நல்வாழ்க்கை
நல்ல வாழ்க்கையை
அமைத்துக் கொடுத்து விட்டதாகப்
பெருமிதப்படும் அப்பாக்களிடம்
கடைசி வரை
எதையும் சொல்வதில்லை
மணமானப் பிறகு
புன்னகைப்பதைத்
தொலைத்து விடும்
மகள்கள்!
*****
காத்திருப்பு
வாசலிலே
காத்திருக்கிறது
வெளியே போகலாம் என
பத்து நாள்களுக்கு முன்
மரணித்த
தாத்தாவின் செருப்பு!
*****
காட்சிகள்
நொடிக்கொரு தரம்
சேனல்
மாற்றிக் கொண்டிருக்கும்
ரிமோட்டிற்குத் தகுந்தபடி
அலுக்காமல்
காட்சிகளைக்
கொட்டிக் கொண்டிருக்கின்றன
தொலைக்காட்சிகள்!
இமைகளை மூடியபடி
எதைப் பார்ப்பதென்ற
குழப்பத்தில்
குழப்பத்தையே
வெறித்துப் பார்த்துக்
கொண்டிருக்கின்றன
கண்கள்!
*****
No comments:
Post a Comment