7 Feb 2026

அண்டார்டிகாவில் பூக்கும் பூக்கள்!

அண்டார்டிகாவில் பூக்கும் பூக்கள்!

தலைப்பைப் படிக்கும் போது கவிதை வரி போலத் தோன்றுகிறதா? நிச்சயமாக இல்லை. இது சாத்தனின் வரி. அழிவுக்கு ஆதரவாக காலநிலை போட்டிருக்கும் கையொப்பம்.

காலநிலை மாற்றத்தின் உச்சகட்டமாக, எப்போதும் பனியால் மூடப்பட்டிருக்கும் அண்டார்டிகாவில் இப்போது சில இடங்களில் பச்சை புற்களும், பூக்களும் பூக்கத் தொடங்கியுள்ளன.

பூக்கள் பார்க்க அழகாகத் தெரிந்தாலும், அண்டார்டிகாவில் பூத்திருக்கும் பூக்கள் பூமிக்கு வழங்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய வார்னிங் பெல்.  இதனால்  அங்குள்ள ஐஸ் கட்டிகள் உருகினால், இங்குள்ள மெரினா பீச் எங்கே போகும் என்று தெரியாது. பிறகு நாம் கடலைப் போட்டுக் கொண்டே எங்கே சுண்டல் வாங்கிச் சாப்பிடுவது என்பதும் நம் அறிவுக்குப் புரியாது. நம் முன் இருந்த கடலை அண்டார்டிகாவின் உருகிய பனி கடலைப் போட்டு சுண்டலாய்த் தின்று செரித்திருக்கும்.

அண்டார்டிகாவும் சகாராவைப் போன்றதே. சகாரா மணல் பாலைவனம் என்றால், அண்டார்டிகா பனிப் பாலைவனம். மைனஸ் டிகிரி குளிரில் பெங்குவின்கள் மட்டும் கோட் போட்டுக்கொண்டு உலவும் அந்தப் பிரதேசங்களில் எதுவும் முளைப்பதும், பூப்பதும் நல்லதல்ல. அங்கே இப்போது திடீர் கலர் மாற்றம். எப்போதும் வெள்ளையாய் இருந்த பனிப்பாறைகளுக்கு நடுவே, இப்போது பச்சை நிறப் புற்களும், மஞ்சள் நிறப் பூக்களும் எட்டிப் பார்க்கின்றன.

பார்ப்பதற்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கிற மாதிரி அழகாகத்தான் இருக்கிறது. ஆனால், இதைப் பார்த்துப் பயந்து போயிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஏன் இந்தப் பயம் மற்றும் பதற்றம்?

பனிக்கட்டி உருகினால் தண்ணீர் வரும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அந்தத் தண்ணீர் பனிப்பூக்களை வளர்க்கத் தொடங்கியிருப்பது இயற்கைச் சூழலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் ஆபத்து.

இதனால் சகலமானவர்களும் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பூமிக்குக் காய்ச்சல் ஏறியிருக்கிறது. பாராசிட்டாமல் எல்லாம் இங்கே வேலை செய்யாது. முப்பது வருடங்களுக்கு முன் இருந்ததை விட இப்போது அங்கு தாவரங்களின் வளர்ச்சி பத்து மடங்கு அதிகம்.

இப்போது நீங்கள் இன்னொன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் ஆல்பேடோ எபெக்ட்.

இது செல்லூர் ராசுவின் தெர்மகோல் எபெக்ட்டை விட மோசமானது. வெள்ளை நிறப் பனி, சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பும். ஆனால், பச்சைப் புற்கள் சூரிய ஒளியை உறிஞ்சும். விளைவு? சூடு அதிகமாகும். பனி இன்னும் வேகமாக உருகும்.

இதைப் பற்றி நச்சென்று பச்சக்கென மனதில் ஒட்டிக் கொள்ளும் வகையில் சொல்ல வேண்டும் என்றால், இயற்கை நமக்கு ஒரு எர்ரர் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறது. அண்டார்டிகாவில் பூக்கும் அந்தச் சின்னஞ்சிறு மஞ்சள் பூக்கள், உலகம் அழியத் தொடங்குகிறது என்பதற்கான சைரன்.

இன்னும் சில காலமானால், அண்டார்டிகாவில் பிளாட் போட்டு, ஆர்கானிக் விவசாயம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் அப்போது மெரினா பீச்சில் குதிரை சவாரி போக வாய்ப்பிருக்குமா என்பதுதான் சந்தேகம்.

இயற்கையோடு விளையாடுவது சுவாரஸ்யம் தான், அது திரும்ப விளையாட ஆரம்பிக்கும் வரை!

பனிக்கட்டி உருகினால் நீர் வழியும் என்பது சயன்ஸ் பாடம். அண்டார்டிகாவின் பனிக்கட்டி உருகினால் உருகினால் உலகமே அழியும் என்பது கொஞ்சம் வயலன்ஸ் ஆன பாடம். நாம் பாடத்தைக் கற்றுக் கொள்வோமா? கஷ்டமாக இருக்கிறது என்று கற்றுக் கொள்ளாமல் விட்டு விட்டு, தண்ணீரில் மூழ்கிப் போவோமா?

விடை உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். தெரிந்து கொள்ள நானும் ஆர்வமாயிருக்கிறேன்.

*****

No comments:

Post a Comment