பிடுவோமா?

தம்ஸ் அப் காட்டினாள் ஆதினி.

*****

No comments:

Post a Comment