8 Feb 2026

மண்டைக்குள் ஒரு மிக்ஸி!

மண்டைக்குள் ஒரு மிக்ஸி!

மனதை மாற்ற வேண்டும் என முயற்சி பண்ண வேண்டாம். நீ என்ன மாற்றுவது? நானே மாறிக் கொள்வேன் என்று டிசைன் டிசைனாக மாறிக் கொண்டிருக்கும். அது ஒரு பச்சோந்தி. அது பாட்டுக்கு கலர் மாற்றிக் கொண்டே இருக்கும்.

முக்கியமான குறிப்பு இதுதான். இன்புட் நிறைய எடுக்க வேண்டும். நாம் என்ன செய்கிறோம் என்றால், எதையும் முழுமையாக உள்வாங்காமலேயே அவுட்புட் கொடுக்க அவசரப்படுறோம். இதுதான் எப்போதும் நடக்கும் தவறு. நன்றாக கவனியுங்கள். உற்றுநோக்குங்கள். உள்ளே விஷயம் ஊற ஊற, என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று மண்டைக்குள் தானாகவே ஒரு ஐடியா முளைக்கும். அதுவரைக்கும் வெயிட் ப்ளீஸ். இல்லையென்றால் பச்சோந்தி மனதோடு மாரடிக்க வேண்டியதாக இருக்கும்.

அவசரப்பட்டு எடுக்கின்ற முடிவு, தவறாகப் போகும் சினிமா கிளைமாக்ஸ் மாதிரி ஆகி விடும். எதையும் ஒரு தாளில் எழுதிப் பாருங்கள். Paper work is must. யாராவது பதில் கேட்டால், உடனே குதிக்காதீர்கள். தெரிந்த விஷயங்களுக்கு ஓகே. ஆனால், புதிய விஷயத்துக்கு அவசரப்படக் கூடாது. தெரிந்த மாதிரி எதையாவது உளறி வைக்கக் கூடாது. குறைந்தபட்சம் யோசித்துச் சொல்கிறேன் என்று சொல்ல வேண்டும், இல்லையென்றால் தெரிந்தவர்களிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றாவது சொல்ல வேண்டும். யாரையும் உங்களை அவசரப்படுத்த விடாதீர்கள். அந்த அவசரம்தான் எல்லா தவறுகளுக்கும் ஆரம்பப்புள்ளி.

அப்புறம் இந்த ஆசை. ஆசைப்பட்டு எதையும் செய்யாதீர்கள். இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தியாக இருந்தால் புது ஆசை வராது. உள்ளுக்குள் ஓர் ஓட்டை இருந்தால்தானே புதிதாக எதுவும் நுழையப் பார்க்கும்? ஓட்டையை அடைத்துவிட்டால் எதுவும் நுழையாது. ஓட்டையை அடைப்பதில் கவனமாக இருங்கள். ஏனென்றால் இந்த ஓட்டை நடுக்கடலில் பயணிக்கும் கப்பல் எனும் மனதுள் விழும் ஓட்டை.

மேலும், இந்த மனநாயைப் பற்றி மேலும் சொல்ல வேண்டும் என்றால், அது எவ்வளவோ சொல்ல நினைக்கிறது. அதிகாரம் எனும் எஜமான் இல்லாத போது நடந்த அநீதி, சாப்பாட்டுப் பிரச்சனை, அவமானம் எல்லாவற்றையும் சொல்லத் துடிக்கிறது. அது ஊளையிடும் வார்த்தைகள் புரியவில்லை என்றாலும் அதன் வலி புரியும். அதிகார எஜமானன் வந்ததும் வாலை ஆட்டும். அந்த எஜமான் நாற்காலியில் உட்கார்ந்ததும், அதுக்கு ஒரு கெத்து வந்து விடும். வெளியில் நிற்பவர்களைப் பார்த்து லொள்ளும். எஜமானன் பக்கத்தில் இருந்தால் நாய்க்கே அவ்வளவு திமிர் வரும் என்றால், அதிகாரம் வர வர இந்த மனநாய் பற்றி என்ன சொல்வது?

மனதைப் பற்றிப் பேசினால், பச்சோந்தியில் ஆரம்பித்து இப்படித்தான் நாயில் வந்து முடியும். அந்த நாய் கடித்தால் ரேபிஸ் என்றால், இந்த நாய் கடித்தால் டெட் பீஸ்தான்.

கடைசியாக ஒரு காட்சி. மனம் எப்படி வேலை செய்கிறது என்பதற்கு ஒரு சாம்பிள்.  தெருவில் வசூல் பண்ணுகிறார்கள். எல்லா வீட்டிலும் கேட்பவர்கள் அந்த ஒரு வீட்டை மட்டும் ஸ்கிப் பண்ணுகிறார்கள். ஏனென்றால், அந்த வீட்டில் பந்தல் போடப்பட்ருக்கிறது. சாவு விழுந்த வீட்டில் வசூல் பண்ணக் கூடாது என்ற மனிதாபிமானம் இருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு வீட்டில் வசூல் பத்தாது என்று நாக்கைக் பிடுங்கிக் கொண்டு சாகும் அளவுக்குக் கேள்வி கேட்கிறார்கள். எரியும் வீட்டில் பிடுங்கும் வரைக்கும் ஆதாயம் என்ற சுயநலமும் இன்னும் இருக்கிறது. இதிலிருந்து நீங்கள் என்ன புரிந்து கொள்கிறீர்கள்?

மனம் ஒரு மிக்ஸி. எதைப் போட்டாலும் அரைக்கும். அதற்குத் தேங்காய் என்றோ மனித இதயம் என்றோ தெரியுமா என்ன? எதைப் போட்டாலும் அரைத்துத் தள்ளும்.

என்னைக் கேட்டால் இந்த உலகில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இயந்திரமும், மிருகமும் எது என்று கேட்டால், அது இந்த மனம்தான். உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

*****

No comments:

Post a Comment