6 Feb 2026

விலை கொடுத்து வாங்கும் 20 ரூபாய் / 30 ரூபாய் டேஞ்சர்!

விலை கொடுத்து வாங்கும் 20 ரூபாய் / 30 ரூபாய் டேஞ்சர்!

வெயில் கொளுத்துகிறது. தாகம் தொண்டையை நனைக்கச் சொல்லி கெஞ்சுகிறது. பளபளக்கும் பிளாஸ்டிக் பாட்டில். உள்ளே பளிங்கு போல் தண்ணீர். வாங்கியதும் மூடியைத் திறக்கிறீர்கள். ஒரு க்ரக் சத்தம். அந்தச் சத்தம் நமக்கு ஒரு நம்பிக்கையைத் தருகிறது. சீல் செய்யப்பட்ட சுத்தமான நீர். அப்படித்தான் நீங்கள், நான், எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று அதற்கு ஒரு பெரிய குட்டு வைத்திருக்கிறது. அந்தப் பாட்டிலில் எச்சரிக்கை வாசகம் எங்கே? என்பதுதான் அந்தக் குட்டு.

ஏனிந்த குட்டு? ஏன் அந்த எச்சரிக்கை வாசகம்?

உள்ளே இருப்பது என்ன? நாம் குடிக்கும் பாட்டில் தண்ணீரில் இருப்பது வெறும் H2O என்றா நினைக்கிறீர்கள்? அதையும் தாண்டி சில வஸ்தாத்துகள் உள்ளே இருக்கிறார்கள். அவர்கள்தான் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ். கண்ணுக்குத் தெரியாத பிளாஸ்டிக் துகள்கள்.

ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரில் சராசரியாக 2.4 லட்சம் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் சைரன் சங்கை ஊதுகின்றன.

இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் தாகத்திற்குத் தண்ணீர் குடிக்கவில்லை. ஒரு சிறிய பிளாஸ்டிக் தொழிற்சாலையையே உள்ளே அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

அதனால், சிகரெட் பாக்கெட்டில் புற்றுநோய் வரும் என்று போடுகிறார்களே, மது பாட்டில்களில் குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று போடுகிறார்களே, அது போல பாட்டில் தண்ணீரிலும் எச்சரிக்கை வாசகம் போடுங்கள் என்கிறது உயர்நீதிமன்றம்.

இப்போது புரிந்து விட்டதா விடயம்.

அவ்வளவு முக்கியமா அந்த ரெட் லைட் வாசகம் என்றால், நிச்சயமாக.

பிளாஸ்டிக் துகள்களால் ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படலாம். தொடர்ந்து பிளாஸ்டிக் துகள்களோடு தண்ணீரை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தால் இளவயது மாரடைப்பு ஏற்படலாம். மலடாகிப் போய் வம்ச விருத்தி பூஜ்ஜியத்தில் போய் நிற்கலாம்.

ப்ளாஸ்டிக்கில் நீண்ட நாள் சேமித்து வைக்கப்படும் நீரில் பிளாஸ்டிக்கின் வேதிப்பொருள் கலக்க வாய்ப்பிருக்கிறது. முக்கியமாக, அந்தப் ப்ளாஸ்டிக்குகளை வெயிலில் வைக்கும்போது ஆபத்து மல்டிபிளை ஆகிறது.

நம் நாட்டில் குழாய் தண்ணீரை நம்புவதை விட, காசு கொடுத்து வாங்கும் பிளாஸ்டிக் பாட்டிலை நம்புகிறோம். இது ஒரு விசித்திரமான சைக்காலஜிதான். அடுத்த முறை நீங்கள் ஒரு வாட்டர் பாட்டிலை வாங்கும்போது, அதன் லேபிளைப் பாருங்கள். அங்கே அதிக வெப்பத்தில் வைக்காதீர்கள் அல்லது மீண்டும் பயன்படுத்தாதீர்கள் போன்ற எச்சரிக்கைகள் சின்ன எழுத்தில் இருக்கும். இனிமேல் அது பெரிய எழுத்தில் வரப்போகிறது.

தண்ணீர் என்பது உயிர். பிளாஸ்டிக் என்பது மெதுவான விஷம்.

நீரின்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அவர் காலத்தில் அந்த மாதிரியான பிரச்சனைகள் இல்லை. நம் காலத்தில் வந்து விட்டது. அதை நீதிமன்றமும் எச்சரித்துவிட்டது. நாம்தான் கொஞ்சம் அப்டேட் ஆக வேண்டும்.

முடிந்தால் ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டிலில் வீட்டிலிருந்தே தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, இந்தப் பூமிக்கும் நல்லது.

*****

No comments:

Post a Comment