8 Jun 2026

காக்கிச் சட்டையைக் கசாப்புக் கத்தியாக்கித் தமிழனைக் கர்ஜிக்க வைத்த பாசிசச் சீரழிவு!

சீரழித்த சினிமா – 6

சிங்கம்

காக்கிச் சட்டையைக் கசாப்புக் கத்தியாக்கித் 

தமிழனைக் கர்ஜிக்க வைத்த பாசிசச் சீரழிவு!

இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் முடியும் தருவாயில், தமிழ் சினிமா தன் ஆகச்சிறந்த காட்டுமிராண்டித்தனமான பார்முலாவைக் கண்டறிந்தது. அதுதான் 2010இல் வெளியான சிங்கம். நாம் முன்பே பார்த்த சாமி என்ற திரைப்படத்தில் விதைக்கப்பட்ட போலீஸ் அராஜக நச்சை, இத்திரைப்படத்தில் இன்னும் கொஞ்சம் சத்தமாகவும், அதிவேகமாகவும், எக்கச்சக்கமான அலறல்களோடும் அப்டேட் செய்து கொடுத்தது கோடம்பாக்கத்து கமர்ஷியல் சினிமா பேக்டரி.

முறுக்கிய உடலும் மற்றும் மீசையும், காது ஜவ்வு கிழியும் பின்னணி இசையும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் சிந்தனையை ஒரு மிருகத்தனமான வட்டத்திற்குள் சுருக்கியதுதான் சிங்கம் திரைப்படம் உருவாக்கிய அசிங்கச் சீரழிவு.

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்ற இத்திரைப்படத்தின் வசனம் அறிவற்ற தசைகளின் போலிப் பெருமிதம். இப்போலிப் பெருமிதம் போலி ஆண்மையைத் தூண்டி விட்டுத் தமிழக இளைஞர்களைப் பித்துப் பிடித்து டன் கணக்கில் உளறச் செய்தது.

இத்திரைப்படம் தமிழர்களின் பொதுப்புத்தியில் ஏற்றிய ஆகச்சிறந்த தத்துவம் என்ன தெரியுமா? விவேகமும், சட்டப் புரிதலும், மனித உரிமைகளும் பலவீனமானவர்களுக்கானது. உண்மையான போலீஸ் அதிகாரிக்குத் தேவை அறிவு அல்ல, ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் எடையை உருவாக்கும் முரட்டுத் தசைகள் மட்டும்தான். அப்படித் தசைகளை மனிதர்களில் உருவாக்க முடியுமா என்ன? மனிதர்களை இன்னும் மேன்மையான மனிதர்களாக்குவதற்குப் பதிலாக, மனிதர்களை மிருகங்களாக மாற்ற முயற்சித்தது இத்திரைப்படம். டார்வினின் பார்வையில் சொன்னால் இது பின்னோக்கிய பரிணாம வளர்ச்சியாகும்.

இப்படத்தில் வரும் நாயகன், எதற்கெடுத்தாலும் கத்துவார், கையை ஓங்குவார், சட்டப் புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டுத் தன் சொந்தக் கைகளால் தீர்ப்பு வழங்குவார். ஒரு ஜனநாயக நாட்டில் சட்டம் தன் கடமையைச் செய்வதற்கு முறையான வழிமுறைகள்  உண்டு. ஆனால், இத்திரைப்பட நாயகச் சிங்கமோ, நானே சட்டம், நானே நீதிபதி என்ற பாசிச மனோபாவத்திற்கு ஹீரோயிசம் என்ற போலி முலாம்பூசி கமர்ஷியல் ஹிட்டடித்தார்.

விளைவு?

நிஜ வாழ்க்கையில் நடக்கும் லாக்அப் மரணங்களையும், மனித உரிமை மீறல்களையும் பார்த்துவிட்டு, நம்ம சிங்கம் சார் மாதிரி சும்மா அதிரடியா பண்றாங்கப்பா, என்று கைதட்டி ரசிக்கும் ஒரு மூர்க்கமான பொதுப்புத்தியைத் தமிழர்களிடம் இது ஆழமாக விதைத்தது.

படத்தில் வரும் வில்லனை அடக்க, நாயகச் சிங்கம் கையாளும் உத்திகள் எவையுமே சட்டத்திற்கு உட்பட்டவை அல்ல. நீதிமன்ற விசாரணையோ, முறையான சாட்சியங்களோ இல்லாமல், ஒரு குற்றவாளியைச் சுட்டுக் கொல்வதே ஆகச்சிறந்த கிளைமாக்ஸ் என்று இத்திரைப்படம் கொண்டாடியது.

ஒரு குற்றவாளிக்குச் சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுப்பதுதான் திறமையான போலீஸின் லட்சணம். ஆனால், கொலைக்குக் கொலை, அராஜகத்திற்கு அராஜகம் செய்வதுதான் கெத்து என்று காட்டியதன் மூலம், சட்டத்தின் ஆட்சியை  இத்திரைப்படம் கேலிக்கூத்தாக்கியது.

இதன் சீரழிவு என்னவென்றால், நிஜ சமூகத்தில் காவல்துறையினர் தங்களின் கடமையிலிருந்து தவறி, அராஜகத்தில் ஈடுபடும்போது அதைக் கேள்வி கேட்கும் அறிவை இந்தச் சமூகம் மொத்தமாக இழந்தது. காவல்துறையை என்கவுண்ட்டர் கூலிப்படையாகச் சித்தரித்தது மனித உரிமைகளுடன் கூடிய நாகரிக ஜனநாயக முறைக்கு எதிராக ஒரு பாசிசவாதத்தை முன் வைத்தது.

படம் தொடங்கும்போதே நாயகன் தன் கிராமம், தன் மண், தன் குடும்பக் கௌரவம் என்று அதீதப் பாசம் காட்டுவார். தமிழ் சினிமாவில் கிராமத்துப் பாசம் என்ற லேபிளுக்குப் பின்னால் எப்பொழுதும் ஒளிந்திருப்பது ஒரு குறிப்பிட்ட சாதியப் பெருமிதமும், நிலப்பிரபுத்துவ மனோபாவமும்தான்.

படிப்பறிவோ, நவீன உலகப் புரிதலோ இல்லாத ஒரு முரட்டுத்தனமான கிராமியச் சூழலை ஆகச்சிறந்த பண்பாடாகக் காட்டி, நகரத்து நாகரிகத்தையும் சட்ட ஒழுங்கையும் மட்டம் தட்டுவதுதான் இந்தச் சிங்கத்தின் ராஜதந்திரம். இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வந்த இளைஞர்கள், உலகளாவிய சிந்தனைகளை நோக்கித் தங்களை வளர்த்துக்கொள்வதை விடுத்து, எங்க ஊரு கெத்து, எங்க மண் கெத்து என்று குறுகிய வட்டத்திற்குள்ளேயே சுருங்கிப் போவதைப் பெருமிதம் என்ற கருத ஆரம்பித்தார்கள். கிராமத்துப் பெருமை என்ற பெயரில் தூண்டப்பட்ட சாதியப் பொதுப்புத்தியை மறைமுகமாகத் தூக்கிப் பிடித்ததில் இத்திரைப்படத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

படத்தில் வரும் நாயகி, சென்னை போன்ற பெருநகரத்திலிருந்து கிராமத்திற்கு வரும் ஒரு படித்த பெண். ஆனால், அவளுக்குக் கொடுக்கப்பட்ட வேலை என்ன? மீசையை முறுக்கிக் கொண்டு கத்தும் நாயகனின் பின்னால் அலைவது, அவனது முரட்டுத்தனத்தைக் கண்டு உருகிப் போவது, பாடல்களுக்குத் தகுந்தாற்போல் ஆடுவது மட்டும்தான்.

ஒரு பெண்ணின் சுயமரியாதை, அவளது கல்வி, அவளது ஆளுமை அனைத்தையும் ஒரு ஆணின் அதிகாரப் பிம்பத்திற்கு முன்னால் மண்டியிட வைப்பதுதான் தமிழ் கமர்சியல் சினிமாவின் வழக்கம். அதை இத்திரைப்படமும் மிக நேர்த்தியாகச் செய்து, பெண்களை வெறும் போகப் பொருளாகவும் பின்துணையாகவும் மட்டுமே பார்க்கும் ஆணாதிக்கப் புத்தியைத் தமிழர்களின் நெஞ்சில் இன்னும் ஆழமாகப் பதியவைத்தது.

சிங்கம் பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் பின் மேலும் இரண்டு பாகங்களாக சிங்கம் 2, சிங்கம் 3 எனத் தமிழ்நாட்டைத் துவைத்து எடுத்தது, ஆனால், அழுக்குதான் போகவில்லை.

ஒரு முற்போக்குச் சமூகமாக மாற வேண்டிய தமிழர்களை இத்திரைப்படம் கொண்டு போய் நிறுத்திய இடம் எது தெரியுமா? ஸ்டைலிஷான காட்டுமிராண்டித்தன வெளி.

அறிவையும் மனிதநேயத்தையும் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டிய ஒரு சமூகத்தை, வெறும் கர்ஜனை, அதிரடி, என்கவுண்ட்டர் என்ற வன்முறைப் போதைக்கு அடிமையாக்கியதில், துரைசிங்கத்தின் அந்தச் சிங்க முத்திரை காக்கிச் சட்டைக்கு மிகப்பெரிய பங்கிருக்கிறது என்பதுதான் இத்திரைப்படம் மற்றும் அதன் தொடர்ச்சியான மேலும் இரு பாகங்கள் குறித்த கசப்பான உண்மை!

*****

No comments:

Post a Comment