20 Sept 2026

அடைபடும் வாழ்க்கை

கூடும் வீடும்

அந்த வீட்டின் மீது பறந்தபடி

வீடு தேடி அலையும்

அப்பறவை அறியாது

அது கூடு கட்டியிருந்த

மரமே

கதவாகவும் சன்னலாகவும்

மாறியிருக்கும்

புது வீடு அதுவென

*****

ஒரு பூ இரு வாசம்

தலையில் வைத்திருபவளுக்கு

அலங்காரம்

கையில் வைத்திருப்பவளுக்கு

வியாபாரம்

*****

அடைபடும் வாழ்க்கை

பெருவெளியில் ஆன உலகில்

பேருந்தில் நுழைகையில்

இடமில்லா இடத்தில்

ஐந்தடி ஆறு அங்குல

யாக்கை திணித்து

பத்துக்குப் பத்து சதுர அறையில்

மூன்றுக்கு ஐந்தரை அடி கட்டிலில்

கிரீச் கிரீச் என

இல்லாத காற்றை இழுத்துச் சுழற்றும்

காற்றாடியின் ஒப்பாரிக்குள்

பன்னிரு மணி நேர

இரவை நுழைத்து

சூரிய விழிப்பில் வெளிவருகையில்

புளிமூட்டைக்குள் அடைபடுவதை ஒத்த

சந்தடிக்குள் சிக்கி

ஓரடி அளவுகோலுக்குள் சிக்கும் சென்டி மீட்டர் போல

சிறு உறைக்குள் அடைபட்டுப் போகும்

பெரும் கடிதமாகிறது வாழ்க்கை

*****

No comments:

Post a Comment