8 Feb 2026

லெட் ஸ்டார்ட் டிஜிட்டல் துறவறம்!

லெட் ஸ்டார்ட் டிஜிட்டல் துறவறம்!

எத்தனை காலம்தான் சோசியல் மீடியா டோபமைனிலே வாழ்வீர்கள்? பேச மட்டும் வந்த செல்போனோடு பலர் குழந்தை பெற்று, குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாகரிகம் ஒரு முழு வட்டம் அடித்துவிட்டது. 2000ஆவது ஆண்டுகளின் ஆரம்பத்தில் நோக்கியா 1100 வைத்திருந்தவனை ஏளனமாகப் பார்த்தோம். அப்போது என்னிடமும் அந்தப் போன்தான் இருந்தது. அன்று அது கெத்து. இப்போது அது வெத்து. ஆனால், இப்போது அதே போனைத் தேடி ஐரோப்பியர்கள் அலைகிறார்கள். இதற்குப் பெயர் நோ போன் புரட்சி. நோ போன் என்று சொல்லி விட்டு அப்புறமென்ன 1100 என்றால்,  ஸ்மார்ட்போனைத் தூக்கி எறிந்துவிட்டு, வெறும் ஹலோ சொல்ல மட்டும் பயன்படும் பழைய போனுக்குத் திரும்புவதுதான் இந்த டம்ப் போன் மேட்டர்.

உங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ? இன்ஸ்டாகிராம் ரீல்ஸையும், ஃபேஸ்புக் நோட்டிபிகேஷனையும் ஸ்க்ரோல் செய்வது ஒரு போதை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரு சின்ன லைக் விழுந்தால் மூளையில் சுரக்கும் டோபமைன், ஒரு சூதாட்டக்காரனின் சூது மனநிலைக்கும் கஞ்சா அடிப்பவனின் போதை மனநிலைக்கும் இணையானது. ஐரோப்பியர்கள் இதிலிருந்து டீடாக்ஸ் செய்ய விரும்புகிறார்கள்.

இங்கே நாம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பெட்ரூம் வரை குனிந்தே கிடக்கிறோம். தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்றால், கழுத்துச் சுளுக்கி விட்டது என்கிறோம். நிமிர்ந்து பார்க்கவோ, சக மனிதனைப் பார்த்துப் புன்னகைக்கவோ இனி முடியாது. எந்நேரமும் ஸ்மார்ட்போனையே பார்த்துக் கொண்டிருந்தால் அதெல்லாம் எப்படி முடியும்? நம் முழு வாழ்க்கையையுமே போனில்தான் வைத்திருக்கிறோம் என்கிறோம். இதைப் படிக்கும் போது வாட் நான்சென்ஸாகத் தெரியலாம். வாழ்க்கையை அப்படித்தானே வைத்திருக்கிறோம்.

ஆக இதிலிருந்து ஒரு மாற்றம் தேவை என்பது நமக்கே தெரிகிறது. ஐரோப்பியர்கள் இந்த விசயத்தில் கொஞ்சம் முந்திக் கொண்டார்கள். அவர்கள் டம்ப் போனுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

அதென்ன டம்ப் போன் என்றால், இதில் வாட்ஸ்அப் இருக்காது. ரீல்ஸ் கிடையாது. முக்கியமாக நண்பன் என்ன சாப்பிட்டான், அக்கா என்ன கோலம் போட்டாள் என்ற அப்டேட் வராது. சார்ஜ் போட்டால் ஒரு வாரம் வரும். இதில் நீங்கள் செய்யக்கூடிய ஒரே புரட்சிகரமான விஷயம் பேசுவது! 1100 என்றால் அப்படித்தானே?

நாம் போனை உபயோகப்படுத்துகிறோமா அல்லது போன் நம்மை உபயோகப்படுத்துகிறதா என்கிற சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு. நம் அந்தரங்கத்தையும், நேரத்தையும் ஒரு சிலிக்கான் சிப்பிடம் அடகு வைத்துவிட்டு, ஸ்மார்ட் ஆக இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம்.

ஐரோப்பாவில் தொடங்கியிருக்கும் இந்த கலாச்சாரம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே, ஏன் ஐரோப்பியர்கள் இதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே, இதை நான் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டேன். என் கையில் பல நேரங்களில் போனே இருப்பதில்லை. பலருக்கு அது இன்னொரு கை அல்லது ஆறாவது விரல். அது ஓர் உடல் உறுப்பாக மாறாமல் இருப்பதையே நான் விரும்புகிறேன்.

எங்கள் வீட்டில் நோக்கியா போனும் இருக்கிறது, சாம்சங் போனும் இருக்கிறது. ஆனாலும் எனக்குப் பிடித்தது லேண்ட் லைன் போன்தான். அதை இப்போது தர மாட்டேன்கிறார்கள். அதை வெளியே எடுத்துச் செல்ல முடியாது பாருங்கள்.

கடைசியாக ஒரு பஞ்சோடு இதை முடித்துக் கொள்வோம்.

உன் ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆஃப் ஆகும்போது உனக்கு எரிச்சல் வந்தால், நீ போனுக்கு அடிமை. மாறாக உனக்கு நிம்மதி கிடைத்தால், அந்தப் போன் உனக்கு அடிமை.

யாருக்கு யார் அடிமை?

கேள்வியை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். பதிலையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.

*****

No comments:

Post a Comment