நிதிவழிகாட்டிச் செல்வாக்காளர்களின் பங்கு மற்றும் பொறுப்பு
இன்றைய
எண்ம உலகில் சமூக வலைதளங்களின் ஜன்னல்கள் வழியாகப் பொருளாதாரமும் நிதிக் கல்வியும்
நம் வீடுகளுக்குள் எளிதாக வந்து சேர்கின்றன. சேமிப்பு, பரஸ்பர முதலீடு, பங்குச்சந்தை
முதலீடுகள் என நிதி சார்ந்த விஷயங்களை எளிய தமிழில் மக்களிடம் கொண்டு சேர்த்து வருபவர்கள்
நிதிவழிகாட்டிச் செல்வாக்காளர்கள் எனும் பின்புளூயன்சர்கள். ஆனால், இந்த வெளிச்சத்தின்
மறுபுறம் சில நிழல்களும் நீண்டுவருகின்றன.
சமீபத்தில்
பினான்ஸ் வித் ஹரிஷ் புகழ் ஹரிஷின் மறைவு, சமூக வலைதளங்களில் பல விவாதங்களை எழுப்பியுள்ளது.
இதில் தவறு யாருடையது என்ற விவாதத்தைத் தாண்டி, இதுபோன்ற நிகழ்வுகள் இனி நிகழாமல் தடுப்பதற்கான
ஆக்கபூர்வமான சிந்தனையே இப்போதைய அவசியத் தேவையாகும்.
இன்று
நாளுக்கு நாள் வளர்ந்துவரும் நிதிவழிகாட்டிச் செல்வாக்காளர்கள் பிரிவில் ஏராளமான
இளைஞர்கள் நுழைந்து வருகின்றனர். இவர்களை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசும்,
ஒழுங்குமுறை அமைப்புகளும் தற்போது தீவிரப்படுத்தியுள்ளன.
விரைவில்
அரசின் ஒழுங்குமுறை அமைப்புகள் நிதிவழிகாட்டிச் செல்வாக்களர்கள் எனும் பின்புளூயன்சர்களுக்கான
நெறிமுறைகளைத் தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கலாம்.
நிதிவழிகாட்டிச்
செல்வாக்காளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும், கேள்வி கேட்பதும் ஆரோக்கியமானதே.
ஆனால், அது ஒருபோதும் தனிப்பட்ட தாக்குதலாகவோ, வன்மம் கக்கும் வெறுப்பு உமிழ்வாகவோ
மாறிவிடக் கூடாது. விமர்சனங்கள் நெறிப்படுத்த வேண்டுமே தவிர, மனிதர்களை மனதளவில் சிதைக்கக்
கூடாது.
நிதி
சார்ந்த கருத்துகளைப் பகிர்வது என்பது வெறும் பார்வையாளர்களின் எண்ணிக்கையையோ, விருப்பங்களுக்கான
எண்ணிக்கையையோ கூட்டுவதற்கான விளையாட்டு அல்ல. அது பல மனிதர்களின் வியர்வை சிந்திச்
சம்பாதித்த பணம், அவர்களின் எதிர்காலம் மற்றும் குடும்பப் பாதுகாப்பு ஆகியவற்றுடன்
பின்னிப் பிணைந்தது.
பரஸ்பர
முதலீட்டு விநியோகஸ்தர்கள், பதிவுபெற்ற முதலீட்டு ஆலோசகர்கள் போன்ற ஒவ்வொரு பிரிவினருக்கும்
சட்டபூர்வமான எல்லைகள் உண்டு. இதுவரை நிதிவழிகாட்டிச் செல்வாக்காளர்களுக்கான சட்டப்பூர்வமான
எல்லைகள் வரையறுக்கப்படாத நிலையில், அவர்கள் தங்கள் வார்த்தைகளின் எடையை உணர்ந்து,
பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
தமிழ்ச்
சமூகத்தில் நிதி விழிப்புணர்வு இன்னும் பல கோடி மக்களைச் சென்றடைய வேண்டியுள்ளது. இந்தச்
சூழலில், பார்வையாளர்களாகிய மக்களுக்கும் சமமான பொறுப்புண்டு. சமூக வலைதளத்தில் ஒருவர்
சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக நம்பிவிடக் கூடாது. அவர்களின் பின்புலத்தை அலசுவது
அவசியம்.
ஒவ்வொருவரின்
வருமானம், கடன்சுமை, குடும்பச் சூழல் ஆகியவை தனித்துவமானவை. எனவே, பொதுவான காணொளிகளைத்
துல்லியமான சொந்தத் திட்டமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
ஒருவரிடம்
நேரடியாகப் பணம் கொடுத்து முதலீட்டு ஆலோசனை பெறுவதற்கு முன்பு, அவர் பங்குச் சந்தை
ஒழுங்காற்று ஆணையமான செபி பதிவு பெற்ற முறையான முதலீட்டு ஆலோசகரா என்பதை உறுதிப்படுத்திக்
கொள்வது பாதுகாப்பான வழியாகும்.
சமூக
வலைதளங்களின் இந்த விரிந்த பொருளாதாரப் பாதையைச் சீராகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவது
ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். இதில் அரசு, ஒழுங்குமுறை அமைப்புகள்,
நிதிவழிகாட்டிச் செல்வாக்காளர்கள் மற்றும் மக்கள் என அனைத்துத் தரப்பினரின் பங்குமே
இன்றியமையாதது.
பணத்தை
நிர்வகிப்பது என்பது ஒரு கலை மட்டுமல்ல, அது ஒரு பொறுப்புமிக்க பயணம். விழிப்புணர்வுடனும்
எச்சரிக்கையுடனும் பயணிப்போம்; வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.
*****

No comments:
Post a Comment