துளியின்
பயணம்
ஏதோ
ஒன்று நிகழத்தான் போகிறது
விரைவில்
நிகழ வேண்டும் என்ற
அவசரம்
கலவரம் செய்கிறது
நிகழுமோ
நிகழாதோ
ஐயமே
தேவையில்லை
எல்லாம்
நிகழத்தான் போகின்றன
நிகழ்வதற்கே
சகலமும் உண்டாகின்றன
மற்றும்
உண்டாக்கப்படுகின்றன
எது
எப்போது நிகழும் என்பது சூட்சமம்
சூட்சமத்தை
அறிந்து
வயிற்றுப்
பசி போக்க நினைக்காதே
பசியால்
சாவாய் என்றா நினைக்கிறாய்
சாவு
ஆசையால் வருவது
அவசரத்தைத்
தூக்கிக் குப்பையில் போடு
உணர்ச்சிகளைத்
தூக்கித் தூர எறி
அவசரமும்
உணர்ச்சியும் அழிவின் சக்திகள்
ஆரம்பத்தில்
அள்ளித் தருபவை
முடிவில்
அழித்து விட்டு வேடிக்கை பார்ப்பது தெரியுமா
வேக
மாற்றம் இல்லை என்பதற்காக
மாற்றம்
இல்லையென்று ஆகாது
மெதுவாக
நிகழ்வதால் நிகழாமல் போகாது
தீவிரம்
திசை மாற்றிப் பார்க்க வைக்கும்
பொறுத்திருப்பது
குறுகிய பார்வைகளை அழித்து விடும்
பொறுமை
மாபெரும் கடினம்
பொறுமையைப்
பயின்றால்
பொறுமை
புரிந்தால் எல்லாம் நிர்சலனம்
சுவாரசியங்கள்
ஒரு நாள் செத்து விடும்
சலிப்பு
எந்நாளும் நிலைத்திருக்கும்
வரைமுறை
எதற்கும் உதாவது
அணுகுமுறை
ரசவாசதம் செய்யும்
மனிதச்
சார்பு சல்லித்தனமானது
இன்று
கடிகாரத் திசையில் சுழலும் நாக்கு
நாளை
எதிர்த் திசையில் சுழலும்
நாக்கைப்
பதிவு செய்ய நினைத்தால்
வரலாற்றின்
துர்நாற்றம் தாங்க முடியாது
காகிதப்
பதிவுகளில் வடிகட்டிகள் அதிகம்
எண்மப்
பதிவுகளைப் பார்
தோண்டத்
தோண்ட ஊறும் சாக்கடை
மையம்
நீதான்
உன்னைச்
சுற்றி உலகம் சூழல்கிறது
நீ
உலகைச் சுற்றிச் சுழல்கிறாய்
யாருக்கு
யார் மையம் எனக் குழம்பும் போது
நீ
இன்னும் அற்புதமாகச் சுழல்வாய்
அச்சிற்குக்
கிறுக்குப் பிடிக்கும் போது
உன்
சக்கரம் சுழலும்
மாற்றிக்
கொண்டே போனால்
முடிவில்
என்ன இருக்கும்
ஆரம்பத்தில்
என்ன இருந்தது
விந்தின்
செம்பாகமும் அண்டத்தின் செம்பாகமும்
துளியில்
பிறந்து முடிவில் சாம்பலின் துளியாவாய்
*****
No comments:
Post a Comment