7 Jun 2026

போலீஸுக்குப் புனிதப் போர்வை போர்த்தி, பொதுப்புத்தியைப் புளிச்சமாவு ஆக்கிய சீரழிவு!

சீரழித்த சினிமா – 5

சாமி

போலீஸுக்குப் புனிதப் போர்வை போர்த்தி, 

பொதுப்புத்தியைப் புளிச்சமாவு ஆக்கிய சீரழிவு!

இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகம் தன் உரிமைகளையும், சட்டத்தின் மீதான கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் மொத்தமாகத் திரையரங்கு வாசலிலேயே அடகு வைக்கப் பழகிக் கொண்டது. அதற்குப் பிள்ளையார் சுழி போட்ட பெருமை 2003 இல் வெளியான சாமி திரைப்படத்திற்கு உண்டு.

போலீஸ் அராஜகமே ஆகச்சிறந்த தீர்வு என்ற பாசிச நச்சை எப்படி நளினமாக இத்திரைப்படம் விதைத்தது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படத்தில் இடம்பெறும், நான் போலீஸ் இல்லடா பொறுக்கி என்ற வசனம் அராஜகத்திற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம்.

இத்திரைப்படம் தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த ஜனநாயகப் பாடம் என்னவென்றால், சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய அதிகாரியே ஒரு ரவுடியைப் போல அராஜகம் செய்யலாம், அது தப்பில்லை என்பதுதான்.

இத்திரைப்படத்தில் வரும் நாயகன், சட்டப் புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டு, குற்றவாளிகளை நடுரோட்டில் வைத்து அடித்துத் துவம்சம் செய்வார். ஒரு நாகரிக நாட்டில், குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தருவதே காவல்துறையின் வேலை. ஆனால் சாமியோ, போலீஸ் என்பவன் சட்டபூர்வமாக லைசென்ஸ் பெற்ற ஒரு ரவுடி என்ற ஆபத்தான சிந்தனையைத் தமிழர்களின் மூளையில் ஆணி அடித்தார்.

விளைவு?

நிஜ வாழ்க்கையில் நடக்கும் போலீஸ் அத்துமீறல்களையும், போலி என்கவுண்ட்டர்களையும் பார்த்துவிட்டு, அடிச்சு நொறுக்குங்க சார், அப்பதான் நாடு உருப்படும், என்று கைதட்டி ரசிக்கும் ஒரு காட்டுமிராண்டித்தனமான பொதுப்புத்தியை இந்தச் சினிமா உருவாக்கியது.

இத்திரைப்படத்தின் ஆகப்பெரும் தத்துவார்த்த அபத்தம் என்னவென்றால், நாயகன் லஞ்சம் வாங்குவதை நியாயப்படுத்துவதுதான். ஊர்ல இருக்குற பெரிய வில்லன் கிட்ட வாரம் ரெண்டு லட்சம் லஞ்சம் வாங்கி, அதை வச்சு ஏழைகளுக்கு நல்லது செய்றேன், என்று ஒரு போலீஸ் அதிகாரி பேசும் வசனம் தமிழர்களை உருக வைத்தது.

ஊழலையும் லஞ்சத்தையும் ஒரு புனிதப் போர்வையால் மூடி, நோக்கம் நன்றாக இருந்தால் நீங்கள் வாங்கும் லஞ்சமும் தர்மமே என்ற விசித்திரமான அறவீழ்ச்சியை இது தமிழ்ச் சமூகத்தில் விதைத்தது.

நிஜ வாழ்க்கையில் நாம் செய்யும் சின்னச் சின்ன முறைகேடுகளையும், நாம என்ன அநியாயமா பண்றோம், நாலு பேருக்கு நல்லதுக்குத்தானே என்று நாமே சமரசம் செய்துகொள்வதற்கு இந்த சாமி தியரியே ஆதிமூலம்.

இப்படத்தில் இடம்பெற்ற கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா இல்லை ஓடிப் போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா என்ற திரைப்பாடல் அப்போது தமிழகமெங்கும் சிறுகுழந்தைகளின் உதடுகள் வரைப் போய்ச் சேர்ந்தது. உடனடி இன்பம் மற்றும் உடற்பசியை மட்டும் பிரதானமாகத் தத்துவமாகக் காட்டும் இப்பாடலின் அடுத்தடுத்த வரிகள் பாலியல் மசாலாவின் உச்சம்.

தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா இல்லை புள்ளக்குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா என்பன வெறும் ஆபாச வரிகள் மட்டுமல்ல, மானிடவியல் ரீதியாகப் பார்த்தால், குடும்பம் என்ற அமைப்பின் வரிசைக்கிரமத்தைத் தலைகீழாக மாற்றிப் பார்க்கும் ஒரு அராஜகவாதத் தத்துவம். இதில் பேசப்படும் ஓடிப் போதல் என்பது, சமூகத்தின் மீதான புரட்சியோ அல்லது காதலுக்கான போராட்டமோ அல்ல, அது சமூக விதிகளிலிருந்து தப்பித்துத் தங்களின் உடல் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளத் துடிக்கும் ஒரு தற்காலிகமான தப்பியோடும் மனநிலை. இப்பாடலில் வரும் அடுத்தடுத்த வரிகள் காதலை முற்றிலும் மன ரீதியான தளத்திலிருந்து இறக்கி, முழுக்க முழுக்க உடல் சார்ந்த தேவையாக  சுருக்குகின்றன.

ஒரு கலைப்படைப்பு மனிதனை உன்னத நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் அல்லது சிந்திக்க வைக்க வேண்டும். ஆனால், இப்பாடல் வரிகள் அழகியல் வீழ்ச்சி என்ற தத்துவத்தின் கீழ் வருகின்றன.

எது சமூகத்தில் தவறானது அல்லது மறைமுகமாகப் பேசப்பட வேண்டியதோ, அதை அப்பட்டமாக, மிகச் சாதாரணமான சொற்களைக் கொண்டு பொதுவெளியில் பாடி, அதைக் கொண்டாடுவதன் மூலம் சமூகத்தின் ஒட்டுமொத்த ரசனையையும் கீழ்நோக்கி இழுக்கும் வணிகத் தத்துவத்தை இது பிரதிபலித்தது. தமிழ்ச் சமூகமும் அப்போது இப்பாடலைத் தங்கள் குழந்தைகள் மழலை மொழியில் பாட, அதைக்  கேட்டு புளங்காகிதம் அடைந்தது என்பது சொல்லொணா கலைத்துயரம்.

படத்தில் வரும் வில்லன் செய்யும் அநியாயங்களுக்கு, நாயகன் கொடுக்கும் தண்டனைகள் எல்லாமே சட்டத்திற்குப் புறம்பானவை. ஒரு குற்றவாளியைக் கூலிப்படையை ஏவி அடிக்க வைப்பது, சட்டையைக் கழற்றிவிட்டு நடுரோட்டில் சண்டையிடுவது என ஒட்டுமொத்தப் படமும் வன்முறையை மட்டுமே மூலதனமாகக் கொண்டது.

விவேகத்தோடும், சட்டப்பூர்வமாகவும் அணுக வேண்டிய சமூகப் பிரச்சினைகளை, வெறும் அடிதடி, ரத்தக் களறி, பஞ்ச் வசனங்கள் என்ற வட்டத்திற்குள்ளேயே சுருக்கி, தமிழர்களின் சிந்தனைத் திறனை மழுங்கடித்ததுதான் இந்தச் சாமியின் ஆகச்சிறந்த அற்புதம்.

சாமி பாக்ஸ் ஆபீஸில் நூறு நாட்களைக் கடந்து ஓடி, அந்தச் சீயானின் பிம்பத்தை உச்சிக்குக் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், ஒரு பொறுப்புள்ள திரைச் சமூகமாகத் தமிழர்களை அது எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

அறிவையும் விவேகத்தையும் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டிய ஒரு சட்டபூர்வ ஜனநாயகச் சமூகத்தை, போலீஸின் அராஜகத்தைக் கண்டு விசில் அடிக்கும் ஒரு முதிர்ச்சியற்ற கூட்டமாக மாற்றியதில், ஆறுச்சாமியின் அந்தப் போலீஸ் யூனிபார்முக்கும், சாமி திரையில் காட்டிய வன்முறைக்கும் மிகப்பெரிய பங்கிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத கசப்பான உண்மை!

*****

No comments:

Post a Comment