நீரின்றி அமையாது உலகு... ஆனால், அது எந்நீர்?
"நீரின்றி அமையாது உலகு" (குறள்,
20) என்றார்
திருவள்ளுவர். மனித உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது. ஆனால், இன்றோ "எந்த நீரால்
நமது உடலும் அந்தஸ்தும் அமைகிறது?" என்ற புதிய தேடலுக்குள் சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது.
திரைத்துறையைச்
சேர்ந்த நட்சத்திரங்களும், விளையாட்டு உலக நாயகர்களும் பல்லாயிரம் ரூபாய் மதிப்பிலான
பிளிங் எச்2ஓ, பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையின் எவியான் இயற்கை ஊற்று நீர் மற்றும் கருப்பு
அல்கலைன் நீர் போன்ற பிரத்யேகக் குடிநீரைப் பயன்படுத்துவது குறித்த செய்திகள் சமீபத்தில்
பரபரப்பாகி வருகின்றன. அந்த வகை பாட்டில் குடிநீரின் விலை ஆயிரக்கணக்கில் தொடங்கி லட்சங்களைத்
தொடுவது பலருக்கு வியப்பையும் மலைப்பையும் தருகிறது.
வாழ்க்கையில்
பொருள்களின் விலை வேறு; அவற்றின் மதிப்பு வேறு. ஸ்வரோவ்ஸ்கி படிகங்களால் அலங்கரிக்கப்பட்ட
கண்ணாடி பாட்டிலில் வரும் நீர், உடலுக்குத் தரும் ஆற்றலை விட, அதனை வைத்துள்ளவரின்
சொகுசு அடையாளத்தை அதிகம் வெளிப்படுத்துகிறது.
விலை
உயர்ந்த பாட்டில்களில் அடைக்கப்பட்ட நீர் உடனடியாக உடலுக்குள் மாயாஜாலத்தைச் செய்துவிடாது.
அதில் உள்ள தாதுக்களும் காரத்தன்மையும் உடலுக்கு நன்மை பயப்பவைதான் என்பதில்
மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த நன்மைகள் அனைத்தும் நமக்கு இயற்கை தரும் எளிய
வழிகளிலும் கிடைக்கக்கூடியவைதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அமிலத்தன்மையைக்
குறைத்து, உடலை நீண்ட நேரம் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும் கருப்பு நீர் மற்றும்
அல்கலைன் நீர் பற்றி இன்று நாம் வியந்து பார்க்கலாம். ஆனால், நமது முன்னோர்கள் இதற்கான
எளிய, இயற்கையான தீர்வுகளை அன்றாட வாழ்க்கையிலேயே வைத்திருந்தார்கள். அவற்றையும் இந்நேரத்தில்
கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அவையாவன,
செம்பு
பாத்திரத்தில் இரவில் நீரை ஊற்றி வைத்து காலையில் அருந்தும் போது, அது இயல்பாகவே கிருமிநாசினியாகவும்,
காரத்தன்மை கொண்டதாகவும் மாறுகிறது. இதை நாம் செம்பு பாத்திர நீர் என்போம்.
களிமண்ணால்
செய்யப்பட்ட பானையில் ஊற்றி வைக்கப்படும் நீர், இயற்கையான முறையில் குளிர்வடைவதுடன்,
அதில் உள்ள அமிலத்தன்மையைச் சமன் செய்து தாதுக்களை சேர்க்கிறது. இதை நாம் மட்பாண்ட
நீர் என்போம்.
சீரகம்
மற்றும் வெட்டிவேர் கலந்த நீர் உடலின் வெப்பத்தைத் தணித்து, செரிமானத்தைச் சீராக்கி,
உடலுக்குத் தேவையான கனிமங்களை இயல்பாகவே வழங்குகின்றது. இதை நாம் சீரகத் தண்ணீர் என்றும்
வெட்டி வேர் நீர் என்றும் கூறுவோம்.
பிரபலங்கள்
தங்களின் உடல் தகுதியையும், சருமப் பொலிவையும் பேணுவதற்கு இந்தச் சிறப்பு நீர் மட்டுமே
காரணம் அல்ல. அவர்களின் கடுமையான உடற்பயிற்சி, சீரான உணவுக்கட்டுப்பாடு, மன அழுத்தம்
இல்லாத வாழ்க்கை முறை மற்றும் தூக்கம் ஆகியவையே அவர்களின் உண்மையான ஆரோக்கியத்திற்கு
அடித்தளம்.
விலையுயர்ந்த
நீரைக் குடிப்பதால் மட்டுமே ஒருவர் ஆரோக்கியமாகி விட முடியாது. தூய்மையான குடிநீரும்,
ஆரோக்கியமான வாழ்வியலுமே ஒரு மனிதனைச் சீராக வைக்கும்.
பணம்
இருக்கும் இடத்தில் ஆடம்பரம் புகுவது இயல்பு. ஆனால், ஆரோக்கியம் என்பது சந்தையில் விற்கும்
பாட்டில்களில் அடைக்கப்படுவதில்லை; அது நாம் மேற்கொள்ளும் தர்மமான வாழ்வியல் தேர்வுகளில்
மட்டுமே இருக்கிறது.
ஆல்ப்ஸ்
மலையின் ஊற்று நீராக இருந்தாலும் சரி, நம்ம ஊர் கிராமத்து மண்பானை நீராக இருந்தாலும்
சரி தாகத்தைத் தணிப்பதும், உடலுக்குப் புத்துணர்ச்சி தருவதும்தான் நீரின் மெய்யான தர்மம்.
போலித்தனமான ஆடம்பரங்களை விடுத்து, இயற்கையோடு இயைந்த எளிய ஆரோக்கிய வாழ்வியலைக் கையில்
எடுப்பதே என்றென்றும் அறிவார்ந்த செயலாகும்!
அந்த
வகையில் மட்பாண்ட நீரும், செம்புப் பாத்திர நீரும், சீரகத் தண்ணீரும், வெட்டி வேர்
நீரும் பிரபலங்கள் அருந்தும் விலை உயர்ந்த நீருக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல.
*****

No comments:
Post a Comment