3 Oct 2026

மாலைத் துயரும் மயங்கும் உயிரும்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 55

மாலைத் துயரும் மயங்கும் உயிரும்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இதே அலுவலகத்தில் இரண்டாவது மாடியில் வைத்து முதன் முறையாக அவளைப் பார்த்தது. அவள் வேலையில் சேர்ந்த முதல் நாள். கையில் மெல்லிய கண்ணாடி வளையல்களின் சிணுங்கல்கள். கைபேசியில் பேசிக்கொண்டே லேசாகச் சிரித்தாள்.

அந்தச் சிரிப்பு அவன் நெஞ்சின் ஆழத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிட்டது.

அது காதலா? அல்லது சாதலா? அந்த இரண்டுமாக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் இப்போது அது ஒரு வகையான மனநோயாக மாறிவிட்டது அவனுக்கு.

அதிலும் ஒரு நாளின் காலை, மதியம் வேலைகள் கூட பரவாயில்லை. மாலை வந்தால் போதும். அவனால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. ரத்த அழுத்தம் மளமளவென்று ஏறிவிடும். நினைவுகள் சுழன்றடிக்கும்.

அவன் பார்த்துக் கொண்டிருந்த கோப்புகளிலிருந்து கண்களை எடுத்து கடிகாரத்தைப் பார்த்தான்.

சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் கிண்டலாகச் சிரித்தது, கடந்த பதினெட்டு மாதங்களாக இதே நேரம்தான் என்பது போல.

அறைக்கதவு தட்டப்பட்ட சத்தத்தில் நிகழ்காலத்திற்கு வந்தான் அவன். அவள் நின்றிருந்தாள். கோப்புகளை ஏந்தியிருந்த கைகளில் அந்த மெல்லிய கண்ணாடி வளையல்கள் வழக்கம் போலக் அவனது துயரம் தெரியாமல் குலுங்கின.

அந்தச் சத்தம் காதலின் மெல்லிசை என்பதை விட, ஏதோ ஒரு மரண தண்டனைத் தீர்ப்பின் கடிகார ஓசையைப் போல அவன் மண்டைக்குள் எதிரொலித்தது.

"இத கொஞ்சம் சீக்கிரம் முடிக்க முடியுமா? நான் பார்த்துட்டேன். உங்கப் பிரிவுலதான் இன்னும் கொஞ்சம் தகவல்கள் தேவைப்படுது. பார்த்துக் குறிப்புகள எழுதிட்டீங்கன்னா இந்த எல்லா கோப்புகளுமே கண்காணிப்பாளர் மேசைக்குப் போயிடும்."

இப்போதெல்லாம் கோப்புகள் தரும் குத்தல், குடைச்சலை விட அவளின் காதல் தரும் குத்தலும் குடைச்சலும் அவனுக்கு அதிகமாக இருந்தது.

"இன்னும் அரை மணி நேரத்துல இதெல்லாம் போக வேண்டிய இடத்துக்குப் போயிடும்." அவன் கோப்புகளை வாங்கிக் கொண்டான்.

அவள் கிளம்பி விட்டாள்.

காதலிப்பது எளிது, ஆனால் அதை ஊருக்குத் தெரியப்படுத்த மடலேறுவது இருக்கிறதே, அது தமிழ் இலக்கியம் அந்தக் காலத்திலிருந்து வைத்திருக்கும் மிகச் சிறந்த உளவியல் சித்ரவதை.

ஆம். மடலூர்தல் என்பது காதலுக்கான ஓர் அற்புதமான தண்டனைச் சடங்கு!

பனை ஓலையால் குதிரை செய்து, அதன் மீதேறி, அவள்தான் என் காதலி என்று ஊர் நடுவே தலைவிரி கோலமாக உட்கார்ந்து ஒப்பாரி வைக்க வேண்டும்.

அதன் இறுதியில் காதல் ஜெயிக்கிறதோ இல்லையோ, ஊர் மக்களுக்கு ஒரு நல்ல வார இறுதிப் பொழுது அவன் மூலமாக உறுதி செய்யப்பட்டுவிடும்.

வழக்கம் போல மாலை வந்தால் கோப்புகளோடு வருவதும், கிளம்புவதும் என அவள் இப்போதும் சென்றுவிட்டாள். ஆனால், அவளது அந்த வளையல் சத்தமும், காதல் துயரும், மடலேற தூண்டும் எண்ணமும் இனி அவனை நிம்மதியாகத் தூங்க விடப் போவதில்லை. திருவள்ளுவர் அன்றே சொல்லி விட்டார்.

"தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

மாலை உழக்கும் துயர்."                             (குறள், 1135)

ஐந்து நிமிடம் கண்களை மூடி அப்படியே ஒரு தியான நிலையில் அமர்ந்திருந்தால், ஓர் அமைதி கிடைக்காமலா போய் விடும் என்று ஒரு முயற்சியைச் செய்து பார்த்தான். ஆனால், கண்களை மூடிய உடனே, அந்த வளையோசை காதுக்குள் நச்சரித்தது.

மடலூரலாமா? என்ற கேள்வி அவனைக் கொத்துக் கொத்தாகப் பிடுங்கித் தின்றது.

இந்தக் காலத்தில், அதுவும் இந்த நவீன உலகில் மடலூர்தல் என்றால் என்ன அர்த்தம்? அவளது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போய் தினமும் அழுது வடிவதா? அல்லது அலுவலக வாசலில் வெட்கத்தை விட்டு மண்டியிடுவதா? அல்லது பேஸ்புக்கில் போய் புலம்புவதா? அல்லது வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விடுவதா?

"சே! பைத்தியக்காரத்தனம்! காதல் என்பது ஒரு தற்காலிக மனநிலை. சீக்கிரம் சரியாகிவிடும். நான்தான் பழகிக்கொள்ள வேண்டும்." என்று பதினெட்டுத் திங்களாகச் சொல்லிக் கொள்ளும் அதே ஆறுதலை தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் அவன். 

இன்று அந்த ஆறுதல் அவனை ஆற்றுப்படுத்துவதாகத் தெரியவில்லை. மடலூர்கிறாயா? அல்லது இந்த அலுவலகத்தின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதிக்கிறாயா? என்று அவன் மனம் அவனை அச்சுறுத்தியது.

மாடியிலிருந்து குதித்து உயிரை விட்டு விட்டால், அவளோடு வாழ்வது எப்படி?

மடலூர்தலே சரி என்ற முடிவுக்கு வந்தவனாய், மடலூர்தல் என்றால், பனைமரம், பனையோலைக்கு எங்கே போவது, என்று யோசித்தவன் ஒரு நொடி குழம்பித்தான் போனான்.

ஊரில் இருக்கும் அத்தனை பனைமரங்களும் அரசியல் கூட்டங்களுக்காகவும் நெடுஞ்சாலைகளின் விரிவாக்கத்திற்காகவும் வெட்டி சாய்க்கப்பட்ட பிறகு, இப்போது இருப்பதெல்லாம் பெரிய பெரிய ப்ளக்ஸ் போர்டுகள் எனும் பதாகைகள் மட்டும்தான்.

ஆக, அவள் வசிக்கும் செம்மொழி நகரில் தன் காதலை வெளிப்படுத்துவது போல தலைவர்களுக்கும் நடிகர்களுக்கும் வைப்பதையெல்லாம் விட மிகப்பெரிய பதாகை வைப்பதென முடிவுக்கு வந்தான் அவன்.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment