6 May 2026

லவ் பாம்பிங் – இதயத்தில் இடம்பிடித்து, பையில் கைவைக்கும் கலை!

லவ் பாம்பிங் – இதயத்தில் இடம்பிடித்து, பையில் கைவைக்கும் கலை!

வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட விலைமதிப்பற்றது அன்பு என்பார்கள். ஆனால், இன்றைய இன்டர்நெட் காலத்தில் அன்பின் விலை எவ்வளவு தெரியுமா? உங்கள் வங்கிச் சேமிப்பில் எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவுதான்.

சமீபகாலமாக லவ் பாம்பிங் என்றொரு போர்முறை பரவி வருகிறது. இது ஒன்றும் ராணுவ ரகசியம் அல்ல. உங்கள் போனுக்கு வரும் ஒரு ஹாய் டியர் மெசேஜில்தான் இதன் தொடக்கம் இருக்கிறது.

யாரோ தெரியாத ஒரு முகவரியிலிருந்து மெசேஜ் வரும். அந்த டி.பியை பார்த்தால் ஏதோ ஒரு சினிமா ஸ்டார் போல இருப்பார். உண்மையில் அந்தப் படத்தின் பின்னால் இருப்பது ஒரு நடுத்தர வயது ஆசாமியாகவோ அல்லது ஏ.ஐ உருவாக்கிய பிம்பமாகவோ இருக்கலாம்.

நமக்குத்தான் யார் அது? என்று தெரிந்துகொள்ளும் அரிப்பு அதிகம் அல்லவா?

யார் நீங்க? என்று ஒரு மெசேஜைத் தட்டிவிடுவோம்.

அவ்வளவுதான், தூண்டில் விழுந்துவிட்டது.

உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப நாளா சொல்லணும்னு நினைச்சேன். பயமா இருந்தது, என்று அந்தப் பக்கம் இருந்து பதில் வரும்.

இன்றைய தனிமை உலகில், யாராவது நம்மிடம் நாலு வார்த்தை அன்பாகப் பேச மாட்டார்களா என்று ஏங்குபவர்களுக்கு இது அமிர்தம்.

மெல்ல மெல்ல மெசேஜ்கள் போன் கால்களாக மாறும். காலையில் குட் மார்னிங் தொடங்கி இரவு குட் நைட் வரை உங்கள் காதுகள் அந்தப் பக்கத்து குரலுக்கு அடகு வைக்கப்படும்.

இந்த இடைவெளியில், நீங்கள் உங்கள் சொந்தக் கதை, சோகக் கதை மற்றும் யாருக்கும் தெரியாத அந்தரங்க ரகசியங்கள் அனைத்தையும் வாந்தியெடுத்து விடுவீர்கள். அந்த ரகசியங்கள்தான் பின்னாளில் உங்களை மிரட்டப் பயன்படும் வெடிகுண்டுகள்.

திடீரென்று ஒரு நாள் அந்தப் பக்கத்தில் இருந்து அழுகைக் குரல் கேட்கும்.

அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்!

அப்பாவுக்கு அப்பென்டிசிடிஸ்!

ஸ்காலர்ஷிப் பணம் கட்டவில்லை என்றால் என் படிப்பு பாழாகிவிடும்!

இப்படி ஏதாவது அந்தக் குரல் உங்கள் நெஞ்சை உருக்கும்.

பாச மழையில் நனைந்த உங்களுக்கு, அவர் கேட்பது ஐந்தாயிரமோ பத்தாயிரமோ பெரிய விஷயமாகத் தெரியாது. அன்புக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா? என்று பெருந்தன்மையாகப் பணத்தை அனுப்புவீர்கள். பிறகு அந்தத் தொகை ஆயிரங்களில் தொடங்கி லட்சங்களில் முடியும் வரை உங்களுக்குப் புத்தி வராது.

இதுதான் லவ் பாம்பிங்கிற்கான ப்ளோ சார்ட். இந்தப் ப்ளோவை எப்படி என்ட் கார்டுக்குக் கொண்டு வருவது என்றால்,

உங்களைப் பிடிக்கும் என்று உருகுபவரை நேரில் வரச் சொல்லுங்கள். நான் இமயமலைச் சாரலில் இருக்கிறேன் என்றோ, கேமரா முன்னால் வர வெட்கமாக இருக்கிறது என்றோ சொன்னால், அந்த அன்பை அங்கேயே பிளாக் செய்யுங்கள்.

உங்கள் அந்தரங்கங்களை யாரிடமும் பகிராதீர்கள். இன்றைய டிஜிட்டல் உலகில், உங்கள் ரகசியம் உங்கள் கையில் இருக்கும் வரைதான் அது சீக்ரெட். இன்னொருவருக்குத் தெரிந்துவிட்டால் அது உங்களுக்கு எதிரான ஆயுதம்.

டி.பியில் இருக்கும் அழகிய முகமும், போனில் கேட்கும் கனிவான குரலும் நிஜமானவை அல்ல. ஒரு சின்ன ஆப் இருந்தால் எருமை மாட்டைக் கூட ஐஸ்வர்யா ராய் போலப் பேச வைக்கலாம்.

அன்புக்காக ஏங்குவது மனித இயல்பு. ஆனால், அந்த ஏக்கம் உங்களை ஓர் ஏமாளியாக மாற்ற அனுமதிப்பது முட்டாள்தனம்.

தெரியாத எண்ணிலிருந்து ஹாய் டியர் வந்தால், அதற்கு ஹலோ சார் என்று பதில் சொல்லிவிட்டு, பிளாக் செய்வதே உங்கள் பணப்பைக்கும், நிம்மதிக்கும் நல்லது.

அன்பு என்பது இதயங்களைப் பரிமாறிக்கொள்வது, எலக்ட்ரானிக் பணப்பரிமாற்றம் செய்வது அல்ல!

*****

No comments:

Post a Comment