வாழ்க்கை
வலைக்குள் ஆடும் நடனம்!
எல்லாம்
நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அப்புறம் அந்த ஒரு க்ளிக். இந்த வேகத்தோடு வேகமாக
இன்னொரு வேலையையும் முடித்து விடுவோம் என்று அதில் இறங்கப் போய் டிராபிக் ஜாம் ப்ளஸ்
ஆக்சிடென்ட். சிஸ்டம் ஹேங். கூடவே மனசும்.
புதிய
முயற்சிகளின் போது விபத்துகள் சகஜம். சறுக்காமல் மலையேற முடியாது. ஆனால், சறுக்கும்போது
அடிபடும் வலி இருக்கிறதே. அதுதான் ஒரு மாதிரியான மன உளைச்சலைக் கொடுத்துவிடுகிறது.
பிரச்னை
இதுதான். வேகம்.
மனம்
ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் போலச் செயல்படத் துடிக்கிறது. ஒளியின் வேகத்தில் காரியங்கள்
நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் யதார்த்தம் ஒரு மாட்டு வண்டி. இந்த வேகத்துக்கும்
விவேகத்துக்கும் நடக்கும் யுத்தத்தில், நிதானம் என்கிற லாஜிக் அடிபட்டுச் சாகிறது.
நடைமுறைக்குச் சாத்தியமில்லாத வேகத்தில் ஓட நினைப்பது, ஹைவேயில் ப்ரேக் இல்லாத காரை
ஓட்டுவது போன்றது. ஆபத்தானது.
இன்னொரு
விஷயம். முடிவுகள்.
யார்
எதைக் கேட்டாலும் சட்டென்று பதில் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயச் சட்டம் இருக்கிறதா
என்ன? மனிதன் ஒன்றும் கூகுள் தேடுபொறியோ, அல்லது தீர்ப்புச் சொல்லும் இயந்திரமோ கிடையாது.
ஒரு செகண்டில் அகண்டமாக முடியாது.
வெளியில்
விட்ட சொல், எய்த அம்பு. திரும்பப் பெற முடியாது. அதனால், சட்டென்று எதிலும் கருத்துச்
சொல்வதோ, சரி என்று தலையாட்டுவதோ புத்திசாலித்தனம் இல்லை. அது ஒரு முட்டாள்தனம். மோடுமுட்டித்தனம்.
கொஞ்சம்
நேரம் கொடுக்க முடியுமா? என்கிற அந்த நான்கு வார்த்தைகள் தரும் பாதுகாப்பு அலாதியானது.
ஒரு கதவைத் திறந்து, இன்னொது கதவை மூடி வைத்தே பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் பிறகு
யோசித்துப் பார்க்க இடம் இருக்கும்.
அடுத்த
ஒன்று. சூழல் தர்மம்.
எல்லா
இடத்திலும் ஒரே மாதிரியான பதிலைப் போட்டு எக்சாம் எழுத முடியாது. யுனிவர்சல் ஆன்ஸர்
என்ற ஒன்று கிடையவே கிடையாது. ஆளுக்கேற்ப, இடத்திற்கேற்ப, சூழலுக்கேற்ப பதில்கள் மாற
வேண்டும். இது சந்தர்ப்பவாதம் அல்ல, தவிர்க்க முடியாத எதார்த்தம்.
அடுத்து
வேறென்ன, வாழ்க்கைச் சுழலில் நாம் ஆடப் போகும் முறைதான்.
உண்மை
என்னவென்றால், நாம் ஒரு பெரிய வலையில் சிக்கி இருக்கிறோம். நம்மைச் சுற்றி ஒரு சூழல்
பின்னப்பட்டிருக்கிறது. அதில் சிக்கிக் கொண்டுதான் நாம் சுழன்றாட வேண்டும். தப்பிக்க
வழியில்லை. ஆனால் அந்த வலையிலேயே எப்படி அழகாக நடனம் ஆடுவது என்பதைக் கற்றுக்கொள்ளலாம்.
ஆடும் போது அதிக உணர்ச்சிவசப்படாமல், அளவான மகிழ்ச்சியோடு, நிதானமான தாளத்தோடு ஆடப்
பழகிக் கொள்ள வேண்டும். அதிரடி ஆட்டம் அல்லது உணர்ச்சிகர ஆட்டம் வலையைப் பிய்ந்துப்
போகச் செய்து பாதாளத்தில் தள்ளி விடும்.
மேற்படி
சங்கதிகள் அனைத்துக்கும் பேஸ் மனவிரைவு.
எனவே,
கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். சுழன்று ஆடுங்கள்.
நிதானம்
முக்கியம், பிகிலு.
ஓர்
அவசியமான பின்குறிப்பு என்னவென்றால், இந்தப் பிகில் என்ற வார்த்தைக்கும் அரசியலுக்கும்
எந்தச் சம்பந்தமும் இல்லை.
*****

No comments:
Post a Comment