25 Sept 2026

மை எழுதாத கண்ணும் கவி எழுதும் பெண்ணும்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 47

மை எழுதாத கண்ணும் கவி எழுதும் பெண்ணும்!

வாசலில் இரு சக்கர வாகனம் வந்து நிற்பதை அறிவிக்கும் வகையிலான ஒலிப்பான் சத்தம்.

சமையலறையில் சமையல் அழுத்தற்கலனின் விசில் சத்தம்.

இரண்டும் சேர்ந்து வீட்டின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை.

 டக் டக் என்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

அவன்தான்.

சரியாகக் காலை பத்தரை மணி.

ஞாயிற்றுக்கிழமை என்றாலும், இருவருக்கும் அலுவலகப் பணியின் மிச்ச சொச்சம் இருந்தது. அதை முடிப்பதற்காகத்தான் அவள் வரச் சொல்லியிருந்தாள்.

அம்மா இப்போதுதான் கோயிலுக்குக் கிளம்பியிருந்தாள். அப்பா நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தார்.

வீட்டில் அவள் மட்டும்.

அவள் கதவைத் திறந்தாள்.

"பயங்கர வெயில். குடிக்க குளிர்ச்சியா தண்ணி கிடைக்குமா?" என்றான் அவன், தன் செருப்பைக் கழட்டியபடியே.

"வெறும் தண்ணியா? குளிர்பானமே இருக்கு." என்றபடியே உள்ளே வந்தவள், திடீரென அறையின் சுவரில் பொருத்தியிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள்.

அவன் கோப்புகள் அடங்கிய பையை மெத்தை இருக்கையில் வைத்து விட்டு, அவளது செய்கையைக் கவனித்துக்கொண்டே, "என்ன மேடம் திடீர்னு கண்ணாடியெல்லாம் பார்க்குறீங்க? மிரர் இமேஜ் கோட் ஏதாவது ஒர்க் ஆகலையா?" என்று நக்கல் அடித்தான்.

அவள் கண்ணாடிக்குள்ளிருந்து அவனைப் பார்த்தாள். அவளது கண்களில் வழக்கமாகத் தீட்டப்பட்டிருக்கும் மை அன்று இல்லை. வழக்கத்திற்கு மாறாக அவளது கண்கள் மிகவும் இயல்பாக, சற்றே கலைந்த இமைகளுடன் இருந்தன.

"இல்ல. இன்னைக்கு நம்ம ரெண்டு பேருக்குமே ஆபீஸ் லீவு. இருந்தாலும் வேல இருக்கு. அது கிடக்கட்டும். ஆனா எனக்கு ஒரு சந்தேகம். அதான் கேட்கலாம்ன்னு பார்த்தா..."

"ம். கேளுங்க மேடம். உங்க சந்தேகத்துக்கு விடை கண்டுபிடிக்கிறதுதான் என்னோட முழு நேர வேலையாச்சே!"

அவள் எதிரே இருந்த மெத்தை இருக்கையில் வந்து அமர்ந்தாள். குளிர்பான கூஜாவை அவனிடம் நகர்த்தினாள்.

"நம்ம தமிழ் வகுப்பு, இலக்கியம்லாம் பத்தி என்ன நினைக்கிறே? படிக்கும்போது திருக்குறள்லாம் மனப்பாடம் பண்ணி இருப்பியே, ஞாபகம் இருக்கா?"

அவன் குளிர்பானத்தை உதட்டில் வைத்தபடியே நிறுத்தினான். புருவங்களை உயர்த்தி, "தமிழ், இலக்கியம், திருக்குறள். எல்லாம் செமஸ்டர் எக்ஸாம்க்கு முந்தின நாள் ராத்திரி படிக்கிறதுக்கு மட்டும்தானே? அதுல என்ன சந்தேகம்?"

அவள் தன் கைகளை மடக்கிக் கட்டிக்கொண்டு, லேசான புன்னகையுடன் சொன்னாள்,

"கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து."                            (குறள், 1127)

இதோடு அர்த்தம் என்ன தெரியுமா?"

அவன் குளிர்பான கூஜாவை அருகிலிருந்து சிறுமேசையின் மீது வைத்துவிட்டு, அவளையே உற்றுப் பார்த்தான். அவனுடைய முகத்தில் ஒரு மெல்லிய ஆச்சரியம், அதைத் தொடர்ந்து ஒரு குறும்புச் சிரிப்பு எழும்பியது. "வாவ்! அதான் இன்னிக்கு கண்ணுக்கு மை போடலையாக்கும்!" அவன் கை தட்டினான்.

"அர்த்தம் தெரியுமா? அதான் கேள்வி." அவள் கோபப்படுவது போல் பாசாங்கு செய்தாள்.

அவன் ஒரு நிமிஷம் பேசாமல் அமைதியாக இருந்தான். வீட்டின் அமைதியை அறையில் சுழலும் மின்விசிறியின் சத்தம் மட்டுமே நிரப்பியது. அவனது கண்கள் அவளது இயல்பான, மை இல்லாத கண்களையே கூர்ந்து கவனித்தன.

"அப்ப…" அவன் மெல்லிய குரலில் தொடங்கினான். "இன்னைக்கு நீ கண்ணுக்கு மை போடாமல் வேலையைப் பார்க்க விடாமல், என்கிட்ட பேசிக்கிட்டே இருக்கிறதுக்குக் காரணம் இந்தத் திருக்குறள் கோட்பாடுதானா?"

"நிச்சயமாக!" அவள் தன் கண்களை விரித்து, தீவிரமாகத் தலையசைத்தாள். "யோசிச்சுப் பாரு. நான் கண்ணுக்கு மை எழுதல. அது ஒரு செயற்கையான தடுப்புச் சுவர் மாதிரி. என் கண்ணுக்குள்ள இருக்கிற உன்னை, வெளிய இருக்கிற உலகம் பாத்துடக் கூடாதுன்னு நான் மறைக்கிற மாதிரி ஆயிடும். ஆனா, எனக்குத்தான் உன்னை யார்கிட்டேயும் மறைக்கத் பிடிக்கலையே! உன்னை என் கண்கள் மூலமா எல்லாருக்கும் தெரிய வைக்கணும்னு தோணுது. அதனால இனிமே மை கிடையாது.!"

அவன் தன் இருக்கையில் மேலும் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்தான். சட்டைப் பையிலிருந்த பேனாவை எடுத்துச் சுழற்றினான். "அட! திருவள்ளுவரை இப்படி ஒரு லவ் ப்ரோபோசலுக்கு யூஸ் பண்ணலாம்னு எந்தக் கோப்புல படிச்சீங்க மேடம்?"

"இதுக்கு பேருதான் ஸ்மார்ட் ரொமான்ஸ்!" அவள் தன் முகத்தை வெட்கத்தால் திருப்பிக் கொண்டபடியே, "இப்ப வேலையைப் பார்ப்போமா? இல்ல வள்ளுவரோட இன்னொரு குறள் பத்திப் பார்ப்போமா?"

அவன் தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல், "மை போடலைனாலும் பரவாயில்லை. ஆனா இந்தக் கோப்புகள இன்னிக்கு முடிச்சாகணும். இல்லைன்னா நாளைக்கு நம்மோட இருக்கைக் கண்காணிப்பாளர் வந்து நம்ம ரெண்டு பேரோட கண்ணையும் கடிச்சாலும் கடிச்சு வெவ்சிடுவாரு!" என்று அவன் சொல்ல, அவள் எழுந்து வந்து அருகில் அமர்ந்தபடி தன் நிலவு போன்றிருந்த முகத்தில் இருந்த மலர் போன்ற கண்களை அவன் தோள்களில் புதைத்துக் கொண்டாள்.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment