11 Nov 2026

கடலை விடப் பெரிது

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 86

கடலை விடப் பெரிது

இரவு பதினொன்றரை மணி.

குளிர்சாதன இயந்திரத்தின் அவ்வபோது எழும் ஹம் என்ற சத்தத்தைத் தவிர, அந்த ஆறாவது மாடி இரு படுக்கையறை, ஒரு வரவேற்பறை, ஒரு சமையலறை கொண்ட அந்த வீட்டில் வேறு சத்தமில்லை.

மேல்மாடக் கதவைத் திறந்தால், திருவாரூர் தியாகராஜர் கோயிலின் கோபுரமும், எப்போதாவது தூரத்தில் செல்லும் வண்டிகளின் இரைச்சலும் கேட்கும்.

அவள் மடிக்கணினியை மூடி வைத்தாள். கண்கள் எரிந்தன. மென்பொருள் கட்டமைக்கும் பணி. அமெரிக்க தரவகப் பணியாளர் இன்றைக்கு அதிகாலை நான்கு மணிக்குக் கூப்பிடக் கூடும். அதுவரை தூங்கலாம், அல்லது தூங்க முயற்சி செய்யலாம்.

கட்டிலில் ஏறிப் படுத்தாள். இடது பக்கம் காலியாக இருந்தது.

கையை நீட்டிப் பார்த்தாள். மெத்தை குளிர்ந்து போய் இருந்தது. அந்தப் பக்கம் அவன் இல்லை.

அவன் இப்போது சிகாகோவில் இருக்கிறான். வியாபாரப் பயணம். இரண்டு மாத செயல்திட்டம். அவன் போய் இன்றோடு நாற்பத்தி ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கின்றன திரும்பி வர.

நாற்பத்து ஐந்து நாட்கள். அதாவது ஆயிரத்து எண்பது மணிநேரம்.

அவள் எழுந்து உட்கார்ந்துகொண்டாள். நாக்கு வறட்சியாக இருந்தது. சமையலறைக்குச் சென்று குளிர்பதனப் பெட்டியைத் திறந்து பாட்டிலை எடுத்து மடக்மடக்கென்று தண்ணீரைக் குடித்தாள். தண்ணீர் சில்லென்று தொண்டையில் இறங்கியது. ஆனால் நெஞ்சுக்குள் இருந்த காந்தல் குறையவில்லை.

மீண்டும் வந்து படுக்கையில் விழுந்தாள். அலைபேசியை எடுத்தாள்.

வாட்ஸ்அப் பார்த்தாள்.

அவன் கடைசியாகப் பார்த்தது 10 நிமிடங்களுக்கு முன்புதான்.

செய்தி அனுப்பலாமா என்று இதயம் யோசித்தது. அங்கு இப்போது காலை பத்து மணி. அவனுக்கு முக்கிய வியாபாரச் சந்திப்பு இருக்கும். தொந்தரவு செய்யக் கூடாது.

தூங்குவது என ஒருமனதமாக முடிவெடுத்தாள்.

அலைபேசியைத் தலையணைக்கு அடியில் வைத்தாள்.

சுவரில் தொங்கிய எண்மக் கடிகாரம் நொடிக்கு ஒருமுறை சிவப்பாக வெளிச்சம் காட்டியது.

சிந்தனை மெல்லப் பின்னோக்கி நகர்ந்தது.

மூன்று வருடங்களுக்கு முன்பு, கல்யாணமான புதிதில்…

இதே வீடு. இதே படுக்கை அறை.

அப்போது அவன் ஓடிவந்து படுக்கையில் குதிப்பான். அவளின் முகத்தை இரு கைகளாலும் ஏந்தி, "ஏய் பொண்டாட்டி! உனக்கு ஓர் உண்மை தெரியுமா?" என்பான்.

"என்ன?"

"நான் உலகத்திலேயே ரொம்ப அதிர்ஷ்டக்காரன் தெரியுமா?"

"ஏன்?"

"பின்ன என்ன? உன்னை மாதிரி ஒரு பொண்ணு எனக்குப் பொண்டாட்டியா கிடைச்சிருக்கா. எனக்கு இந்த உலகத்துல வேற எதுவுமே வேணாம்டி."

அவன் அவளைக் கட்டிப்பிடித்துக் கொள்ளும்போது, அவனுடைய மூச்சுக்காற்று அவள் கழுத்தில் படும். அவன் உடம்பின் சூடு அவளுக்குள் இறங்கும். அந்த நொடிகள் அது ஒரு தனி உலகம். அதில் கவலைகள் இல்லை, இலக்குகள் இல்லை, வேலை அழுத்தம் இல்லை.

இரவு முழுக்கப் பேச்சு. நடுநிசியில் திடீரென்று பசி என்று சொல்லி இருவருமாகச் சேர்ந்து அவல் பாயாசம் சமைப்பார்கள். ஒரு தேக்கரண்டியில் இருவரும் மாற்றி மாற்றிச் சாப்பிடுவார்கள். அவனுடைய குறும்புச் சிரிப்பு, அவன் சொல்லும் மொக்கை நகைச்சுவைகள், அவன் அணைப்பின் இறுக்கம்…

அப்போது அவள் நினைத்தாள், "கடவுளே, இந்த இன்பத்துக்கு எல்லையே இல்லையா? சந்தோஷம்னா இதுதானா? இது ஒரு கடல் மாதிரி இருக்குதே!"

ஆம், அது கடல் தான்.

அலை அலையாய் வந்து கரையைத் தொட்டுச் செல்லும் பேரகத்தின் இன்பக் கடல்.

அப்போது அந்த இன்பத்தின் ஆழம் மட்டும்தான் அவளுக்குத் தெரிந்திருந்தது. அதன் மறுபக்கமான துன்பத்தின் அகலம் தெரியவில்லை.

அவள் இப்போது புரண்டு படுத்தாள்.

இப்போது அதே படுக்கை.

அதே அறை.

ஆனால் அவன் இல்லை.

இப்போது அவள் உணரும் இந்தத் தனிமை.

இது என்ன?

இதற்கு பெயர் தான் பிரிவுத் துயரமா?

பகல் முழுக்க அலுவலகப் பணி, மென்பொருள் கட்டமைப்பு, பணிக்கான பின்னூட்டம் என்று மூளையை இயக்கத்திலேயே வைத்திருக்கும் போது இது அவ்வளவாகத் தெரிவதில்லை. ஆனால் இரவு வந்து, இந்த அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டு, மடிக்கணினி மூடப்படும் போது, அந்தத் தனிமை ஒரு பிரம்மாண்டமான அரக்கனைப் போல மூலைக்கு மூலை உருவெடுக்கிறது.

அவன் தொட்ட இடங்கள் எல்லாம் இப்போது வலிக்கின்றன. அவன் சிரித்த சத்தம் இந்த அறையின் சுவர்களில் எதிரொலிப்பது போல இருக்கிறது. அவன் போட்டுவிட்டுப் போன ஆடை ஒன்றின் வாசனை, இன்னும் மடித்து வைக்கப்படாமல் அந்த அலமாரியில் இருக்கிறது. அதை எடுத்து முகர்ந்து பார்த்தபோது கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

"இன்பம் கடல்தான்."

அவன் கூட இருந்தபோது கிடைத்த இன்பம் கடல் போலப் பெரிதாகத்தான் இருந்தது. ஆனால், அவன் இல்லாத இந்த நாளில், அந்த நினைவுகள் வந்து தாக்கும்போது  ஏற்படும் இந்தத் துன்பம், அந்த இன்பக்கடலை விடவும், ஏன் இந்த உலகின் பெருங்கடலை விடவும் பெரிதாகத் தோன்றியது.

ஏன் அப்படி?

கடலுக்கு ஒர் எல்லை உண்டு. கரை உண்டு. ஆனால் இந்தத் தனிமையின் துன்பத்திற்கு எல்லையே இல்லையே? கடலின் ஆழத்தையாவது மீட்டரில் அளந்து விடலாம். ஆனால் இந்த ஏக்கத்தின் ஆழத்தை எந்த மீட்டரால் அளப்பது?

கூடி இருக்கும்போது கிடைத்த இன்பம் கடலளவு என்றால், பிரிந்திருக்கும் போது அந்த இன்பத்தை நினைத்து நினைத்து ஏங்கும் துன்பம் அந்த கடலையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது!

காதல் என்பது எவ்வளவு விசித்திரமான விஷயம்?

அது தரும் இன்பம் எவ்வளவு இனிமையானதோ, அதே அளவுக்கு அது தரும் துன்பமும் கொடூரமானது. இன்பம் அளிக்கும் அதே ஆள்தான், அவன் இல்லாததால் துன்பத்தையும் அளிக்கிறான்.

மணி இரவு பனிரெண்டே முக்காலைக் கடந்தது.

வாட்ஸ்அப்பில் ஏதோ அறிவிப்பிற்கான சத்தம் கேட்டது. '

டிங்'.

அவள் பதறிப்போய் அலைபேசியை எடுத்தாள்.

அவனிடமிருந்து காணொளி அழைப்பு!

படபடக்கும் இதயத்தோடு அந்த அழைப்பை ஏற்றாள்.

திரையில் அவன் முகம் வந்தது. குப்பாயமும் முழுகால் சட்டையும் அணிந்திருந்தான். பின்னணியில் சிகாகோ நகரம்.

"ஹேய் பொண்டாட்டி! இன்னும் தூங்கலையா? என்னாச்சு, முகம் ஒரு மாதிரி இருக்கு?"

அவன் குரலைக் கேட்டதும் அவள் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வழிந்து கன்னத்தில் இறங்கியது.

"ஏய் என்னடி? உடம்புக்கு எதுவும் முடியலையா? ஏன் அழுவுற?" அவன் குரலில் பதற்றம் தொற்றியது.

அவள் புன்னகைக்க முயன்றாள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

"ஒன்னுமில்லைங்க. சும்மா தான்."

"சும்மாவா? பொய்யி. என்ன ஆச்சு சொல்லு? நான் உடனே கிளம்பி வரவா?"

"பைத்தியமா நீங்க? அங்கே வியாபாரச் சந்திப்பு இருக்குல்ல? எனக்கு ஒன்னுமில்லை."

"அப்புறம் ஏன் கண்ணுல தண்ணி?"

அவள் அலைபேசித் திரையில் தெரியும் அவன் முகத்தை விரல்களால் மெதுவாகத் தொட்டாள்.

"ஒரு குறள் ஞாபகத்துக்கு வருது!"

"குறளா? இந்த நடுராத்திரியிலயா? என்ன குறள்?"

"இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது."                         (குறள், 1166)

அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். அவனுக்கு அதன் ஆழம் புரியக் கொஞ்ச நேரம் பிடித்தது. பிறகு மெல்லச் சிரித்தான்.

"அப்படின்னா என்ன அர்த்தம்?"

"நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா இருந்தோமே, அந்த இன்பம் கடல் மாதிரி பெருசு ."

"ம்ம்… அப்புறம்?"

"ஆனா நீங்க இல்லாதப்போ, உங்களை நினைச்சு நான் படற இந்தத் துன்பம் இருக்கே, அது அந்த கடலை விடவும் ரொம்ப ரொம்ப பெருசுங்க!"

அவன் திரையில் அவளையே பார்த்தான். அவனுடைய குறும்புச் சிரிப்பு மறைந்து, கண்களில் ஆழமான பாசம் வந்தது.

"இன்னும் பதினைஞ்சு நாள்தான்டி பொண்டாட்டி. இந்த வியாபார வேலைகள் முடிஞ்சதும் முதல் விமானம் பிடிச்சு வந்துடுவேன். அப்புறம் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்."

"நிஜமாவா?"

"சத்தியம். சரி, இப்போ போய் சமத்தா தூங்கு. நான் இன்னும் நாலு மணி நேரத்துல உன்னைக் கூப்பிடுறேன்."

"சரிங்க. உங்களைப் பார்த்தது, கடல்ல தத்தளிச்சுக்கிட்ட இருந்த எனக்கு ஓர் உயிர்காக்கும் படகு கிடைச்சது போல இருக்கு. வைக்கிறேங்க."

"நானும் வைக்கிறேன் பொண்டாட்டி. உன்னை ரொம்ப நேசிக்கிறேன்டி."

"நானும்தான் புருஷா!"

இணைப்பு அணைக்கப்பட்டது.

அவள் அலைபேசியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

இப்போதும் அறை தனிமையாகத்தான் இருந்தது. அவன் சிகாகோவில்தான் இருந்தான். பிரிவுத் துயரம் முழுமையாக மறையவில்லை.

ஆனால், அவனுடைய ஒரு சொல், அவனுடைய ஒரு பார்வை அந்த பெருங்கடல் போன்ற துன்ப அலையைச் சற்று ஒடுக்கி வைத்திருந்தது.

அவள் கண்களை மூடினாள். அவனின் நினைவுகள் இப்போது அவளை வாட்டவில்லை; மாறாக, ஒரு மெல்லிய போர்வையைப் போல அவளைப் போர்த்திக் கொண்டன.

நாளை விடியும்.

நாட்கள் நகரும்.

துன்பக் கடல் வற்றும்.

மீண்டும் இன்பக் கடல் பெருகி வரும்.

துன்பத்திற்குப் பின் இன்பம். அந்த நம்பிக்கையைத் தருவதே காதல் வாழ்க்கை!

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment