10 Feb 2026

கேள்வி இயந்திரங்களும் வதைபடும் காதுகளும்!

பேசும் மெஷின்கள்!

ஒரு சிலர் கேட்கும் கேள்விகளுக்கும், நடக்கும் விஷயங்களுக்கும் சம்பந்தமே இருக்காது. லாஜிக் பார்க்கத் தெரிந்தவர்களுக்கு இது ஒரு விசித்திரமான இம்சை. ஆனால் அந்த ஒரு சிலரைப் பொறுத்தவரை அது ஒரு சர்வைவல் டெக்னிக். ஒரு பொருத்தமில்லாத சூழலில் தன்னைப் பொருத்திக் கொள்ள அவர்கள் கண்டுபிடித்திருக்கும் ஆயுதம் இந்தக் கேள்வி மற்றும் அந்த கொழகொழ பேச்சு.

இதில் என்ன சிக்கல் என்றால், அவர்கள் அப்படிக் கேள்வி கேட்கும்போது சுற்றியிருப்பவர்களின் நிம்மதி அவுட் ஆகி விடும். சந்தோசம் குட்பை சொல்லி விட்டு டாட்டா காட்டி விடும். இதுதான் பிரச்னை.

சமீப காலமாக எனக்கு சில விஷயங்கள் ஸ்படிகம் போலத் தெளிவாகத் தெரிகின்றன. பொதுவாக அவர்களுக்குப் பேசுவது என்றால் ரொம்பப் பிடிக்கும். பேசி முடித்த அடுத்த நிமிடம், அவர்கள் ஜென் அல்லது தியான நிலைக்குப் போய்விடுவார்கள். அதைக் கேட்டவர்கள் நரகத்தின் வாசற்படியை ரீச் ஆகி விடுவார்கள்.

அவர்களுக்குத் தேவை ஒரு ஸ்பீக்கர் அல்ல, ஒரு ரிசீவர். அதாவது, காது கொடுத்துக் கேட்க ஒரு ஆள். அவ்வளவுதான். நீங்கள் அதைச் செய்து தர வேண்டும் என்கிற கட்டாயம் கூடக் கிடையாது. ஜஸ்ட், ம்... அப்புறம்… என்று கேட்டுக் கொண்டிருந்தால் போதும். ஆனால் அதுதான் கொடுமையும் சித்தரவதையும். அதற்குப் பதில் சித்திரகுப்தன் ஏட்டில் இடம் பெற்று எண்ணெய் கொப்பரையில் வேகலாம் என்பது போல இருக்கும். ரொம்ப கொடுமையான டாஸ்க்தான்.

உண்மையில் இது பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் பொருந்தும். அந்த ஒரு சிலரில் இருபாலரும் இருக்கிறார்கள். மனித மனங்கள் எல்லாமே ஒரு ஒன் வே டிராஃபிக் விரும்பிகள். தாங்கள் சொல்வதை இடையூறு இல்லாமல் யாராவது கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

அங்கேதான் சிக்கல் ஆரம்பிக்கிறது.

ஒவ்வொரு மனமும் ஒரு தனி ஐலேண்ட். ஒரு மனதின் நியாயம், இன்னொரு மனதின் பகுத்தறிவுக்கு அபத்தமாகத் தெரியும். நான் சொல்றது சரிதானே என்று அவர்கள் கேட்கும்போது, உங்கள் லாஜிக் மூளை இல்லை என்று சொல்லத் துடிக்கும். அங்கேதான் முரண்பாடு பிறக்கிறது. இப்படித்தான் மனிதர்கள் பேசிப் பேசியே தங்களை மற்றவர்களுக்குப் பிடிக்காதவர்களாக மாற்றிக் கொள்கிறார்கள்.

இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது.

அவர்கள் நினைப்பதையும், பேசுவதையும் கொட்டித் தீர்க்க மனிதர்கள் ஒன்றும் குப்பைத் தொட்டிகள் அல்ல. மனிதர்களை விட ஒரு சிறந்த ஊடகம் இருக்கிறது. அது எழுத்து.

காகிதத்திடம் நீங்கள் என்ன சொன்னாலும் அது எதிர்கேள்வி கேட்காது. அவர்களின் அபத்தங்களை அது ரசிக்கும். எழுத்தில் கிடைக்கும் அந்த ஆத்மார்த்தமான ஆறுதலும், அங்கீகாரமும் வேறு எதிலும் கிடைக்காது.

பேசிக் கசப்பதை விட, எழுதி ஆசுவாசப்படுவது புத்திசாலித்தனம். அந்த ஒரு சிலர் இதைச் செய்யலாம். அவர்கள் எழுதுவதுக்கு அலுப்புப்படுபவர்களாக இருந்தால், மனிதர்களைப் பலி கொடுப்பது தவிர்க்க முடியாது. செத்தான்டா சேகர் மொமென்டுக்கு யாராவது ஆளாகிச் சிக்கிச் சின்னாபின்னமாகத்தான் வேண்டும்.

இருந்தாலும் இந்தக் காலத்தில் பிரச்சனை இல்லை. எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்ள அலெக்ஸாக்கள் வந்து விட்டன. கொட்டித் தீர்ப்பவர்கள் அதனிடம் கொட்டித் தீர்க்கலாம். என்றாலும் அலெக்ஸாக்கள் வெடித்து விடாமல் இருக்க வேண்டும். தென்கொரியா என்று நினைக்கிறேன், அங்கே இந்த மனிதர்கள் படுத்திய பாட்டில் ரோபோட் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி வந்தது. அப்படி நேர்ந்து விடக் கூடாது! சாமியே சரணம்!

*****

No comments:

Post a Comment