உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு பத்து நிமிடம்!
வார்த்தைகள்
ஆபத்தானவை. ஒருவன் சரி என்கிறான். அதையே இன்னொருவன் தவறு என்கிறான். இந்த சரி, தவறுக்குள்
எத்தனை அர்த்தங்கள்? அது சம்மதமாக இருக்கலாம், சலிப்பாக இருக்கலாம், அல்லது இப்போதைக்குத்
தொலையேன் என்கிற எரிச்சலாகவும் இருக்கலாம்.
நாம்
என்ன செய்கிறோம்? அவன் சொன்ன வார்த்தையை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். அதன் பின்னாலிருக்கும்
அர்த்தத்தை விட்டுவிடுகிறோம். அங்கேயே ஆரம்பிக்கிறது உலகப்போர்.
கவனிக்க
வேண்டியது வார்த்தைகளையல்ல, அந்த வார்த்தைகளுக்குப் பின்னிருக்கும் அர்த்தத்தை. இதைத்
திருவள்ளுவர் குறிப்பறிதல் என்கிறார். இது கொஞ்சம் கஷ்டமான வேலைதான். அந்தக் கஷ்டத்தைப்
பார்த்தால் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு படுகிற கஷ்டம் உலக மகா கஷ்டமாக இருக்கும்.
புரியவில்லை
என்பதுதான் உலகின் மிகப்பெரிய கவலை. படிக்கிறவனுக்குப் பாடப்புத்தகம் புரிவதில்லை.
வேலை பார்ப்பவனுக்கு மேனேஜர் புரிவதில்லை. மேனேஜருக்கு முதலாளி புரிவதில்லை. முதலாளிக்குத்
தொழிலாளி புரிவதில்லை. கணவனுக்கு மனைவி புரிவதில்லை. மனைவிக்குக் கணவன் புரிவதில்லை.
பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் புரிவதில்லை. பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் புரிவதில்லை.
இது ஓர் உலகளாவிய பிரச்சனை.
இந்தப்
புரியவில்லை என்பதற்குப் பின்னால்தான் அர்த்தமே ஒளிந்து கிடக்கிறது. ஓர் அர்த்தம் மட்டுமல்ல,
வேறுபல அர்த்தங்களும் ஒளிந்து கிடக்கின்றன. ஆகவே இதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க
முடியும் என்று சிந்திப்பதற்கு ஒரு பத்து நிமிடம் செலவு செய்தால், இங்கே பாதி விவாகரத்துகளும்,
முக்கால்வாசி சண்டைகளும் காணாமல் போய்விடும்.
அந்தப்
பத்து நிமிடம்தான் பிரச்சனை. அப்படி பத்து நிமிடம் ஒதுக்க முடியாத அளவுக்கு உணர்ச்சிக்
குவியலுக்குள் காணாமல்போய் விடுகிறோம். உணர்ச்சிப் பிழம்பாய்த் தெறித்து புரிய வேண்டிய
அர்த்தங்களை புரிய விடாமல் பொசுக்கி விடுகிறோம்.
நம்
மூளை ஒரு விசித்திரமான வஸ்து. அது தனக்குத் தெரிந்த தரவுகளை வைத்துக்கொண்டு, எதிராளி
சொல்வதற்கு உடனே ஒரு அர்த்தத்தைக் கற்பித்துக் கொள்கிறது. அதற்கு வேறு அர்த்தமும் இருக்கும்
என்பதை யோசிக்க மறுக்கிறது.
உதாரணத்துக்கு
ஆசிரியர் கூப்பிட்ட உடன் மாணவன் என்ன நினைத்துக் கொள்கிறான்? திட்டத்தான் கூப்பிடுகிறார்
என்று. பாராட்டவும் கூப்பிட்டிருக்கலாம் அல்லவா! இங்குதான் மைன்ட் செட் பிரச்சனை செய்கிறது.
பழகிய மைன்ட் செட்டிலிருந்து வெளியே வர மறுக்கிறது மனம். அதிலிருந்து வெளியே வந்து
வேறு அர்த்தமும் இருக்கலாம், வேறொன்றும் நிகழலாம் என்று யோசிக்க ஆரம்பித்தால் வாழ்க்கையின்
லாஜிக்கே மாறி விடும்.
என்னைக்
கேட்டால் மனம் ஒரு தவறான புரிதல்களின் தொழிற்சாலை என்பேன். அது சொல்வதை அப்படியே ஏற்றுக்
கொள்ளக் கூடாது. மனம் சொல்லும் அந்த ஓர் அர்த்தம் மட்டுமா இருக்கும்? வேறு அர்த்தமும்
இருக்கும் என்று அதை யோசிக்க பழக்க வேண்டும். இந்த ஒரு பழக்கம் உங்கள் வாழ்க்கையையே
மாற்றும். தவறான புரிதல்களிலிருந்து உங்களைக் கரையேற்றும்.
உலகில்
உள்ள பாதி பிரச்சினைகள் அவன் சொன்னான், இவள் நினைத்தாள் என்பதில்தான் இருக்கின்றன.
ஒரு சொல்லுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மௌனத்தை வாசிக்க நமக்குத் தெரிவதில்லை.
அறிவியல்
ஒலியின் வேகத்தை 331 மீ/வி என்கிறது. ஒளியின் வேகத்தை 3×108 மீ/வி என்கிறது.
ஆனால் தவறான புரிதலின் வேகம் அதைவிட அதிகம். ஒரு வார்த்தை காதில் விழுந்தவுடனேயே நாம்
ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம்.
நிதானமாக
எதையும் பத்து நிமிடம் ஒதுக்கி யோசிப்பது என்பது ஒரு கலை. அதுவும் இவன் ஏன் இப்படிச்
சொன்னான்? அவன் ஏன் அப்படிச் சொன்னான்? என்று மற்றவர் பக்கம் நின்று யோசிப்பது ஒரு
மேதாவித்தனம்.
எல்லாவற்றிற்கும்
ஒரே ஒரு அர்த்தம்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கமலஹாசன் பேசுவதைப் போலத்தான் இதுவும்.
பார்க்கும் பார்வையைப் பொறுத்து அர்த்தங்கள் மாறும்.
அடுத்த
முறை யாராவது உங்களைக் காயப்படுத்தும் விதமாகப் பேசினால், கோபப்படுவதற்கு முன்னால்
மனதிடம் ஒரு பத்து நிமிடம் பாஸ் என்று மனதிற்குள் Pause பட்டனை அழுத்துங்கள். இதற்கு
வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? என்று அதனிடமே கேளுங்கள். அதுதானே சிக்க வைக்கப்
பார்க்கிறது. ஆகவே அதனிடமே இப்படிக் கேட்டு அந்தச் சிக்கலிலிருந்து வெளியேறுங்கள்.
ஒரு பெரிய அமைதி பிறக்கும். அந்த அமைதிதான் இந்த உலகத்திற்கும் உங்களுக்கும் இப்போது
தேவை.
இது
உங்களுக்குப் பிடித்திருந்தால் நான்கு பேரை இதைப் படிக்கக் கூட்டி வாருங்கள். இப்படிச்
சொன்னதும் இதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டால்
நீங்கள் சக்சஸ் ஆகிவிட்டீர்கள் பாஸ். யூ ஆர் Pass. உங்களுக்கு தேர்ச்சி சான்றிதழை விரைவில்
அனுப்பி வைக்க வேண்டும்.
*****

No comments:
Post a Comment