23 Sept 2026

டெலிட் ஆகாத நினைவுகள்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 45

டெலிட் ஆகாத நினைவுகள்!

அவன் தன் மடிக்கணினிப் பையைத் தோளில் மாட்டி, முதுகுக்குப் பின்னே திருப்பியபடி, இருசக்கர வாகனத்தின் மீது ஏறி அமர்ந்தான். ஓர் உதை. வண்டி விர்ரென்று கிளம்பி விட்டது.

வண்டியை விட வேகமாக அவளது நினைப்பும் கிளம்பி விட்டது. அவள் நினைப்பு இப்படித்தான். வந்தால் போகாது. வராமலும் இருக்காது.

அந்த நினைப்பைத் துடைத்தெறிய வண்டியின் வேகத்தை நாற்பது கிலோ மீட்டர் வேகத்திலிருந்து அறுபதாக்கி, திருவாரூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வண்டியைத் திருப்பினான். நினைப்பு எண்பது கிலோ மீட்டர் வேகமெடுக்க அறுபதை எண்பதாக்கினான். அப்போதும் விடுவதாயில்லை. எண்பதை நூறாக்க நினைத்தவன் நினைப்பில்,

"உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்

ஒள்ளமர்க் கண்ணாள் குணம்."                             (குறள், 1125)

என்ற குறள் வந்து கச்சிதமாக ஒட்டிக் கொண்டது.

வள்ளுவர் எப்படி இவ்வளவு துல்லியமாக எழுதினார்? அதுவும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு. கேள்வி அவனைக் குடைந்தது. அதன் ஊடே நினைவுகள் பின்னோக்கிச் சுழன்றன.

ஆறு மாதங்களுக்கு முந்தைய அந்த நாட்கள்.

அவள்.

அவள் என்றால் அவளது பார்வைதான் மொத்தமும். அவள் கண்கள் இரண்டு லேசர் ஸ்கேனர்கள் மாதிரி சல்லடை போட்டுத் துழாவும். எதையோ தேடும். எதையோ மறைக்கும். அந்தப் பார்வையைப் புரிந்து கொள்ள ஒரு யுகம் போதாது.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அவளது கண்கள், அந்தப் பார்வை. அதுதான் இப்போதும் பிரச்னை அவனுக்கு. அவளுக்குக் கோபம் வந்தாலும், யோசனை என்றாலும், அல்லது ஒரு சின்னச் சலிப்பு என்றாலும் கண்களில்தான் முதலில் தெரியும். ஒள்ளமர்க் கண் என்று வள்ளுவர் கணக்கச்சிதமாகச் சொல்லி விட்டார்.

முதல் முறை அவளைப் பார்த்தபோது இதே பார்வைதான். அப்போதும் சரி, இப்போதும் சரி மறக்க முடியாத பார்வை. ஆனால் அங்குதான் விஷயமே இருக்கிறது. ஏனென்றால், அவனோ எதையும் எளிதில் மறப்பவன். நேற்று வண்டிச் சாவியை எங்கே வைத்தோம் என்று தேடுவான். சற்று நேரத்துக்கு முன்பு பேசிக் கொண்டிருந்த அலைபேசியை எங்கே வைத்தோம் என்று தடுமாறுவான். அப்படிப்பட்டவனுக்கு அந்தப் பார்வையை மட்டும் மறக்க முடியவில்லை. மறந்தால்தானே நினைப்பதற்கு என்று தர்க்கப்படி பார்த்தாலும் மறக்கவே முடியவில்லையே.

ஒரு முறை அவனது மடிக்கணினி பழுதாகி, அவனது மூன்று மாத உழைப்பு ஒரே நொடியில் காலியானது. வாழ்க்கையே முடிந்தது என்று சோர்ந்து உட்கார்ந்திருந்தான். அப்போது தேவதையைப் போல வந்தவள், அவனது மடிக்கணியை வாங்கி, அசாத்திய அமைதியுடன் அதன் அத்தனை நிரல்களையும் மீட்டெடுத்தாள்.

"இதைக்கூடவா மறந்துட்டீங்க? ஆட்டோ சேவ் ஆன் பண்ணி இருக்கேனே!" என்றாள் பாசாங்கில்லாத அந்தப் பார்வையுடன்.

அவள் நகரப் பார்க்கும்போது, அவன் சட்டென்று அவளது கையைப் பிடித்துவிட்டான். அதிர்ந்துவிட்டாள் அவள். "மன்னிக்கணும், நான் ரொம்ப கேர்லெஸ். உன்னை மாதிரி யாராலும் இருக்க முடியாது." என்றான்.

அவள் முறைக்கவில்லை. ஒரு மெல்லிய புன்னகையுடன் கையை விடுவித்துவிட்டுச் சென்றாள் அவனின் தவிப்பான பார்வையை எதிர்கொண்டு.

அவள் இல்லாமல் இனி அவன் இல்லை என்று முடிவெடுத்த அந்தக் கணம் அவன் மனதில் நிழலாடியது.

அத்துடன், கடைசியாக சண்டை போட்டுப் பிரிந்தபோது அவள் சொன்ன, "உனக்கு உன் கேரியர் முக்கியம். நான் உனக்கு ஓர் ஆப் அவ்வளவுதான்." என்ற வார்த்தைகளும் மனதில் கோர தாண்டவமாக நர்த்தனமாடின. எல்லாம் நடந்து நூற்று எண்பது நாட்களைக் கடந்தாலும், இதோ இந்த நொடியில் நடந்தது போலிருந்தது அவனுக்கு.

அவள் அந்த நொடியில் சொன்னது அத்தனையும் பொய். அவளுக்கும் தெரியும், அது பொய் என்று. ஆனாலும் சொன்னாள். இருவருக்குள்ளிருந்த தன்முனைப்பு இருவரையும் விடுவதாயில்லை.

இப்போது அவள் பெங்களூரில் இருக்கிறாளோ, சென்னையில் இருக்கிறளோ? யார் கண்டது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் எல்லாவற்றிலும் அவன் அலைபேசி எண் உட்பட அனைத்தையும் ப்ளாக் செய்தாள். லின்க்ட்இனில் மட்டும் ஒரு போட்டோ இருந்தது. வேலை மாறியதில் கொஞ்சம் மெலிந்திருந்தாள். அந்தப் பார்வை அதே தீவிரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது.

இப்போது வண்டியின் வேகம் அந்தத் தேசிய நெடுஞ்சாலையில் நூறைக் கடந்திருந்தது. அவன் கண்கள் தாரை தாரையாக கண்ணீரைக் கொட்டின.

அதற்கு மேல் முடியாமல், வண்டியின் வேகத்தைக் குறைத்து, ஓரம் கட்டினான். ஒரு மரம் கூட துணையில்லாத அந்த சாலையோரத்தில் சத்தமிட்டு ஓவென்று அழுதான். "இதுக்கு மேல முடியலடி. நான் செத்துடுவேன் போலிருக்குடி!" என்று அவள் இந்த உலகத்தில் எங்கிருந்தாலும் அவளுக்குக் கேட்கும்படி அவ்வளவு உரத்த குரலெடுத்துக் கத்தினான்.

அவன் மறக்க முயற்சிக்கிறான். ஆனால் மனித நினைவு என்பது கணினியின் ரேம் மாதிரி இல்லை; பெர்மனென்ட் ஹார்ட் டிஸ்க். எதை அழிக்க நினைக்கிறானோ அதுதான் பிரதானமாக வந்து உட்கார்ந்துகொள்கிறது.

"மறக்கவே மாட்டேன்ங்கிறீயே!" அவளது குரல் காதில் ஒலிப்பது போல் இருந்தது.

மறப்பது மனித இயல்பு என்கிறார்கள் விஞ்ஞானிகள். அது ஒரு விஞ்ஞானப் பொய். சில முகங்களை, சில பார்வைகளை மறக்கவே முடியாது. மனித மூளைக்கு அந்த டெலிட் பட்டன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அலைபேசியை எடுத்தான். வழக்கம் போல் இன்ஸ்டாகிராம் குறியீட்டைத் தொட்டான். அவளால் பிளாக் செய்யப்பட்டிருக்கிறான்தான். ஆனாலும் என்றாவது ஒரு நாள் அன்ப்ளாக் ஆகும் என்ற நப்பாசையில் அடிக்கடி இப்படிச் செய்கிறான்.

அதே நேரத்தில் டிங் என்று அலைபேசியில் ஓர் அறிவிப்புச் சத்தம்.

புதிய எண்ணிலிருந்து ஒரு வாட்ஸ்ஆப் செய்தி.

"டேய் லூசு! உன்னை விட்டுப் போயிட்டா, என்னைத் தேட மாட்டே இல்லே?"

அவன் அழுது கொண்டிருக்கும் முகத்தோடு அந்தப் புதிய எண்ணுக்கு வாட்ஸ்ஆப் அழைப்பைச் செய்ய, அடுத்த நொடியே அவள் அழைப்பை ஏற்க,

"மறக்க முடியலடி! " அவன் கதறி அழ,

"மறக்க முடியலடா!" அவளும் கதறி அழுதாள்.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment