7 Jan 2025

கல்வியை வசப்படுத்த ஔவை கூறும் சூத்திரம்!

கல்வியை வசப்படுத்த ஔவை கூறும் சூத்திரம்!

கல்வியை நடத்தை மாற்றம் என்பர் கல்வியாளர்கள்.

எத்தகைய நடத்தை மாற்றத்தை உருவாக்க வேண்டுமோ, அதை பழக்கப்படுத்த வேண்டும். அதை ஒழுக்கமாகக் கற்பிக்க வேண்டும்.

கல்வியை வசப்படுத்துவதற்கான சூத்திரம் இதில்தான் ஒளிந்திருக்கிறது. அதை ஔவையார் பட்டவர்த்தனமாகப் பின்வரும் செய்யுளில் போட்டு உடைக்கிறார்.

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்.”

என்பது ஔவையாரின் பாட்டு.

பாட பாட ராகம், மூட மூட ரோகம், போட போட கணிதம் என்பார்கள்.

ஓவியமானது தொடர்ந்து வரையும் பழக்கத்தால் சிறப்படைகிறது. தொடர்ந்து வரையும் பழக்கமுள்ளவர்கள் எப்படிப்பட்ட ஓவியத்தையும் அசாதாரணமாக வரைவார்கள். ஓவியத்தில் ஆர்வமில்லாத ஒருவரைக் கூட, தொடர்ந்து வரையச் செய்து, மீண்டும் மீண்டும் பல ஓவியங்களை எழுதச் செய்து அவரை ஓவியத்தில் விற்பன்னர் ஆக்கி விடலாம்.

செந்தமிழானது தொடர்ந்து உரையாற்றும் பழக்கத்தால் சிறப்படைகிறது. தொடர்ந்து ஓதியும் உரைத்தும் பழக்கமுள்ளவர்கள் அற்புதமாக உரை நிகழ்த்துவார்கள். பேசுவதில் ஆர்வமில்லாத ஒருவரைக் கூட, மீண்டும் மீண்டும் பேசுவதில் பயிற்சியளித்து அவரைப் பேசுவதில் வல்லவராக ஆக்கி விட முடியும்.

நடைப்பயிற்சியும் தொடர்ந்து நடக்கின்ற பழக்கத்தால் சிறப்படைகிறது. என்றோ ஒரு நாள் சற்று தூரமாக நடப்பவர்கள் காலை வலிக்கிறது என்று சொல்வதன் காரணம் இதுதான். தொடர்ந்து நடக்கும் பழக்கம் உடையவர்கள் நீண்ட தூரம் அசராமல் நடப்பார்கள். கால் வலி, உடல் வலியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடக்க, நடப்பதில் பழக்கம் வேண்டும். இந்த விடயத்திலும் பழக்கப்படுத்தி நடப்பதில் ஆர்வமில்லாதவரையும் அற்புதமாக நடக்கச் செய்து விடலாம்.

இந்த நடை என்பதற்கு மற்றுமொரு பொருளாக எழுத்து நடை என்பதையும் கொள்ளலாம். அழகு தமிழில் அற்புதமாக எழுதும் ஆற்றல் கைவரப் பெறாதவரையும் தொடர்ந்து எழுதுவதற்குப் பழக்கப்படுத்தி அற்புதமான எழுத்து நடை கொண்ட எழுத்தாளராக அவரை மாற்றி விட முடியும்.

அதே வரிசையில் கல்வியானது மனனம் செய்யும் மனப்பழக்கத்தால் சிறப்படைகிறது. மீண்டும் மீண்டும் வாசிக்கும் மனப்பழக்கம் கற்ற கல்வியை புதியதொரு பரிமாணத்துக்குக் கொண்டு செல்கிறது. படிப்பதில் ஆர்வமில்லாதவரையும் கூட மீண்டும் மீண்டும் படித்து ஒப்புவிக்க செய்யும் மனப்பழக்கத்தால் கல்விமானாகச் செழிக்கச் செய்து விட முடியும். அநேகமாகப் பெரும்பாலான கல்விக்கூடங்கள் இந்த ஒரு முறையை மட்டுமே பயன்படுத்தி, மதிப்பெண்களைக் குவிக்கும் மாணவர்களை உருவாக்கும் நிலைக் காணப்படுவதையும் மறுக்க முடியாது.

தற்போதைய கல்வி முறையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றத்தால், மனனத்தை விட திறன் சார்ந்த நிலைக்கு முக்கியத்துவம் தரப்பட்டாலும், மனனம் என்பதும் திறனே.

மன ஓர்மை இல்லாமல் மனனம் சாத்தியமில்லை. மீண்டும் மீண்டும் படித்து பொருள் புரியாமல் நெட்டுரு செய்யும் முறையை மறுக்கலாமே தவிர, கற்ற கருத்து மனதில் பதிய வேண்டும் என்ற கருத்தை மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் கற்றபின் நிற்க அதற்குத் தக என்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடும். எந்த அளவுக்குக் கற்ற கருத்து மனதில் நிற்கிறதோ, அந்த அளவுக்குக் கல்வியானது சிறப்படைகிறது. அதற்கு மனப்பழக்கம் உதவுகிறது.

ஓவியம், செந்தமிழ், நடை ஆகியவற்றைப் பழக்கத்தால் வளர்க்க இயலும், செழுமைப்படுத்த முடியும் என்று சொல்லும் ஔவையார் நட்பு, தயை, கொடை ஆகியவற்றைப் பழக்கத்தால் வளர்க்க முடியுமா என்று கேட்கிறார். அவை பிறவிக் குணங்களாக வர வேண்டும். அதாவது இயல்பாக ஒருவருக்கு அப்படிப்பட்ட குணங்கள் வர வேண்டும் என்கிறார். பழக்கப்படுத்தி அவற்றைத் திணித்து விட முடியாது என்கிறார். இது போன்ற விசயங்களைப் பழக்கப்படுத்துவதன் மூலமாக மட்டும் உருவாக்கி விட முடியாது.

ஆர்வமில்லாதவரைக் கட்டாயப்படுததிப் பழக்கப்படுத்தி நட்பு, தயை, கொடை போன்ற குணங்களை உருவாக்கி விட முடியாது. அக்குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் ஒருவர் உள்ளூர விரும்பினால் மட்டுமே, அவற்றை வளர்த்துக் கொள்ள முடியும். சித்திரம், செந்தமிழ், நடை போன்ற விசயங்களில் செய்யும் திணித்தலை இந்த விடயங்களில் செய்ய முடியாது என்பதுதான் ஔவையார் கூற வரும் செய்தியாகும்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...