25 May 2018

சில சாதனைச் சரித்திரங்களுக்கு...


கேள்விக்கு என்ன பதில்?
            முடிவே பதிலைத் தீர்மானிக்கிறது. மனம் பல நேரங்களில் முடிவை தன்னுள் இருத்தாமல் பதில் கூறிக் கொண்டு இருக்கும்.
            எப்படி பதில் அளிக்கப் போகிறோம் என்பது எதை விரும்புகிறோமோ அதைப் பொருத்ததாக அமைகிறது. விருப்பங்களின் சலனங்கள் மனதை அலைக்கழிக்கிறது. பல முட்டாள்தனமானப் பதில்களைச் சொல்வதற்குக் காரணமாக அந்த விருப்பங்களினால் ஏற்படும் சலனம் அமைகிறது.
            பதில்கள் பெரும்பாலும் இழந்து விடுவோமோ என்ற பயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதனால்தான் பல நேரங்களில் பதில்கள் மழுப்பல்களாக அமைந்து விடுகிறது. ஆனால் இழப்பது நல்லது. இழப்பில் புதிய ஒன்று கண்டடையப்படுகிறது. இருப்பதை இழக்காமல் புதிய ஒன்றைக் கண்டடைவது முடியாது. கோப்பை மீண்டும் நிரம்ப அது காலியாக வேண்டும். இருக்கின்ற கோப்பையில் நிரப்ப நினைத்தால் அது வழிந்ததான் ஓடும்.
*****
சில சாதனைச் சரித்திரங்களுக்கு...
            கோபத்தை வெளிக்காட்டி அதன் மூலம் சில காரியங்களைச் சாதித்து விடலாம் என நினைக்கலாம். அதன் முடிவுகள் முட்டாள்தனமாகவே அமையும். கோபத்தால் செயலைச் சாதித்து இருந்தாலும் அதனால் எதிரிகளையும் சாம்பாதிக்க வேண்டியிருக்கும்.
            கோபப்பட்டுச் சொல்வதை அக்கறையாகச் சொல்வதாக யாரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். சம்பந்தம் இல்லாமல் கோபப்படுவதாகத்தான் நினைத்துக் கொள்வார்கள்.
            அவர்களின் விருப்பம் போல் இருப்பது அவர்களது உரிமை. அதில் குறுக்கிடுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். தேவையில்லாமல் குறுக்கிட்டு அவர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கக் கூடாது.
            அது போன்ற விசயங்களில் உடனடியாக எதையும் சாதித்து விட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சொல்லித்தான் எதையாவது சாதிக்க முடியும். அதுவும் நூறு சதவீத அளவுக்கெல்லாம் இல்லை. இருபது சதவீதம் சாதித்தால் கூட அது நூறு சதவீத அளவுக்குச் சமானம்.
*****

24 May 2018

'என்னமோ போ' என்பதற்கான 12 கருத்துருக்கள்


'என்னமோ போ' என்பதற்கான 12 கருத்துருக்கள்
            1. உதிர்க்கும் மரம் துளிர்க்கும். இளைப்பாறும் வயல் இரண்டு மடங்கு விளையும். தேக்கத்துக்குப் பின் ஒரு பாய்ச்சல் இருக்கும்.
            2. ஒரே விசயத்தில் மனம் இருக்க விரும்புவதில்லை. அவ்வபோது மாறிக் கொள்ளவே விரும்பும். அதற்கு இடம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு இடம் கொடுக்க மனம்தான் என்றாலும் அதற்கே மனமிருப்பதில்லை.
            3. ஆத்திரப்படுவதில் ஓர் அர்த்தமும் இல்லை. அதனால் விளைவுகள் அதி மோசமாகத்தான் போகுமே தவிர குறையாது. சாதுர்யமாக சிந்திக்கலாம். அது நல்ல பலனைத் தரும். இல்லாவிட்டால் கூட அப்படியே விட்டு விடலாம். நிலைமை அவ்வளவு மோசமாகாது.
            4. அறிந்த தளத்தில் நடக்கும் விசயங்களைக் கவனிக்கிறோம். அறியாத தளத்தில் நடக்கும் விசயங்களைக் கவனிக்கத் தவறி விடுகிறோம். அங்கிருந்துதான் எப்போதும் கல் வந்து விழும்.
            5. ரொம்பப் போட்டு அலட்டுவதற்கு எதுவுமில்லை. அது இறுக்கத்தில் கொண்டு போய் முடியலாம். அதுவும் இல்லாமல் எளிமையான காரியங்களையும் அது கடினமாக்கி விடும்.
            6. பேசும் போது கவனமாகப் பேசுவது கஷ்டம். பெரும்பாலும் பாசிட்டிவாகப் பேசி விடுவது ஈஸி. எளிமையான எஸ்கேப்!
            7. மனிதர்கள் ரொம்ப சுயநலமானவர்கள் என்பதால் அவர்களின் சுயநலத்திற்கு ஏதேனும் குந்தகம் நேர்ந்தால் கொதித்து எழுந்து விடுவார்கள். அதனால் குந்தகம் விளைவிக்காமல் செயல்படுவது கடினமாக இருக்கிறது.
            8. பொறுமையாகவும், அமைதியாகவும் இருந்தால் அதை விட சாதனை எதுவுமில்லை. அத்தனையும் அடையலாம். எப்படி என்றால் அதற்குள் அவசரப்பட்டவர்களும், அமைதியற்றவர்களும் மண்டையைப் போட்டு இருப்பார்கள்.
            9. அதிகமான எதிர்பார்ப்புகளை நிர்ணயித்துக் கொள்ளக் கூடாது. அதிகமான ஏமாற்றத்திற்கு உள்ளாகலாம். உச்சபட்ச முயற்சியிலும் இறங்கி விடக் கூடாது. மனமுறிவில் கொண்டு போய் நிறுத்தி விடும். சராசரியாக செயல்பட யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதால் அப்படி இருக்கலாம். போட்டிகள், பொறாமைகள் உண்டாகவே உண்டாகாது.
            10. மனச்சோர்வு திடீர் திடீர் என்று ஆட்கொண்டு விடும். அது இயல்புக்கு மீறிய ஒரு செயலைச் செய்ய முற்பட்டு செய்ய இயலாமையால் ஏற்படுவது. அப்போது அதில் எதிர்பார்ப்பு அதிகரித்து விடலாம். அதனால் ஏமாற்றமாக உணரலாம். மற்றபடி நாமாவது ஏமாறுவதாவது?
            11. நீ வெளிவந்தாலும் ஒன்றுதான், வெளிவராவிட்டாலும் ஒன்றுதான். புதைத்தப் பின் யார் தோண்டிப் பார்க்கப் போகிறார்கள்? முளைத்து வருவது உன் சாமர்த்தியம்!
            12. நான் யார் என்பதைக் காட்ட நினைத்தால் அவர்கள் யார் என்பதைக் காட்ட நினைப்பார்கள். நான் யார் என்பதைக் காட்டாமல் இருந்தால் அவர்கள் யார் என்று புரியாமலே அவர்களும் இருந்து விடுவார்கள்.
*****

23 May 2018

வலைக்குள் சிக்கிக் கொள்ளும் வலை


வலைக்குள் சிக்கிக் கொள்ளும் வலை
            எல்லாம் மனம்தான். வலை விரித்தவனே சிக்கிக் கொள்ளும் வலை அது. குழி வெட்டியவனே விழுந்து விடும் குழி அது.
            அமைதியாக்குகிறது, அமைதியைக் குலைக்கிறது, இயல்பாக்குகிறது, இயல்பை அழிக்கிறது. அது வெறும் மனம்தான். வெவ்வேறு வடிவங்களில் அணுகிப் பார்க்கிறது, ஒரு மாறுவேடக்காரரைப் போல. மாறுவேடக்காரரை உண்மையாக நினைத்துக் கொள்வது போலத்தான் மனதைக் கொண்டவரின் நிலை.
            உண்மையில் அந்த மனம் அவருடையதுதான். இன்னொருவர் மேல் வெறுப்பு கொள்ளும் அந்த மனம் அவருடையதுதான். அது அவர் உருவாக்கிய அல்லது அவருக்குள் உருவான அவரது மனம்தான். அவருள் இருக்கும் வேறொன்றல்ல அது.
            ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு அது ஒவ்வொன்றும் ஓர் இயக்கத்தை உருவாக்கிக் கொள்கிறது. முரண்பாடுகள் முற்று பெறும் போது எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது.
            மனதைப் பொருத்த வரையில் ஆரம்பத்தில் அது தான் உருவாக்கியப் போராட்டக்களம் என்பதில் தெளிவாக இருக்கும். போகப் போக மனம் அதை மறந்து விடச் செய்யும். மனம் தானே ஒரு போராட்டக்களமாகி விடும். தானே ஒரு போராட்டம் என்ற கற்பிதத்துக்கு ஆளாகி விடும். மனதைப் பொருத்த வரையில் நடக்கும் மோசமான விசயம் இது.
            மனதுக்கு எந்த வழிமுறைகளையும் வழங்க வேண்டியதில்லை. அதற்குத் தேவையான வழிமுறைகளை அது உருவாக்கிக் கொண்டே போகும். அதுதான் மனதின் வழிமுறை. செய்ய வேண்டியது எல்லாம் எளிமையாக இருப்பது மட்டுமே. அதுதான் பாதை. அந்தப் பாதைதான் சரியானப் பாதை.
            உணர்ச்சிகள், எண்ணங்கள் மூலம் அமைக்கும் பாதை மனதின் பாதை. ஆபத்தானப் பாதை. எப்படிப்பட்ட பாதையில் கடந்து வந்தோம் என்பது கூட ஒரு கட்டத்தில் புரியாத நிலையை உருவாக்கி விடும் ஒரு வித போதை நிறைந்த பாதை.
            எப்படிப்பட்ட பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது முக்கியம். எளிமைதான் அந்தப் பாதை. அதுதான் கடினமானப் பாதையாகவும் இருக்கிறது. மெத்தையிலேயே படுத்து விட்டு, தரையில் படுப்பதைப் போலிருக்கிறது அது. மனதில் எளிமையாக இருந்து கொள்வது நல்லதொரு பாதை.
            மனதைச் சிக்கலாக்கிக் கொண்டு அவஸ்தைப்படக் கூடாது என்பது கடைசியில் புரியக் கூடும். அப்போது அநேகமாக எல்லாமும் ஒரு முடிவுக்கு வந்து விடக் கூடும். அவரவர் அவஸ்தைக்கு அவரவர் சிக்கலாக வளர்த்து விட்ட மனமே சிக்கலாக முளைத்து அவஸ்தைகளைத் தந்து கொண்டிருக்கும். இதை நாள்பட்டுப் உணர்ந்து கொள்வதில் பிரயோஜனம் இருக்காது. நாள்பட்டு இதைத் தாமாகவே உணர்ந்து கொள்ளும் நிலையும் வந்து விடும். அப்போது அதற்கானப் புண்ணியம் இல்லாமல் போய் விடும்.
*****

22 May 2018

நீர்க்குமிழ்கள் தானாக உடையும்!


நீர்க்குமிழ்கள் தானாக உடையும்!
            ஒவ்வொரு நாளும் ஒரு வித்தியாசமான தினம்தான். ஒரு தினத்தைப் போல் இன்னொரு தினம் இருக்காது. ஒவ்வொருவரின் கைரேகையைப் போல ஒவ்வொரு நாளும்.
            எல்லா நாளும் ஒரே மாதிரியாக இருக்கிறதென்றால் நீங்கள் சிக்கி விட்டீர்கள். காலையில் ஆரம்பித்த கோபம் இரவு வரை நீடிக்கிறது என்றால் ஒவ்வொரு நாளும் அப்படியேத்தான் இருக்கும்.
            காலையில் ஆரம்பித்த கவலை இரவு வரை நீடிக்கிறது என்றால் ஒவ்வொரு நாளும் அப்படியேத்தான் இருக்கும்.
            இது அப்படியே கோபம், கவலை, ஏமாற்றம் போன்ற எல்லா உணர்வுகளுக்கும் பொருந்தும். அந்த அளவுக்கு மனநிலைக் கெட்டிப்பட்டுப் போயிருந்தால் நிலைமை கொஞ்சம் சிக்கல்தான்.
            மனநிலையை மனிதன் தீர்மானித்தது போய், மனநிலை மனிதனைத் தீர்மானிக்கும் நிலை இது.
            மனம் பாட்டுக்குக் கோபப்படட்டும் என்று அமைதியாக இருந்து விடுவது ஒரு நிலை. அதற்கானப் பலன் இருக்கும். தம்முடைய மனநிலையைத் தாம் தீர்மானிக்க முடியும் என்ற நம்பிக்கை வரும் வரை அமைதியாக இருப்பது.
            எதிரிகள் கோபப்பட கோபப்பட அமைதியாக இருந்து பாருங்கள். எதிரிகள் அதே மனநிலையில் இருப்பார்கள். பதிலுக்குக் கோபப்பட்டால் எதிரிகள் அப்கிரேடாகி அடுத்த சிக்கலான மனநிலைக்குப் போய் விடுவார்கள். அவர்கள் அப்படி ஆகி விட்டால் நிலைமை இன்னும் சிக்கல்தான். அவர்களைத் தாண்டி கோபப்பட வேண்டிய நிலையை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்டது போலாகிவிடும். அமைதி இந்த இடத்தில் பெரும் பயன் தரும். பொறுமை அந்தச் சிக்கலான சூழ்நிலையை மாற்றும்.
            தம்முடைய மனதுக்கும் இதே போன்ற நிலை பொருந்தும். மனம் கோபப்பட, கோபப்பட அப்படியே இருந்து விடுவது. அந்த நிலையிலேயே நின்று விடுவது. இதனால் மனநிலை மேலும் சிக்கலாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
            விசயம் அவ்வளவுதான். மனநிலையை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொள்ளக் கூடாது என்பதுதான். மேலும் மேலும் சிக்கலாக்கினால் மனம் அடுத்தடுத்த கட்டங்களுக்குத் தாவும். அடுத்தடுத்த சிக்கலான மனநிலைகள் உருவாகி, செயல்கள் சிக்கல் மிகுந்ததாக உருமாறும்.
            மனதை எளிமையாக வைத்திருப்பது அருமையான வழி. மனமே இல்லாமல் இருப்பது அதை விட அருமையான வழி.
            எல்லா கோபங்களுக்கும், வெறுப்புகளுக்கும், சிக்கல்களுக்கும் இது அருமையான வழி. அவைகள் அப்படியே நிற்கட்டும். அவைகளில் ஏதேனும் செய்ய அவைகள் மேலும் சிக்கலானதாக மாறுமே தவிர எளிமையாகாது.
            மண்ணை நோண்டலாம். புண்ணை நோண்டலாமா? அது போலத்தான். அப்படியே விட்டால் புண் ஆறி விடும். அப்படியே இருந்து விட்டால் மனமும் ஆறி விடும்.
            இது புரிந்தால் நல்லது. புரியா விட்டால் இன்னும் நல்லது. புரியாது போனால் நீங்கள் இது குறித்து எதுவும் மனதில் செய்யவில்லை. அதுதான் செய்தி. அதை அதைத்தான் இது சொல்ல வருகிறது.
            கோபங்கள், கவலைகள், வெறுப்புகள் இவைகள் எல்லாம் நீர்க்குமிழிகள். மெனக்கெட்டு உடைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவைகளாகவே உடைந்து விடும்.
*****

21 May 2018

சமாதானப் பிரியர்களின் கவனத்துக்கு...


சமாதானப் பிரியர்களின் கவனத்துக்கு...
            சில பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்பது புரிபடுவது அவ்வளவு எளிது இல்லை. சுற்றி இருப்பவர்கள் பெரிய குழப்பத்தில் ஆழ்த்தி விடுவார்கள். பெரும்பாலும் சொல்வதைக் காது கொடுத்து கேட்க மாட்டார்கள், கேட்டாலும் அவர்கள் போக்கிற்கு எதையாவது செய்து வைத்து வழி சொன்னவர் மேல் போட்டு விட்டுப் போய் விடுவார்கள்.
            சில தொடர் நிகழ்வுகளைப் பார்க்கும் போது ஒவ்வொன்றிற்கும் பின்னும் நிறைய கேள்விகள் தொக்கி நிற்பது புரியும்.
            முதலில் சமாதானப்படுத்துவதின் தவறுகளைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவரின் நடத்தையை, மனப்போக்கைப் புரிந்து கொள்ள நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது.
            ஒருவரைச் சமாதானப்படுத்துவது ஒன்றும் பெரிய வேலை இல்லை. சமாதானப்படுத்தும் பொழுதுகளில் அவர்கள் சமாதானமாக இருக்கலாம். தொடர்ந்து அவ்வாறு இருப்பார்களா என்பது கேள்விக்குறி. மேலும் யாரைச் சமாதானப்படுத்துகிறோமோ அவர்கள் ஆழம் பார்த்துக் கொண்டும் இருப்பார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
            சமாதானம் கொஞ்சம் கஷ்டம்தான். சமாதானப் பிரியர்கள் கத்திக் குத்துகள் எல்லாம் வாங்கியிருக்கிறார்கள். துப்பாக்கிக் குண்டுகளையும் விழுங்கியிருக்கிறார்கள்.
*****
குற்ற உணர்ச்சியைக் கற்றுத் தருபவர்கள்
            கற்றுத் தருபவர்கள் குற்ற உணர்ச்சியை மையமாகக் கொண்டு ஒரு புரிதலை உருவாக்குகிறார்கள். எதைச் செய்தாலும், எதைக் கேட்டாலும் கேட்டுக் கொண்டுதான் செய்ய வேண்டும் என்கிறார்கள். ஏதாவது தவறாக நடந்து விட்டால் அதற்கு கற்பவரைத்தான் காரணம் சொல்கிறார்கள். அதற்குக் கற்பவரும் ஒரு காரணமாக இருக்கலாம். கற்பவர் மட்டுமே காரணமாக எப்படி இருக்க முடியும்? அதுவும் அறியாமல் நிகழ்ந்ததாக இருக்கலாமே தவிர, அறிந்து நிகழ்ந்ததாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்கள் குற்ற உணர்ச்சியை உருவாக்குவதில் வெற்றி பெற்று விடுவார்கள்.
            சுதந்திரமான மனநிலை என்பது அனைத்துச் சாதகங்களையும் பதற்றம் இல்லாமல், படபடப்பு இல்லாமல் பார்ப்பதுதான். தனக்கு உகந்த ஒன்றை அதிலிருந்து தேர்ந்து கொள்வதுதான்.
            எந்த எண்ணத்திற்கும் யாரும் அடிமை அன்று. அவரவர் விருப்பத்துக்கும், தேவைக்கும் தேர்ந்தெடுத்து செயல்படுத்திக் கொள்ளும் உரிமையும் சுதந்திரமும் அவரவர்க்கு இருக்கிறது.
            நடப்பதென்னவோ ஒருவரை ஓர் எண்ணத்தின் அடிமையாக மாற்றுவதே பரவலாக நடைபெறுகிறது.
*****

20 May 2018

ஒரு வகை பேச்சு வார்த்தை

ஒரு வகை பேச்சு வார்த்தை
ஞாயிற்றுக் கிழமையில்
வேலை நிறுத்தம் செய்வதாகச் சொன்ன
குளியலறையும் கழிவறையும்
கதவடைத்துக் கொண்டன
காபி உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகிறது
இரண்டு இட்டிலியும் கொஞ்சம் சட்டினியும்
ஆர்ப்ப்பாட்டம் செய்வதாகக் கேள்வி
மதிய உணவு கண்டன முழக்கம் எழுப்புகிறது
சிற்றுண்டி வகையறாக்கள் பேரணியில்
இனி இவைகளோடு பேச்சு வார்தை
தொடங்க வேண்டும்
பேசாமல் பேசாமலே இருந்து விட்டால் என்ன
ஞாயிற்றுக் கிழமைகள் உறங்குவதற்கானவை
என்பது புரியாத போராட்டக்காரர்கள்
ஏமாந்துப் போகட்டும்
*****
‍

19 May 2018

நின்று விடும் கலை


நின்று விடும் கலை
            எண்ணம் என்பது இல்லாவிட்டால் எதனுடைய வளர்ச்சியும் இருக்காது. காமம், கோபம், வன்மம், பழிவாங்கல்,... இப்படி எதுவும் வளராது.
            ஒரு நிலையில் தாமாகக் கொடுத்த எண்ணத் தொடர்ச்சி, ஒரு கட்டத்துக்குப் பிறகு தனக்குத் தானே இயங்கத் தொடங்கும். அதை தாம்தான் கொடுப்பதாகவோ அல்லது தம்மை அறியாமல் அது நிகழ்வதாகவோ ஒரு வகையிலான எண்ணத் தொடர்ச்சி உண்டாகலாம்.
            இப்போது என்ன செய்வது?
            எப்படி எண்ணாமல் இருப்பது?
            எண்ணுவதற்குப் பழக்கமாகி விட்ட பின் எண்ணாமல் இருப்பது எவ்வளவு அசாத்தியம்.
            எண்ணமாமல் இருக்கலாம் என்றால் எப்படி எண்ணாமல் இருப்பது என்று எண்ணத் தொடங்கி அதன் எண்ணத் தொடர்ச்சிக்குள் சிக்கி விட நேரிடும்.
            வெறுமனே எண்ணங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது அசாத்தியமானது, நுட்பமானது.
            ஒரு மாற்றத்தை அங்கிருந்துதான் கொண்டு வர முடியும். எதுவும் செய்யாமல் இருப்பது அதாவது எண்ணத் தொடர்ச்சிக்குள் குறுக்கிடாமல் இருப்பதன் அவசியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
            எதற்கும் முயற்சி செய்தே பழக்கப்பட்ட பின், அதற்கு முயற்சி செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள்ள காலம் தேவைப்படும். நிகழ்வது ஒரு நொடி நேரத்தில் நிகழ்ந்து விடும்.
            அது அப்படியே நின்று விடுவது,
            அந்த நிலையிலேயே விட்டு விடுவது,
            அங்கேயே முடிந்து விடுவது
            அதன் பின் தொடர்ச்சி எதுவும் இருப்பதில்லை. அதனால் எல்லாம் யாரும் அசாதாரண மனிதராகி விட மாட்டீர்கள். ஆனால் விட்டு விட முடிகிறது அவ்வளவுதான். தம்மைத் தாமே சுற்றிக் கொண்டிருந்து கட்டுகளிலிருந்து அவிழ்த்துக் கொண்டு விடுபட்டு விடுதல் நிகழ்ந்து விட்டது. அவ்வளவுதான்.
            அதனால் எல்லாம் அசாதாரணமாக வேண்டும் என்று நினைத்தால் மீண்டும் பழைய தொடர்ச்சித் துவங்கி விடும். அசாதாரணம் என்பதில் அபத்தமான எண்ணத் தொடர்ச்சி இருக்கிறது.
*****