3 Oct 2026

வடையும் ஓட்டையும்

பொய்யான வாக்குறுதிகளையும், நடக்காதவற்றை நடக்கும் என்று கூறுபவர்களை வடை சுடுபவர் என்று சொல்கிறோமே, இதை பொய்யா மொழியோடும், சொன்னது சொன்னபடி நடந்து காட்டி வடை சுட்டு பிழைக்கும் ஒருவர் எப்படி எடுத்துக் கொள்வார்?

வெறெப்படி நினைப்பார்? இந்த அரசியல் பிழைப்புக்கு வடை சுடும் பிழைப்பு எவ்வளவோ மேல் என்றுதான். அத்துடன் தான் சுடும் வடையில் வடைக்கு நடுவில் சிறு ஓட்டை இருக்கும், அரசியல்வாதிகள் சுடும் வடையில் சிறு ஓட்டைக்குள் நடுவேதான் அந்த வடை எங்கே இருக்கிறது என்று தெரியாமல் இருக்கும் என்றும் நினைத்துக் கொள்வார்.

*****

அரசியல்வாதிகள் உண்மையை மட்டும் சொன்னால் என்னவாகியிருக்கும்?

அரிச்சந்திரனுக்கு என்று ஒரு புராணம் இருப்பது போல ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஒரு புராணம் எழுத வேண்டி வந்திருக்கும். அப்படியெல்லாம் புலவர்களைக் கஷ்டபடுத்த எந்த் அரசியல்வாதிக்கு மனம் வரும் சொல்லுங்கள்! அத்துடன் அரிச்சந்திரனின் புகழும் மங்கிப் போய் நம் அரசியல்வாதிகளின் புகழ் பொங்கியல்லவா போயிருக்கும்!

*****

சமீபத்தில் கேட்ட சுவாரசியமான கேள்வி ஒன்று…

நான் : யாருமே இல்லாத கடையில் யாருக்கு மாஸ்டர் டீ ஆத்துறீங்க?

மாஸ்டர் : எனக்குத்தான்.

*****

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?

நமக்கு ஒரு ஆப் (App) தேவையென்றால் இன்ஸ்டால் செய்து கொள்கிறோம், தேவையில்லை என்றால் அன்இன்ஸ்டால் செய்து கொள்கிறோம் இல்லையா! அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆப்பில் நிரந்தர ஆப் என்றோ, தற்காலிக ஆப் என்றோ எதுவும் இல்லை. நிரந்தர ஆப் தற்காலிக ஆப்பாகலாம். தற்காலிக ஆப் நிரந்தர ஆப்பாகலாம். ஆப்புக்கே இப்படியென்றால் ஆளாளுக்கு ஆப்பு வைக்கும் அரசியல் பற்றிச் சொல்லவா வேண்டும்?

*****

No comments:

Post a Comment