13 Feb 2026

பிப்ரவரி 14 – இதயங்களின் பிசினஸ்!

பிப்ரவரி 14 – இதயங்களின் இன்ப்ளேசன்!

கத்திரி வெயிலுக்கும் பிப்ரவரி பதினான்குக்கும் ஓர் ஒற்றுமை  உண்டு. முதலாமவது பல்ஸைப் பதம் பார்க்கும். இரண்டாமவது பர்ஸைப் பதம் பார்க்கும்.

பிப்ரவரி 14 என்றால், ரோஜாப்பூவானது பங்குச் சந்தைக்குக் கிறுக்குப் பிடித்தது போல ஐம்பது ரூபாய்க்கு விற்கும். மறுநாள் அது அப்படியே மரண அடி வாங்கிய பங்குச் சந்தையைப் போல ஐந்து ரூபாய்க்கு விற்கும். இதற்கும் பணவீக்கத்திற்கும் மண்ணாங்கட்டி சம்பந்தம்தான்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், பூக்காரனும், சாக்லேட்காரனும், வாழ்த்து அட்டைக்காரனும் சேர்ந்து கண்டுபிடித்த மார்கெட் ஸ்ட்ராடஜியோ இந்த பிப்ரவரி 14 என்று எண்ண தோன்றும்.

இந்தப் பிப்ரவரி 14க்கு என்று சில எழுதப்படாத சட்டங்கள் இருக்கின்றன.

எங்கெங்கு காணினும் சிவப்புதான். அன்று சிவப்பு நிறம் கட்டாயம்.  அன்று நீங்கள் எதைப் பார்த்தாலும் சிவப்பு கண்ணாடி போட்டது போலச் சிவப்பாக இருக்கும். சிவப்புக் கண்ணாடி போடா விட்டாலும் சிவப்பாகத்தான் இருக்கும். சட்டை, சேலை, சுரிதார், கார், ஏன் இரத்தம் கூட சிவப்பாகத்தான் இருக்கும். இரத்தம் இயல்பாகவே சிவப்பு என்றுதான் சொல்லக் கூடாது. அன்று இந்த ஸ்பெஷலுக்காக இரத்தமும் சிவப்பாகத்தான் இருக்கும்.

அப்புறம் அந்த டெடி பியர். ஒரு வளர்ந்த பெண்ணுக்கு, பஞ்சு அடைக்கப்பட்ட ஒரு கரடி பொம்மையை எதற்குப் பரிசாகத் தருகிறார்கள் என்பது ஆண்டவனுக்கும், அந்தப் பாடாவதி பையனுக்குமே வெளிச்சம். அந்தக் கரடி எதற்கும் பயன்படாது, பீரோவில் இடம் பிடிப்பதைத் தவிர. பீரோவில் இடமில்லாமல் வெளியில் இடம் பிடித்தால் பாவம் புழுதி படிந்து போய், சீக்கு பிடித்த சிங்காரியைப் போல அழுக்கு மண்டிக் கிடக்கும்.

பிப்ரவரி 14 இல் எழுதப்படாத மற்றுமொரு விதி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சாப்பிட வேண்டும் என்பது. நார்மலாக கரண்ட் கட் ஆன வீட்டில் சாப்பிடுவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. வீட்டில் சாப்பிட்டால் பில் இருக்காது. கரண்ட் பில் செலவும் இருக்காது என்பது வேறு விசயம். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சாப்பிட்டால் பில் இருக்கும். இந்தக் காசுக்குப் பிடித்த கேடு, ஒரு வேறுபாடு.

காதல் என்பது பிப்ரவரி 14 இல் பூக்கும் பூ என்றால் பிப்ரவரி 15 என்பது அந்தப் பூவிற்கு அடியிலிருந்து குத்தும் முள்.

உண்மையான காதல் என்பது பிப்ரவரி மாதத்தில் வருமான வரியைக் கட்டி, மார்ச் மாத வீட்டு வாடகையை முடித்து, ஏப்ரல் மற்றும் மே மாத கத்திரி வெயிலை ஆபரில் ஏர்கூலலை வாங்கி முடித்துக் கொண்டு, சூன் மாத பள்ளிக்கூட பீஸை எல்லாம் செட்டில்மென்ட் செய்து, சூலை மாதத்தில் ஒரு லோனைப் போட்டு, ஆகஸ்ட்டில் அதற்கு இஎம்ஐ கட்ட முடியாமல், செப்டம்பரில் கிரெடிட் கார்டைத் தேய்த்து, அதற்கு வட்டி கட்ட முடியாமல் அக்டோபரில் நகையை அடகு வைத்து, நவம்பரில் தீபாவளிக்கு அண்டா, குண்டாவைச் சேட்டுக் கடையில் கொண்டு சேர்த்து, டிசம்பர் மழைக்கு இன்ஸ்டால்மென்டில் ஒரு படகை வாங்கி வைத்துக் கொண்டு, ஜனவரியில் வீட்டை மாற்றிக் கொள் என்று ஹவுஸ் ஓனர் சொன்னதும், அலைந்து திரிந்து ஒரு வீட்டைக் கண்டுபிடித்ததும் வரும் பாருங்கள் அடுத்த பிப்ரவரி, அப்போது ஓய்ந்து போய் உட்கார்ந்திருக்கும் போது, இதெல்லாம் லைப்ல சகஜம்தான் எனறு இருவரும் ஆசுவாசமாக ஒரு கோப்பைத் தேநீரை அருந்தும் போது, அப்பாடா என்று விடும் பெருமூச்சில்தான் வருகிறது.

இதைச் சொன்னால் வாழ்த்து அட்டை விற்காது, ரோஜாப்பூக்கள் வாடி விடும், சாக்லேட்டுகள் எக்ஸ்பயரி ஆகி விடும், டெடி பியர்கள் எல்லாம் ஆர்டிக் பிரதேசத்துக்கு ஓடி விடும். மேற்படி கம்பெனிகாரன்கள் எல்லாம் சேர்ந்து கேஸ் போட்டு விடுவான்.

இதையெல்லாம் தாண்டி, எனக்கு கிஃப்ட் எல்லாம் வேண்டாம், உன் அன்பு போதும் என்று லவ்வர் ப்ளவர் வாயால் சொன்னால், அதை அப்படியே நம்பிவிடக் கூடாது. அது ஒரு ட்ராப். அந்தப் பொறியில் விழுந்தால், அடுத்த பிப்ரவரி 14 க்கு முரட்டுச் சிங்கிளாக முறுக்கிக் கொண்டு நிற்க வேண்டியிருக்கும்.

கழுதை, எவ்வளவோ செலவாகிறது, ஒரு ரோஜாப்பூ கிடைக்காவிட்டாலும் கால் முழம் மல்லிகைப்பூவோடாவது வீடு போய் சேருங்கள். அதற்கும் முடியாவிட்டால் ரோட்டோரத்தில் பூத்திருக்கும் ஒரு செம்பருத்தி பூவையாவது பறித்துக் கொண்டு போய் விடுங்கள்.

மற்றபடி உங்களுக்கு பிப்ரவரி 14க்கு வாழ்த்துகள். இந்தச் செய்தி உங்களுக்குப் பிரயோஜனப்பட்டால் யாராவது 14 பேருக்கு ஷேர் பண்ணுங்கள். உங்கள் லவ் கைகூடும். ஆனால் உங்கள் லவ்வருக்குப் பண்ணி விடாதீர்கள். உங்கள் லவ் மூவ் ஆகி விடும்.

*****

No comments:

Post a Comment