14 Nov 2024

ஒரு வார்த்தை விசாரிப்பதில் என்ன குறைந்து விடப் போகிறது?

ஒரு வார்த்தை விசாரிப்பதில் என்ன குறைந்து விடப் போகிறது?

இந்த உலகில் எதுவும் பழையது இல்லை. எல்லாம் புதுமையானதுதான். புதுமையாக இருக்கும் ஒன்றை நாம் பழையதாக மாற்றி விடலாம். நம் பராமரிப்பில் உள்ள பொருட்களை அன்றாடம் பயன்படுத்துவதாலும், அதைத் தூய்மை செய்ய வைப்பதாலும் பொருட்கள் எப்போதும் புதுமை மாறாமல் அப்படியே இருக்கும். புதிதாக வாங்கும் பொருளை விட அன்றாடம் பயன்படுத்தித் தூய்மை செய்து வைக்கும் பொருட்களின் பளபளப்பு தனித்துத் தெரியும். நமது பராமரிப்பும் பயன்பாடும் எந்தப் பொருளையும் பழையதாக்க விடாது.

பழைய மிதிவண்டி ஒன்றை விற்று விட்டு புதிய மிதிவண்டி ஒன்றை வாங்கலாம் என்று நினைத்தோம். என்ன விலைக்குப் போகும் என்று விசாரித்த போது தற்போதைய விற்கும் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலைதான் கிடைக்கும் என்றார்கள். தொகையில் சொல்வதென்றால் 1700 லிருந்து 2000 க்குள் ஒரு விலை கிடைக்கும் என்றார்கள். 

அப்படியானால் பழைய வண்டியைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்து பழைய மிதிவண்டி ஒன்றை மிதிவண்டி பழுது பார்க்கும் கடை ஒன்றில் விட்டோம். அதைப் புதுப்பித்த போதுதான் அதற்கு ஆன கட்டணம் 2000 ரூபாயை நெருங்கியதை அறிந்தோம். என்ன விலைக்கு அந்த வண்டி விலை போகுமோ அதே விலைக்கு புதுப்பிக்கும் செலவைக் கொண்டு வந்திருந்தார் மிதிவண்டியைச் சரிசெய்பவர். அவர் வண்டியின் டயர், டியூப்புகளை மாற்றியிருக்க வேண்டியதில்லை. மாற்றியிருந்தார். நல்ல பாகங்கள் பலவற்றையும் உருவி புதிய பாகங்கள் போட்டிருந்தார்.

எங்கள் பக்கத்துத் தவறு என்னவென்றால் எவ்வளவு செலவு ஆகும் என்று ஒரு வார்த்தையாவது கேட்டிருக்க வேண்டும். என்ன பெரிதாக ஆகப் போகிறது? ஆயிரத்திற்குள்தான் ஆகும் என்று அலட்சியமாக நாங்களே ஒரு கணக்கிட்டுக் கொண்டது தவறாகப் போய் விட்டது. அவர் இஷ்டத்துக்கு வண்டியில் உள்ள ஏகப்பட்ட பாகங்களை மாற்றி அவருக்குக் கூலியாக அறுநூறு ரூபாயைப் போட்டு விட்டார். எல்லாம் சேர்த்து இரண்டாயிரம் வந்து விட்டது. எதற்கும் உத்தேச செலவு எவ்வளவு ஆகும் என்பதை முன்கூட்டியே கேட்டிருக்க வேண்டும் என்ற அனுபவத்தை இது தருகிறது.

செலவினக் கணக்கைக் கேட்பதோ, ஒரு பொருளின் விலை என்னவென்று விசாரித்து விட்டு வாங்குவதோ ஆரம்பத்தில் எங்களுக்குக் கூச்சமும் தயக்கமும் தருவதாகத்தான் இருந்தது. இது நாங்கள் பழகிய பழக்கத்தால் நாங்களே ஏற்படுத்திக் கொண்டது என்பதும் புரிந்தது. படிப்படியாகத் தற்போது பொருளின் விலையைக் கேட்டு விட்டு வாங்கும் பழக்கத்தை இப்போது உருவாக்கிக் கொண்டு விட்டோம். அதே போல ஒரு வேலையைச் செய்வதென்றால் உத்தேசமாக அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைக் கேட்டு வாங்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டு விட்டோம். உண்மையில் அவ்வளவுதான் செலவாகுமா என்பதை விவரம் அறிந்த நான்கைந்து பேரிடம் விசாரித்துப் பார்க்கும் பழக்கத்தையும் வளர்த்துக் கொண்டு விட்டோம். இது பல வகைகளில் எங்களுக்கு உதவுகிறது. ஒரு பொருளின், ஒரு வேலையின் உண்மையான மதிப்பை அறிந்து கொள்ள உதவுகிறது. உங்களுக்கும் இந்தப் பழக்கம் நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...