3 Mar 2026

ஏனிந்த அமெரிக்க ஈரான் போர்?

ஏனிந்த அமெரிக்க ஈரான் போர்?

இது உலகப் போர் அல்ல. ஆனால் அதற்கான எல்லா முஸ்தீபுகளும் இதில் உண்டு. அமெரிக்காவிடம் இருப்பது அதிநவீன ஆயுதங்கள். ஈரானிடம் இருப்பது நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற நிலைபாடு. நடுவில் மாட்டிக்கொண்டு விழிப்பது ஒட்டுமொத்த உலக பொருளாதாரம்.

அமெரிக்கா ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பெனி போல. அதன் சி.இ.ஓ அதாவது அதன் அதிபர் அவ்வப்போது மாறும்போதெல்லாம் பாலிசிகளும் மாறும். ஈரான் ஒரு பழைய குடும்பம் போல. தலைமுறை தலைமுறையாக ஒரே நிலைபாடு.  அமெரிக்காவுக்கு எண்ணெய் வேண்டும், ஈரானுக்குத் தன் நிலைபாடு முக்கியம்.

யுத்த தந்திரங்கள் இப்போது மாறிவிட்டன. ஒரு காலத்தில் யானைப்படை, குதிரைப்படை, ஒட்டகப்படை எல்லாம் இருந்தன. பிறகு டாங்கிகள் வந்தன. இப்போது எல்லாம் டிஜிட்டல் மயம். வீடியோ கேம் வகையறா.

ஒரு பட்டனை அழுத்தினால் ஈரானின் மின்சாரம் கட் ஆகும். அப்படிப்பட்ட சைபர் அட்டாக்குகளும் இந்த யுத்தத்தில் உண்டு.

ஆளே இல்லாமல் ஆகாயத்தில் பறந்து குண்டு போடுவது இப்போதைய போர்களின் ஸ்பெஷாலிட்டி. இது ட்ரோன்களின் வேலை.

ஏனிந்த சண்டை என்றால், அதற்கான பதிலை அவ்வளவு சுலுவாகச் சொல்லி விட முடியாது. இது வெறும் நிலப்பரப்புக்கான சண்டை இல்லை. ஈரானின் நிலம் மற்றும் கடல் பரப்பில் இருக்கும் எண்ணெய்க்கான சண்டை என்பது ஒரு பார்வை. உலக அளவில் ஈரானிடம் இருக்கும் எண்ணெய் வளம் பத்து சதவீதம்.

மேற்படிப் பார்வைப்படி இந்தப் போர் நடப்பதற்குக் காரணம் என்னவென்றால்,

இந்த எண்ணெய்க்கான வணிகம் டாலரின் வழியில் தன் கட்டுபாட்டில் நடக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ஈரான் அப்படிச் செய்தால் போர் தொடுக்காமல் பாதுகாப்பையும் வழங்குவேன் என்கிறது அமெரிக்கா. என்னிடம் இருக்கும் எண்ணெய் வளத்தை என் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் நான் வர்த்தகம் செய்வேன், அதைக் கேட்க நீ யார் மாமனா, மச்சானா என்கிறது அமெரிக்காவைப் பார்த்து ஈரான்.

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதால் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாகச் சொல்வது மற்றொரு பார்வை. ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு இஸ்ரேலுக்குப் பாதகமாக இருக்கும் என்று இஸ்ரேலுடன் அமெரிக்காவும் அஞ்சுகிறது. தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அன்றி, அமெரிக்கா நினைக்கும் அளவுக்கு தங்களிடம் எந்த அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளும் இல்லை என்று ஈரான் தலையிலடித்துச் சொல்கிறது. அப்படியெல்லாம் இல்லை, சுரங்கம் தோண்டி யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துக் கொண்டிருப்பதாக அமெரிக்கா நெஞ்சிலடித்துச் சொல்கிறது.

எப்படியோ போருக்கு ஒரு காரணமும் ஒரு நியாயம் செய்வதும் தேவைப்படுகிறது. அதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

இந்தப் போர் ஒரு மாதத்துக்குத் தொடரும் என ஜோதிடம் பார்த்து விட்டுச் சண்டையைத் தொடங்கியதைப் போல டிரம்ப் சொல்கிறார். எத்தனை நாட்கள் நடக்கும், எப்போது முடியும், போரின் போக்கு எப்படியெல்லாம் மாறும் என்றெல்லாம் யாரும் சொல்லி விட முடியாது.

இந்தப் போரினால் என்ன நடக்கும்?

பெட்ரோல் விலை ஏறும். விரைவில் அது பங்குகளில் தெரிய வரும். பங்குச்சந்தை கீழே விழும். அதன் படி விழுந்தே விட்டது. படுத்தே விட்டானய்யா நிலைதான் தற்போது பங்குச் சந்தையில்.

அமெரிக்கா தன்னுடைய புது ஆயுதங்களை எல்லாம் பரீட்சை செய்து பார்க்கும். ஈரான் சில அமெரிக்க ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தும். இந்தப் போரில் அமெரிக்கா யானைதான். ஆனால் யானைக்கும் அடி சறுக்கினால், அதன் பின் நடப்பதையெல்லாம், கற்பனை செய்து பார்க்க முடியாது.

ஈரானின் முக்கிய தலைவர்களையெல்லாம் காலி செய்து விட்டேன் என்கிறது அமெரிக்கா. அடுத்த தலைவர் அங்கு உருவாக மாட்டாரா என்ன? அப்படி உருவாகி அவர் அமெரிக்கா எனும் யானையின் காதுக்குள் புகுந்து விட்ட எறும்பாகி விட்டால்… அதன் பின் நடக்கப் போவதையும் அறுதியிட்டு உறுதியிட்டு எல்லாம் கூறு முடியாது.

ஹார்முஸ் ஜலசந்திதான் எண்ணெய் உலகின் தொண்டைக் குழி. ஈரான் இங்கே கை வைத்தால் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மூச்சு முட்ட ஆரம்பித்து விடும். ஏனென்றால், உலக எண்ணெய்க் கப்பல்களில் இருபது சதவீதம் இதைக் கடந்துதான் போக வேண்டும். ஆக அங்கே பறக்கும் ஒவ்வொரு ஏவுகணைக்கும் பெட்ரோலோ, டீசலோ லிட்டருக்கு ஒரு ரூபாயாவது நிச்சயம் ஏறும்.

இப்போது விமானங்கள் வளைகுடா பகுதிகளுக்குப் பறக்க முடியாது என்று குட் நைட் சொல்லி விட்டன. விமானப் போக்குவரத்து வார் வார் கோ அவே, கம் அகைன் அனதர் டே என்று பாடிக் கொண்டு ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க சப்போர்ட்டில் இருக்கும் சவூதி, துபாய், குவைத்தை ஈரான் தாக்கத் தொடங்கினால், அதன் பிறகு எண்ணெய் கிணறுகள் தீப்பிடிக்க தீப்பிடிக்க தீ பரவட்டும் மொமன்ட்தான். பெட்ரோல் தீயை அணைப்பது சாதாரணப்பட்ட வேலை அல்ல. தீப்பொறி திருமுகமே வந்தாலும் அனல் பறக்கும்.

போர் நடப்பது வளைகுடாவில்தான் என்றாலும், உலகின் அனைத்து நாட்டு மக்களின் குடல்களையும் இந்தப் போர் பதம் பார்க்கும். எண்ணெய் விலை ஏறினால், எல்லா பொருட்களின் விலைக்கும் ஜலதோசம் பிடித்துவிடும். எல்லாம் தாறுமாறாக ஏறத் தொடங்கும். சாமான்யன் என்ன செய்வான்?

இந்த உலகமே ஒரு சர்க்யூட் போல தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் எங்கே ஷார்ட் சர்க்யூட் ஆனாலும் மெயின் ஸ்விட்ச் ஆப் ஆகி விடும். அதனால் உலகப் பெருமந்தம் வரலாம் அல்லது வராமல் போகலாம். யுத்தம் என்பது ஒரு தோல்வி அடைந்த உரையாடல் என்பார்கள். ஆயுதங்களுக்குக் காதுகள் கிடையாது. அதுபாட்டுக்கு அழித்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்கும்.

ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் என்று ஒரு தலைவலி நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடியாத நிலையில், இன்னொரு தலைவலி துவங்கி விட்டது இந்த உலகுக்கு. ஒரு பாராசிட்டாமலோ, அனாசினோ போட்டால் நிற்கக் கூடிய தலைவலி கிடையாது இது. போர் இல்லை என்றால் இந்த அநாவசிய தலைவலிகள் ஏற்படப் போவதே இல்லை.

*****

 

No comments:

Post a Comment