5 Oct 2026

ஆழ்கடலின் சுனாமி ராகம்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 57

ஆழ்கடலின் சுனாமி ராகம்!

அந்த அந்தி மாலையின் மெல்லிய குளிர், மகிழ்வுந்தின் ஜன்னல் கண்ணாடியில் சிறு நீராவியைப் படரவிட்டிருந்தது. அந்த டொயோட்டோ க்ளான்ஸா மகிழ்வுந்தின் உள்ளே, ஒலிப்பானில் இளையராஜாவின் மெல்லிசை மிக மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது.

அவளது முகத்தில் அப்பியிருந்த அந்த அமைதி பலத்த சூறாவளிக்கு முந்தைய அமைதியைப் போல இருந்தது. அவளது மௌனம் சாதாரணமானதல்ல; அது ஆயிரமாயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்டம்.

அவள் அருகில் அமர்ந்திருந்தாள் அவளது தோழி.

மகிழ்வுந்து பரபரப்பான சாலையில் நின்றது. சிவப்பு விளக்கு. அவள் விரல்கள் ஸ்டீயரிங் சக்கரத்தின் மீது மென்மையாகத் தட்டின. எதையோ யோசித்துக்கொண்டிருந்தவளிடம் பேச முயன்றாள் தோழி. "என்ன இவ்வளவு அமைதியா இருக்க? உன் மனசுல என்னதான் ஓடுது?"

அவள் தோழியின் பக்கம் மெல்லத் திரும்பினாள். அவளது விழிகளில் ஒரு விவரிக்க முடியாத வசீகரம், ஒரு காந்த சக்தி இருந்தது. அவளது உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்து மறைந்தது.

"ஒரு குறள் நினைவுக்கு வந்தது." என்றாள். அவளது குரல் ஒரு தேன்கூடு போலக் கசிந்தது.

"என்னது அது?"

"கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணின் பெருந்தக்க தில்."                 (குறள், 1137)

"அப்படின்னா?"

"காதலோட வலியைத் தாங்காம, காதலர்கள் பனைமட்டையால செய்யப்பட்ட குதிரையில ஏறி, ஊருக்கு நடுவுல வந்து தன் காதலைச் சொல்லி ஒப்பாரி வச்சு, கதறி அழுது, ஊரைக் கூட்டுவாங்களாம். சமூகம் என்ன சொல்லும்ங்கிற பயத்தை விடுத்து, காதலுக்காகப் பித்துப் பிடிச்சு அலையுற அந்த நிலைமைய நினைச்சுப் பாரேன். ஆனா அதுல எவ்வளவு பெரிய பலவீனமும் கையாலாகத்தனமும் இருக்கு பாரு. ஆனா, ஒரு பெண்ணால அப்படி முடியுமா?"

அவள் சொன்ன அந்த வார்த்தைகள் தோழியின் நெஞ்சில் ஒரு கணம் சுரீர் என்றன. அவளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் தீராத காமத்தின் கடலைப் பற்றி நன்கறிந்தவள் அந்தத் தோழி.

 அந்தத் தீ அவளை எப்படிச் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவளது மூச்சுக்காற்றின் வெப்பம் இப்போது அந்தத் தோழிக்கு நன்றாகவே உணர்த்தியது.

"ஆண்கள்தான் அப்படிப்பட்டவர்கள்," அவள் தொடர்ந்தாள். "அவங்களுக்குக் காமம் ஒரு வெறி; ஒரு தற்காலிகத் தகிப்பு. அதைத் தாங்க முடியாம தெருத்தெருவா கத்துவாங்க. ஆனா, ஒரு பெண்ணோட காமம் அப்படிப்பட்டதா? அது நிலவின் ஒளியைப் போல, அடர்ந்த கடலின் ஆழத்தைப் போல. வெளியில அமைதியா இருக்கும். ஆனா, அதுக்குள்ளே ஒரு பேரிரைச்சலும், எரிமலையின் தகிப்பும் கொப்பளிச்சிட்டே இருக்கும்."

"உன்னோட காதலைப் புரிஞ்சிக்காத அவன் மேல உனக்கு கோபமே வரலையா? இந்த உலகத்தையே எதிர்த்து, எல்லாரையும் மீறி அவனைக் கட்டிப்பிடிச்சு உன்னோட காதலை, உன்னோட காமத்தைக் கொட்டித் தீர்க்கணும்னு தோணவே இல்லையா?" தோழி கேட்டாள்.

"கோபமா? பிரபஞ்சமே கிழிஞ்சு போற அளவுக்கு அவனை நெஞ்சுல அணைச்சுக்கத் தோணும்," என்றவள், தன் குரலை இன்னும் தாழ்த்தி, காமத்தின் ஆழத்திலிருந்து பேசத் தொடங்கினாள். "அவன் தொடுகைக்காக, என் உடல் ஒவ்வொரு நொடியும் ஏங்கித் தவிக்குது. ராத்திரி தூங்கும்போது அவன் பக்கத்துல இல்லையேங்கிற வெறுமை என்னை ஒரு நெருப்பா சுட்டெரிக்குது. அந்தத் தகிப்பு தாங்காம என் விரல்கள் என் தலையணையை இறுக்கிப் பிடிக்கும்போது, என் நரம்புகள் எல்லாமே அவனோட பேரைச் சொல்லித் துடிக்குது."

"அப்புறம் என்னடி? சொல்லிட வேண்டியதுதானே?"

"ஆனா, நான் ஆண்களைப் போல நடுரோட்டுல நின்னு மடல் ஏற மாட்டேன். என் காதலோட பெருமையும், என் காமத்தோட கம்பீரமும் அதுவல்ல." என்று சொன்னவள், தோழியின் கையை எடுத்து அவள் நெஞ்சின் மீது வைத்தாள்.

அங்கே அவளது இதயம் இடிமுழக்கமாய் அடித்துக் கொண்டிருந்தது. அந்த நெஞ்சின் சூடு தோழியின் உள்ளங்கையை எரிமலைக் குழம்பாய்ச் சுட்டது.

"என் காமம் ஒரு ரோஜா மலர் மாதிரி மேலோட்டமானது இல்ல. அது வேரோட ஆழமாக ஊன்றி நிற்கிற ஒரு கற்பக விருட்சம். அதுக்கு வெளிச்சம் தேவையில்லை, கைதட்டல்கள் தேவையில்லை. அது எனக்குள்ளே என்னை முழுமையாக்குது. அவனை நினைக்கும் போதெல்லாம் எனக்குள்ள ஒரு கடல் பொங்கி வழியுது, ஆனா அந்த அலையோட சத்தம் வெளியே கேட்காது. ஏன்னா, என் காதல் அதைவிட ரொம்பப் பெரியது. என் தகிப்பை நான் யாருக்கும் பரிசாகத் தர மாட்டேன்; அது எனக்கு மட்டும் சொந்தமானது, அதை நான் எனக்குள்ளேயே கடலைப் போலச் சுமக்கிறேன்."

அவளது கண்கள் காதலாலும், அடங்காத காமத்தாலும் மினுமினுத்தன. அந்தச் சிறு வெளிச்சத்தில் அவளது முகம் ஒரு தேவதையைப் போலப் பிரகாசித்தது.

அவள் மேலும் தொடர்ந்தாள், "அவன் என்னை விட்டுப் போயிடுவான்னு எனக்குப் பயம் இல்ல. ஏன்னா, அவனைப் பத்தின அந்த நினைப்பே, என்னை ஒரு பேரரசியாக வாழ வைக்குது. என்னை நானே நேசிக்கிறதுக்குக் காரணமே அவன்கிட்ட உருவான அந்தக் காதல்தான்."

அந்தப் பரபரப்பான சாலையில் சிவப்பு விளக்கு மாறி பச்சை விளக்கு எரிந்தது. பின்னால் வாகனங்களின் ஒலிப்பான் சத்தங்கள் அலறின. ஆனால் உலகமே ஸ்தம்பித்து நின்றது போல இருந்தது.

"உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு!" என்றாள் தோழி.

ஆம், இப்படிப்பட்ட பெண்ணின் தீராக் காதலைப் பெறுவதைப் போன்ற பாக்கியத்தை விட ஆணுக்கு வேறென்ன சிறப்பு இருக்க முடியும்? அந்த வகையில் ஆணை விட ஒரு படி உயர்ந்து போகிறாள் பெண். வள்ளுவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார், பெண்ணின் பெருந்தக்கது இல்.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment