9 Feb 2026

நீதிமான்கள் எனும் வில்லன்கள்!

நீதிமான்கள் எனும் வில்லன்கள்!

காலை நேரம். நிறையச் செய்யலாம், சாதிக்கலாம் என்று தோன்றுகிறது. எல்லாம் ஒரு நப்பாசைதான். இது காலை நேரத்துக்கே உள்ள ஸ்பெஷல். ஒரு காப்பி குடித்தால், உலகையேப் புரட்டி விட முடியும் என்று தோன்றுகின்ற பெப்பி டைப் ஆசை.

பொதுவாக மனதுக்குள் ஒரு தேவையற்ற ஸ்ட்ரெஸ். அது எவ்வளவு பெரிய ஸ்ட்ரெஸ்ஸாக இருந்தாலும் அதைக் காலை பொழுது அழித்து விடுகிறது. அந்த உற்சாகம் வடியத் தொடங்கும் போது, அது மெல்ல மெல்ல தலைதூக்கி இரவுக்குள் உச்சம் தொட்டு விடும். காலை அரும்பி பகல்லெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் – என்பாரே வள்ளுவர். அது அதுக்கும் பொருந்தும், இதுக்கும் பொருந்தும்.

இந்த ஸ்ட்ரெஸ்க்குப் பின்னால் இருக்கும் அந்த உண்மை தெரிஞ்சாகணும் சாமியை இன்று சிதறு தேங்காயாக்கினால்தான் சரிபட்டு வரும்.

செய்வது எதுவாக இருந்தாலும் அது சரியாக இருக்க வேண்டும், பெர்ஃபெக்ஷனாக இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் எனக்கு உண்டு. இப்போது அதையெல்லாம் தளர்த்திக் கொள்ள பழகிக் கொண்டு விட்டேன். வாஷிங் மெஷின் டெக்னாலஜி போல  எப்படி வருகிறதோ அப்படியே வரட்டும். அலட்டிக்கொள்வதில்லை. மெனக்கெடல்கள் போரடிக்கின்றன. எல்லாவற்றிலும் ஓர் இம்பெர்பெக்ட்டை பெர்பெக்டாகப் பேணுகிறேன். எப்படி லட்சியமாக இருந்து அலட்சியமாக இருப்பதைப் பிராக்டிஸ் பண்ணி அதில் வெற்றியும் பெற்று விட்டேன்.

நான் இப்படி என்றால், நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு விசித்திரமான டிசைன். நான் எதையோ தப்பு பண்ணுவதாக நினைத்துக்கொண்டு, எனக்குப் பாடம் எடுக்கக் கிளம்பிவிடுகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் நீதி போதிப்பதுதான். ஆனால், அவர்கள் தப்பு செய்திருக்கலாம் என்பதை மட்டும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

உண்மையில், இங்கே யாருக்கும் யாரும் அட்வைஸ் பண்ணத் தேவையில்லை. ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு ஜட்ஜ் இருக்கிறான். அந்த நீதி அவனுக்கானதல்ல, மற்றவனுக்கானது என்பதுதான் இதில் இருக்கும் ஒரே ட்விஸ்ட்.

பொதுவாக இந்த மனிதர்களுக்குப் பணத்தின் மேல் ஒரு தீராத தாகம். ஆசை மட்டும் இருந்தால் போதாது, அதைச் சம்பாதிக்க புத்தி வேண்டும். பொதுவாக இந்தப் பண விசயத்தில் பலருக்கும் ஆசை 1000 வாட்ஸ், ஆனால் அறிவு மட்டும் இன்னும் டியூப்லைட்.

அவர்கள் ஏன் சம்பாதிக்கவில்லை என்று நான் கேட்டதில்லை. அதுபோல அவர்களும் என்னை ஏன் இவ்வளவு சம்பாதிக்கவில்லை, அவ்வளவு சம்பாதிக்கவில்லை என்று கேட்காமல் இருப்பதுதானே தர்மம். தர்மம் எங்கே இங்கே வேலை செய்கிறது?

ஏன் ப்ளாட் வாங்கிப் போடவில்லை? இன்னும் இவ்வளவு நகை சேர்க்காமல் இருக்கிறாய்? அந்தப் பிளான், இந்தப் பிளான் என்று ஏகப்பட்ட ப்ளான்களைச் சொல்லி அதில் ஏன் இன்வெஸ்ட் செய்யாமல் இருக்கிறாய்? என்று ஏகப்பட்ட விசாரணைகள்.

இந்த விசாரணைகளில் மனம் பல நேரங்களில் வறண்டு போய் விடுகிறது. எங்கேயாவது ஓடி விடலாமா என்று தோன்றி விடுகிறது. அப்படிப் பல நேரங்களில் புத்தகங்களோடு ஓடியிருக்கிறேன்.

அதைப் படித்து முடித்ததும் ஆசுவாசமாக வீடு திரும்பி விடுவேன். அதன் பிறகு போங்கடா நீங்களும் உங்கள் விசாரணைகளும் என்று ஒரு மனசு தோன்றும் பாருங்கள். அது ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு நீடிக்கும். அதன் பிறகு என்ன என்கிறீர்களா? மீண்டும் புத்தகத்தோடு ஓட்டம் பிடிப்பதுதான் நடக்கும். இப்படி ஒரு லூப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

எல்லாருக்கும் இப்படி ஒரு லூப் இருக்கத்தான் செய்கிறது. இந்த விசயத்தில் மட்டும் பழகப் பழக பால் புளிக்காது, ஈயம் பித்தளையைப் போலப் பல்லை இளிக்காது.

ஊரில் இருப்பவர்கள் இதைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய் விட்டார்கள். அவனுக்கு இதே வேலையாப் போச்சு என்கிறார்கள். கிரகச்சாரம் என்கிறார் தெக்குடு தாத்தா.

*****

No comments:

Post a Comment