7 Feb 2026

மனமென்னும் நான் ஸ்டாப் தொழிற்சாலை!

மனமென்னும் நான் ஸ்டாப் தொழிற்சாலை!

முடியாது. நிச்சயம் முடியாது. அப்படித்தான் நினைத்தேன். ஆனால் முடித்தேன். எப்படி? தத்துவங்கள் பேசி அல்ல, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று காரியத்தில் இறங்கிப் பார்த்தேன். முடியாது என்று நினைத்த காரியம் எப்படியோ முடிந்தது. அதெப்படி முடியாது என்று நினைத்த காரியம் முடிந்தது? மனம் அப்படித்தான். அதன் சைக்காலஜி இட்லி உப்புமா போன்றது, கைம்மா புரோட்டா என்று சொன்னாலும் அதுவும் சரியானதே.

இங்கே ஒரு விசயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முடியாது என்கிற எண்ணத்தை இன்னொரு எண்ணத்தால் ஒருபோதும் டெலிட் செய்ய முடியாது. அதற்கு ஒரு செயல் தேவை. செயலில் இறங்கினால் தான் சந்தேகம் சாகும். இல்லையென்றால் அந்தச் சந்தேகத்திலேயே கிடந்து மனம் நோகும்.

எதற்கும் எதுவும் தடையல்ல. ஜஸ்ட் ஸ்டார்ட். தட்ஸ் ஆல். ரிசல்ட்டை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் எதிலும் அவசரம் எதற்கு? கொஞ்சம் வெயிட். பிறகு பாருங்கள். பொறுமைக்கு வட்டி அதிகம். அதுவும் தனிவட்டியல்ல, கூட்டு வட்டி. உலகின் எட்டாவது அதிசயம். உங்களுக்கும் கிடைக்கும் அந்த ரகசியம்.

உண்மையில் எது தடை? யோசித்துப் பார்த்தால் நமக்குள் இருக்கும் அந்த மனம்தான் வில்லன். கேட்பதற்கு ஜோக்கைப் போல இருந்தாலும் மனதுக்கு வில்லன் மனம்தான். அதாவது உங்களுக்கு நீங்களே வில்லன் என்பது போல. உண்மை அதுதான்.

மனமாகவே ஒரு ப்ரீ-ஜட்ஜ்மென்ட் போட்டு வைத்துக்கொள்ளும். ஒரு கட்டத்துக்குள் தன்னைத் தானே பூட்டி வைத்துக்கொண்டு கைதி மாதிரி அலைந்து கொண்டிருக்கும். சுதந்திரம், மகிழ்ச்சி எல்லாம் அந்தப் பெட்டிக்கு வெளியேதான் இருக்கிறது. அதை உடைத்துக் கொண்டு வந்தால்தான் கூண்டுக்கிளி மனதுக்குப் பறப்பதற்குச் சுதந்திர வானம் கிடைக்கும். இல்லைன்றால் கூண்டுக்குள்ளே சுருங்கிடும் சிறகுகள்.

காமெடி என்னவென்றால், ஒரு மனதை மாற்ற வேண்டும் என்று நினைப்பதும் அதே மனம்தான். பிறகு அதை மாற்ற நினைப்பதும் அதே மனம்தான். அதாவது கான்ட்ராடிக்சனான ஒரு ரீப்பிட் மோட். இப்படி மாற்றிக்கொண்டே போனால் ஒன்று புரியும். மாற்றிக் கொண்டிருக்கும் அந்த ஒரு மனதைத் தவிர மற்ற எதுவுமே நிலையில்லை.

மனதை டிசைன் பண்ணுவதுதான் பெரிய தலைவலி. அதற்கு எந்த வடிவத்திலும் திருப்தி வராது. தான்தான் அதை உருமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல், அது தன் பாட்டுக்கு உருமாறிக் கொண்டே இருக்கும்.

ஆக, மனம் ஒரு விசித்திரமான சாப்ட்வேர். அதைச் சரி செய்ய இன்னொரு சாப்ட்வேர் தேடாமல், வேலையில் இறங்குங்கள். அதுவே வழி.

காரியத்தில் இறங்கினால் நீங்கள் அழிக்க நினைத்த மனம் தானாகவே அழியும். புதிய மனம் உருவாகும்.

இது புரியாமல் நீங்கள் ஓவர் திங்கிங்கில் இறங்கி விட்டால், நீங்கள் எந்த மனதை அழிக்க நினைக்கிறீர்களோ, அதுவே உங்களை அழிக்க ஸ்கெட்ச் போட்டுக் காரியத்தில் இறங்க ஆரம்பித்து விடும். மனம் ஒரு வித்தியாசமான ரௌடிதான் இல்லையா!

இதற்கு மேல் பேசினால், நீங்கள் குழம்பி விடுவீர்கள். போதும். எழுந்து விடுங்கள். ஏதாவது வேலை இருந்தால் லெட்ஸ் ஸ்டார்ட் மியூசிக்!

*****

No comments:

Post a Comment