10 Feb 2026

ஓரிகாமி பண்ண வைக்கும் டிரை போல்ட் போன்கள்!

ஓரிகாமி பண்ண வைக்கும் டிரை போல்ட் போன்கள்!

மனிதர்களுக்கு மடிப்பதில் அலாதிப் பிரியம். காலையில் எழுந்ததும் போர்வையை மடிப்பதில் ஆரம்பிக்கும் இந்த விசயம், இடையிடையே எதையெதையோ மடித்து, அன்றைய இரவில் மறுநாளுக்கான ஆடைகளை மடித்து வைப்பது வரை நீளும்.

இந்த மடிப்பு விசயத்தைக் கொஞ்சம் கலை உணர்வோடு காகிதத்தில் செய்தால் அதுதான் ஓரிகாமி. அதையே ஸ்மார்ட்போனில் செய்தால் அது டிஜிட்டல் ஓரிகாமி. அதெப்படி, ஸ்மார்ட்போனை அப்படியெல்லாம் மடிக்க முடியுமா என்று கேட்டால், நீங்கள் டிஜிட்டல் உலகில் இன்னும் அப்டேட் ஆகாமல் இருப்பதாக அர்த்தம்.

சாம்சங் மூன்றாக மடிக்கும் ஸ்மார்ட்போனைக் கொண்டு வந்து விட்டது. விரைவில் அது உங்கள் கைகளுக்கு வந்து விடும். இனி உங்கள் போனை நீங்கள் கர்ச்சீப்பை மடித்து வைத்துக் கொள்வது போல மடித்து வைத்துக் கொள்ளலாம். ஸோ, உங்களுக்கான டிஜிட்டல் கர்ச்சீப் ரெடி.

சாம்சங்கின் அந்த டிரை போல்ட் போன் இருக்கிறதே, அதன் ஒரு மடிப்பை விரித்தால் அது ஸ்மார்ட் போன். இரண்டாவது மடிப்பை விரித்தால் டேப்லெட். மூன்றாவது மடிப்பை விரித்தால் மினி டிவி. அட்டகாசம்தான் போங்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், நீங்கள் மடிப்பைப் பிரிப்பதால் திரையில் மடிப்பு விழும் கோடுகள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாது.

சாம்சங் இவ்வளவு தூரம் போய் விட்டால், ஆப்பிள் சும்மா ஆப்பிளையா கடித்துக் கொண்டிருக்கும்? ஆப்பிள் ரஜினி ரகம். லேட்டாக வந்தாலும் செம லேட்டஸ்ட்டாக வரும்.

ஆப்பிளின் போன் பார்ப்பதற்குப் பவுடர் டப்பா போல இருக்கிறது. மடிப்பை மூடும் போதும் வரும் கிளிக் சத்தம் ஓர் ஆனந்த யாழை மீட்டுகிறது. அதற்காகவே அதை வாங்குவதற்கு ஒரு கூட்டம் அலைமோதும். நாமெல்லாம், அதை யாராவது வாங்கட்டும், அதை எட்ட நின்று கேட்டுக் கொள்வோம் ரகம்தான்.

இவ்வளவு அற்புதங்கள் இருந்தால் விலை? அதில் பாதி விலைக்கு மடிக்க இயலாத அட்வான்ஸ்ட் ஸ்மார்ட்போனை வாங்கி விடலாம்.

அப்புறம் கீழே விழுந்தால் அந்தப் போன் துடிக்கிறதோ இல்லையோ, உங்கள் இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கி விடும்.

குழந்தைகள் இருந்தால் அதை அப்படி இப்படி என்று மடித்துப் பிரித்து உங்கள் கையில் கைக்கு ஒன்றாகவோ அல்லது மொத்தத்தில் மூன்றாகவோ கொடுத்து விடும் சாத்தியங்களும் இருக்கின்றன.

அன்று டெலிபோனில் ஆரம்பித்தோம். பேஜரிலிருந்து செல்போனை நோக்கி நகர்ந்து இப்போது அதை மடித்துப் பேப்பராக்கும் அளவுக்கு வந்து விட்டோம்.

மனித மூளையும் இந்த போன்களைப் போலத்தான். நிறைய மடிப்புகள் இருந்தால் தான் புத்திசாலித்தனம். இந்தப் போன் மடிப்புகள் என்பது ஒரு டிஜிட்டல் ஜாலம்தான். நமக்கு போனை மடிக்க முடிந்தால் என்ன? மடிக்க முடியாவிட்டால் என்ன? பல் இருக்கிறவன் பக்கோடா தின்னட்டும் என்பது போல, காசு இருக்கிறவன் கரியாக்கிக் கொள்ளட்டும். டிரை போல்ட்டை டிரை செய்வது உங்கள் இஷ்டம்.

யாருக்காவது அதை வாங்கும் யோசனை இருந்தால், வாங்கிய பின் இதை முதலில் விகடபாரதி பிளாக்கில்தான் படித்தேன் என்று ஒரு ஸ்டேட்டஸ் மட்டும் போடுங்கள். அதனால், இன்னும் நான்கு பேர் நம் பிளாக்கை வந்து படித்தால் அந்தப் போனை வாங்கியதை விட எனக்கு குஷியாகத்தானே இருக்கும். உலகத்தில் தலைசிறந்த தர்மம் எதுவென்றால் மற்றவர்களைக் குஷிபடுத்தி மகிழ்வதுதானே!

*****

No comments:

Post a Comment