வலைக்குள் சிக்கிக் கொள்ளும் வலை
எல்லாம் மனம்தான். வலை விரித்தவனே சிக்கிக்
கொள்ளும் வலை அது. குழி வெட்டியவனே விழுந்து விடும் குழி அது.
அமைதியாக்குகிறது, அமைதியைக் குலைக்கிறது,
இயல்பாக்குகிறது, இயல்பை அழிக்கிறது. அது வெறும் மனம்தான். வெவ்வேறு வடிவங்களில் அணுகிப்
பார்க்கிறது, ஒரு மாறுவேடக்காரரைப் போல. மாறுவேடக்காரரை உண்மையாக நினைத்துக் கொள்வது
போலத்தான் மனதைக் கொண்டவரின் நிலை.
உண்மையில் அந்த மனம் அவருடையதுதான். இன்னொருவர்
மேல் வெறுப்பு கொள்ளும் அந்த மனம் அவருடையதுதான். அது அவர் உருவாக்கிய அல்லது அவருக்குள்
உருவான அவரது மனம்தான். அவருள் இருக்கும் வேறொன்றல்ல அது.
ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு அது ஒவ்வொன்றும்
ஓர் இயக்கத்தை உருவாக்கிக் கொள்கிறது. முரண்பாடுகள் முற்று பெறும் போது எல்லாம் ஒரு
முடிவுக்கு வந்து விடுகிறது.
மனதைப் பொருத்த வரையில் ஆரம்பத்தில் அது
தான் உருவாக்கியப் போராட்டக்களம் என்பதில் தெளிவாக இருக்கும். போகப் போக மனம் அதை
மறந்து விடச் செய்யும். மனம் தானே ஒரு போராட்டக்களமாகி விடும். தானே ஒரு போராட்டம்
என்ற கற்பிதத்துக்கு ஆளாகி விடும். மனதைப் பொருத்த வரையில் நடக்கும் மோசமான விசயம்
இது.
மனதுக்கு எந்த வழிமுறைகளையும் வழங்க வேண்டியதில்லை.
அதற்குத் தேவையான வழிமுறைகளை அது உருவாக்கிக் கொண்டே போகும். அதுதான் மனதின் வழிமுறை.
செய்ய வேண்டியது எல்லாம் எளிமையாக இருப்பது மட்டுமே. அதுதான் பாதை. அந்தப் பாதைதான்
சரியானப் பாதை.
உணர்ச்சிகள், எண்ணங்கள் மூலம் அமைக்கும்
பாதை மனதின் பாதை. ஆபத்தானப் பாதை. எப்படிப்பட்ட பாதையில் கடந்து வந்தோம் என்பது கூட
ஒரு கட்டத்தில் புரியாத நிலையை உருவாக்கி விடும் ஒரு வித போதை நிறைந்த பாதை.
எப்படிப்பட்ட பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
என்பது முக்கியம். எளிமைதான் அந்தப் பாதை. அதுதான் கடினமானப் பாதையாகவும் இருக்கிறது.
மெத்தையிலேயே படுத்து விட்டு, தரையில் படுப்பதைப் போலிருக்கிறது அது. மனதில் எளிமையாக
இருந்து கொள்வது நல்லதொரு பாதை.
மனதைச் சிக்கலாக்கிக் கொண்டு அவஸ்தைப்படக்
கூடாது என்பது கடைசியில் புரியக் கூடும். அப்போது அநேகமாக எல்லாமும் ஒரு முடிவுக்கு
வந்து விடக் கூடும். அவரவர் அவஸ்தைக்கு அவரவர் சிக்கலாக வளர்த்து விட்ட மனமே சிக்கலாக
முளைத்து அவஸ்தைகளைத் தந்து கொண்டிருக்கும். இதை நாள்பட்டுப் உணர்ந்து கொள்வதில்
பிரயோஜனம் இருக்காது. நாள்பட்டு இதைத் தாமாகவே உணர்ந்து கொள்ளும் நிலையும் வந்து
விடும். அப்போது அதற்கானப் புண்ணியம் இல்லாமல் போய் விடும்.
*****
No comments:
Post a Comment