சிறியவர், பெரியவர் – ஔவையின் துலாக்கோல்!
ஔவையாரின்
தனிப்பாடல்களில் இருப்பது தனிச்சுவை.
பல ஔவையார்கள்
இருந்ததாக ஆய்வறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எத்தனை
ஔவையார்கள் இருந்திருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் தனிச்சுவையுடன் செய்யுள்களைப்
படைத்திருக்கிறார்கள். சொல்ல வரும் கருத்துகளைப் பொட்டில் அடித்தாற் போல, வெட்டு ஒன்று,
துண்டு இரண்டு என்பது போலப் போட்டு உடைத்திருக்கிறார்கள்.
“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.” (குறள், 26)
என்பார்
வள்ளுவர். இது பெரியவர், சிறியவர் பற்றிய வள்ளுவரின் துலாக்கோல். அதென்ன துலாக்கோல்
என்கிறீர்களா? அதுதான் தராசு. “சமன்செய்து
சீர்தூக்கும் கோல்” (குறள், 118) என்று
வள்ளுவர்சொல்கிறாரே, அந்தத் தராசுதான்.
செய்தல்
என்பது சாதாரணமா?
சொல்லுதல்
என்பது எளிது.
செய்தல்
என்பது அரிது.
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.” (குறள், 664)
என்கிறாரே
வள்ளுவர்.
எல்லாராலும்
சொல்வதை எல்லாம் செய்துவிட முடியுமா?
சொன்னதைச்
செய்பவர்கள்தான் பெரியவர்கள்.
சொன்னதைச்
செய்யாதவர்கள் சிறியவர்களா? என்றால் ஔவையார் ஒருபடி தாண்டிச் செல்கிறார். சொன்னதைச்
செய்யாதவரைக் கயவர் என்கிறார்.
பெரியவர்கள்
விடயத்திலும் அதே தாண்டல்தான் ஔவைக்கு. பெரியவர்கள் சொல்லாமலே செய்வர். சொல்லிச் செய்தால்
அவர்களென்ன பெரியவர்கள்? அவர்கள் சிறியவர் என்கிறார் ஔவையார். அப்படிச் சொல்லியும்
செய்யாதவர் கயவரே என்கிறார்.
அரசியல்வாதிகள்
அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்கிறார்கள். ஒன்றையும் செய்தபாடில்லையே. அவர்களை
என்ன சொல்வது என்று கேட்கிறீர்களா? இது குறித்தெல்லாம் ஔவைக்கு முன்பே தெரிந்திருக்கிறது
பாருங்களேன்.
கயவர்கள்
பற்றித் திருவள்ளுவர் ஒரு அதிகாரமே இயற்றியிருக்கிறார். கயமை என்பது அந்த அதிகாரத்தின்
தலைப்பு. பொருட்பாலின் கடைசி அதிகாரம் அதுதான். 108வது அதிகாரம்.
அந்த
அதிகாரத் தலைப்பை வைத்து மு.வரதராசனார் ஒரு புதினத்தையே எழுதியிருக்கிறார்.
காலந்தோறும்
கயவர்கள் பற்றிப் புலவர்கள் எழுதியென்ன? கயவர்கள் திருந்தவில்லை. அதற்காகப் புலவர்களும்
மனம் வருந்தவில்லை. தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.
பெரியவர்
– சிறியவர் – கயவர் என்பதற்கு ஔவை கூறும் உவமையும் தனிச்சுவை உடையது. ஔவையின் சிறப்பே
அதுதான். இப்படி உவமை காட்டும் விசயத்தில் ஔவையை அடித்துக் கொள்ள ஆளில்லை என்றே சொல்லலாம்.
பலாவையும்
மாவையும் பாதிரியையும் உவமை காட்டுகிறார் ஔவை.
பலா
பூக்காமல் காய்க்கும்.
மா பூத்துக்
காய்க்கும்.
பாதிரி
பூத்துக் காய்த்தாலும் பலன் இருக்காது.
இதை
ஔவை எப்படிச் சொல்கிறார் என்பதை நீங்களே பாருங்களேன். அதுவும் அவர் வார்த்தைகளில்.
எத்தனை ரத்தினச் சுருக்கம். அதற்குள் எத்தனை கருத்துகளின் நெருக்கம்.
“சொல்லாம லேபெரியர் சொல்லிச் சிறியர்செய்வர்
சொல்லியும் செய்யார் கயவரே – நல்ல
குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடின்
பலாமாவைப் பாதிரியைப் பார்.”
*****
No comments:
Post a Comment