உனக்குப் பயம்! விளம்பரத்துக்குக் காசு!
கௌதமன்
தன் மடிக்கணினியில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தான்.
பூங்குன்றன்
தன் செல்போன் திரையில் தீவிரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தான். திடீரெனப் பூங்குன்றன்
முகம் சுருங்கியது.
கௌதமா
ஒரு சந்தேகம். இணையத்தில் பாலியல் ஆரோக்கியம் என்று தேடினால் வரும் முடிவுகள் பயமுறுத்துகிறதே
என்றான் பூங்குன்றன்.
கௌதமன்
மடிக்கணினியை விட்டு முகத்தைத் திருப்பினான். நீ எங்கே தேடுகிறாய் என்பதுதான் முக்கியம்
பூங்குன்றா. கூகுளில் ஒரு சாதாரண தலைவலி என்று தேடினால் கூட, அது கடைசியில் புற்றுநோய்
என்று கொண்டு போய் முடிக்கும். இதில் பாலியல் என்றால் கேட்கவா வேண்டும்?
இல்லை
கௌதமா, விளம்பரங்கள் எல்லாம் பயங்கரமாக இருக்கிறது. இதைச் சாப்பிட்டால் குதிரை பலம்,
பத்தே நாளில் மாற்றம் என்று விதவிதமான லேகியம், மாத்திரைகள். இதையெல்லாம் உண்மையென்று
நம்பி யாராவது வாங்குவார்களா? என்றான் பூங்குன்றான்.
கௌதமன்
சிரித்தான். வாங்குவார்களே. ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்று கடையில் ஒரு தாள் ஒட்டியிருந்தாலே
பாய்ந்து கொண்டு வாங்குவார்கள். இதில் குதிரை பலம், பத்தே நாளில் மாற்றம் என்றால் வாங்காமல்
இருப்பார்களா? இது ஒரு வகை பய உளவியல். பாலியல் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் இளைஞர்கள்
தங்களுக்கு ஏதோ குறைபாடு இருக்குமோ என்று பயப்படுகிறார்கள். அவர்களது பயத்தை விளம்பரங்கள்
காசாக்குகின்றன என்றான்.
பூங்குன்றான்
அலைபேசியை ஒளி மங்கச் செய்தான். அப்படியானால் இந்த இணையத் தேடல்கள் எல்லாம் தவறா? என்றான்.
எல்லாம்
தப்பில்லை பூங்குன்றா. ஆனால் மக்கள் எதைத் தேடுகிறார்கள் தெரியுமா? ஆரோக்கியமான தகவல்களை
விட, பாலியல் செயல்பாடுகளை மேம்படுத்த குறுக்கு வழிகள் இருக்குமா என்றுதான் அதிகமாகத்
தேடுகிறார்கள். அந்த மாதிரியான படங்களைப் பார்த்து விட்டு, அதுதான் உண்மை என்று நம்பி
தன்னுடைய உடலை அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்து தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள்.
இது ஒரு மிகப்பெரிய புதைகுழி. சிக்கினால் மன உளைச்சல் இலவசம்.
பூங்குன்றன்
யோசனையில் ஆழ்ந்தான். இதற்கு என்னதான் தீர்வு என்றான்.
இணையத்தில்
வருகின்ற எல்லா விளம்பரமும் உண்மை கிடையாது. பாலியல் ரீதியான சந்தேகங்கள் இருந்தால்
ஒரு தகுதியான மருத்துவரை நேரில் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு பத்து ரூபாய்க்கு
பத்து மாத்திரை என்கிற சலுகையை நம்பினால் ஆரோக்கியம் தவணை முறையில் போய் விடும். சொல்லிவிட்டுக்
கௌதமன் சிரித்தான்.
பூங்குன்றன்
இனி நீ இங்கேயே கிட என்று அலைபேசியைக் குழாய் சட்டையின் பைக்குள் போட்டான். இலவசமாக
வருகின்ற தகவல்களை உண்மை என்று நம்புவது ஓட்டைப் படகில் கடலைக் கடக்க முயற்சிப்பது
போல என்றான்.
தெளிவாகி
விட்டாய் பூங்குன்றா. விளம்பரங்களை வியத்தலும் இலமே, பாலியலை இகழ்தல் அதனினும் இலமே
என்று கண்ணடித்தான் கௌதமன்.
*****

No comments:
Post a Comment