20 Sept 2026

குறள் காட்டும் உயிரியல் மற்றும் உடலியல் தத்துவம்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 42

குறள் காட்டும் உயிரியல் மற்றும் உடலியல் தத்துவம்!

மடிக்கணினியின் திரையில் நீல நிற கோடுகள் ஓடிக்கொண்டிருந்தன. செவ்வக விண்டோக்களில் பைதான் கோடுகள். மணி இரவு இரண்டரை. ஜன்னல் வழியே சென்னை, கிழக்குக் கடற்கரையின் குளிர்காற்று மெலிதாக வீசி அறையின் மெல்லிய திரைச்சீலையை அசைத்தது. மேசை மீதிருந்த தேநீர் ஆறிப்போயிருந்தது.

"இன்னும் எத்தனை பக் பிக்ஸ் பண்றது?" என்றது அந்தப் பக்கம் இணைய இணைப்பில் இருந்த அவளது குரல். லேசான இரைச்சல். திருவாரூர் மழையின் சின்னச் சத்தம் பின்னணியில் கேட்டது.

அவன் ஆறிய தேநீரை ஒரு வாய் குடித்துவிட்டு, கண்களைத் கசக்கிக்கொண்டே சொன்னான், "இந்த லாகின் மாட்யூல் சரியா ஒர்க் ஆகலைன்னா நாளைக்கு மார்னிங் கிளைண்ட் மீட்டிங் காலி. நீ தூங்கு."

"நான் தூங்கினா, நீ மட்டும் தனியா முழிச்சிருப்பியா?"

இந்தக் கேள்வி கடந்த ஆறு மாதங்களாக இருவரின் வாழ்க்கையாகிவிட்டிருந்தது. ஒருத்தர் சென்னையில், இன்னொருத்தர் திருவாரூரில். ஆனால் காதலின் தூரம் பூஜ்ஜியம். எண்ம உலகின் ஒளியிழை வடம் வழியே இருவரும் தினமும் நூறு முறையாவது பரிமாறிக்கொள்கிற வார்த்தைகளில் இருந்தது அவர்களின் உலகம்.

அவர்களது காதலைச் சொல்ல வேண்டுமானால், அது கணினிக்கும் மின்சாரத்துக்கும் உள்ள பந்தம் மாதிரி. உடம்பும் உயிரும் போல. உடம்பைவிட்டு உயிர் தனித்து இயங்க முடியாது; இவர்களால் ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இல்லாமல் இருக்க முடியாது.

"சரி, கோட் சரி பண்ணிட்டேன். நீ போய் தூங்கு," என்றான் அவன்.

"ம்!"

திரை அணைந்தது. அறையில் ஒரு நிசப்தம் கவ்வியது. ஆனாலும் அந்த மௌனத்தில் அவளது மூச்சுக்காற்று இருப்பதைப்போன்ற ஒரு பிரமை அவனுக்கு.

மறுநாள் மதியம், திருவாரூர் சோமசுந்தரம் பூங்கா அருகே உள்ள அவளது அலுவலகம். கடுமையான வெயில். வாகனங்களின் இயந்திர சூடு வேறு கூடுதலாக.

அவளது அலுவலக அறைக்கு வெளியே உள்ள தேநீர்க் கடையில் அமர்ந்திருந்தான் அவன். அவள் நம்ப முடியாமல் தன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டுச் சென்னையிலிருந்து வந்து அவளை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான்.

அவள் அவசர அவசரமாக அலுவலக மின்தூக்கியிலிருந்து இறங்கி வெளியே வந்தாள். நீல நிறப் புடவை. தோளில் தோல் பை.

அவளை நேரில் பார்த்து மாதங்களாகிறது. ஆனால் அப்படித் தெரியவே இல்லை. நேற்று முன்தினம் இணைய வெளியில் பேசியதின் தொடர்ச்சி போல இருந்தது. உலகத்தின் அத்தனை தூரங்களும் ஒரே வினாடியில் சுருங்கிவிட்டாற் போன்ற உணர்வு.

திடீரென அவள் அவனைக் பார்த்ததும் நின்றுவிட்டாள். கண்கள் விரிந்தன. நம்ப முடியாமல் ஒரு நொடி திகைத்தவள், அப்படியே வேகமாக ஓடிவந்து அவன் முன் நின்றாள்.

"சொல்லாம கொள்ளாம, எப்படி?" என்றாள் மூச்சு வாங்க.

அவன் மெலிதாகச் சிரித்தான். தேநீர்க் குவளையைப் இருக்கையின் அருகில் வைத்தான். "உடம்பு சென்னையில இருக்கு, உயிருக்கு கொஞ்சம் வேலை இருந்தது. அப்படியே திருவாரூருக்கு வந்துடுச்சு."

அவள் அவனது கையைப் பற்றிக்கொண்டாள். அவள் விரல்கள் லேசாக நடுங்குவது அவனுக்குத் தெரிந்தது. அந்த நடுக்கத்தில் காதலின் அத்தனை உண்மையும் இருந்தது.

"என்ன இது சடன் பிளான்?"

"நேற்று நைட் நீ கோடுல ஒரு தப்பு சொன்னியே. அதை கரெக்ட் பண்ண நேர்ல வந்திடுவோம்னுதான்."

அவள் அவனை முறைக்கப் பார்த்தாள், ஆனால் உதடுகள் சிரிப்பை அடக்க முடியாமல் திணறின.

இருவரும் அருகில் இருந்த பூங்காப் பகுதிக்கு நடந்தார்கள். மர நிழல்களில் பெஞ்சுகள் இருந்தன. சுற்றிலும் பல நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மதிய உணவு இடைளையில் அவசர அவசரமாக சாப்பாட்டுப் பொட்டலங்களை பிரித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு தனி உலகம் ஓடிக்கொண்டிருந்தது.

"உண்மையைச் சொல்லு, ஏன் வந்த?"

அவன் அவளது கண்களை நேராகப் பார்த்தான். "நீ இல்லாம எல்லாமே லாக் ஆனது மாதிரி இருந்தது. மூச்சு முட்டுற மாதிரி இருந்தது. இப்பத்தான் உசிரு உடம்புக்குள்ள வந்த மாதிரி இருக்கு.

"உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு."                        (குறள், 1122)

அப்படின்னு திருவள்ளுவர் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி சொன்னது பொய்யில்ல. இந்த உண்மையை மறந்துட்டு நான் அங்கேயும், நீ இங்கேயும் எத்தனை நாள் இருக்க முடியும் சொல்லு?"

அவள் அவனுடைய தோளில் லேசாகச் சாய்ந்துகொண்டாள். செயற்கை நீரூற்றைக் கடந்து வந்த பூங்காவின் காற்று சில்லென்று வீசியது. அது அவர்களின் மனதை வருடியது.

காதலுக்கு இலக்கணம் வகுக்கத் தேவையில்லை; உடம்பைவிட்டு உயிர் பிரிந்தால் மரணம். அவன் இல்லாமல் அவள் இல்லை; அவள் இல்லாமல் அவன் இல்லை.

இணையம் துண்டிக்கப்பட்டால் ஏற்படும் பிழைச் செய்திகளைப் போல, இவர்கள் பிரியும் ஒவ்வொரு கணமும் ஒரு பிழைதான். அந்தப் பிழையைச் சரி செய்யும் ஒரே மார்க்கம் இந்தச் சந்திப்புதான்.

"இனிமே என்னை விட்டுட்டு சென்னைக்குப் போகக்கூடாது!" என்றாள் அவள் மெல்லிய குரலில்.

"போக மாட்டேன். உன்னை விட்டுட்டு இனி எங்கேயும் போக முடியாதபடி திருவாரூர்லேயே ஓர் ஆபீஸ் போடுற முடிவோடு வந்துட்டேன்!" என்றான் அவன்.

அவள் அவனை நம்ப முடியாமல் பார்த்தாள். மெலிதாகச் சிரித்தாள். அவனும் சிரித்தான்.

அந்த நொடி அவர்களுக்காக நின்றுகொண்டிருந்தது. உடம்பும் உயிரும் போல பிரிக்க முடியாத ஒரு காதலின் நீட்சியாக அந்த மதியப் பொழுது நகர்ந்து கொண்டிருந்தது. இனி உடலும் உயிரும் போல என்ற உவமையை விட அவனும் அவளும் போல என்ற உவமை காலத்துக்கும் பொருந்தும் சாசுவதமான உண்மையாகத் திருவாரூரில் மாறிக் கொண்டிருந்தது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment