22 May 2018

நீர்க்குமிழ்கள் தானாக உடையும்!


நீர்க்குமிழ்கள் தானாக உடையும்!
            ஒவ்வொரு நாளும் ஒரு வித்தியாசமான தினம்தான். ஒரு தினத்தைப் போல் இன்னொரு தினம் இருக்காது. ஒவ்வொருவரின் கைரேகையைப் போல ஒவ்வொரு நாளும்.
            எல்லா நாளும் ஒரே மாதிரியாக இருக்கிறதென்றால் நீங்கள் சிக்கி விட்டீர்கள். காலையில் ஆரம்பித்த கோபம் இரவு வரை நீடிக்கிறது என்றால் ஒவ்வொரு நாளும் அப்படியேத்தான் இருக்கும்.
            காலையில் ஆரம்பித்த கவலை இரவு வரை நீடிக்கிறது என்றால் ஒவ்வொரு நாளும் அப்படியேத்தான் இருக்கும்.
            இது அப்படியே கோபம், கவலை, ஏமாற்றம் போன்ற எல்லா உணர்வுகளுக்கும் பொருந்தும். அந்த அளவுக்கு மனநிலைக் கெட்டிப்பட்டுப் போயிருந்தால் நிலைமை கொஞ்சம் சிக்கல்தான்.
            மனநிலையை மனிதன் தீர்மானித்தது போய், மனநிலை மனிதனைத் தீர்மானிக்கும் நிலை இது.
            மனம் பாட்டுக்குக் கோபப்படட்டும் என்று அமைதியாக இருந்து விடுவது ஒரு நிலை. அதற்கானப் பலன் இருக்கும். தம்முடைய மனநிலையைத் தாம் தீர்மானிக்க முடியும் என்ற நம்பிக்கை வரும் வரை அமைதியாக இருப்பது.
            எதிரிகள் கோபப்பட கோபப்பட அமைதியாக இருந்து பாருங்கள். எதிரிகள் அதே மனநிலையில் இருப்பார்கள். பதிலுக்குக் கோபப்பட்டால் எதிரிகள் அப்கிரேடாகி அடுத்த சிக்கலான மனநிலைக்குப் போய் விடுவார்கள். அவர்கள் அப்படி ஆகி விட்டால் நிலைமை இன்னும் சிக்கல்தான். அவர்களைத் தாண்டி கோபப்பட வேண்டிய நிலையை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்டது போலாகிவிடும். அமைதி இந்த இடத்தில் பெரும் பயன் தரும். பொறுமை அந்தச் சிக்கலான சூழ்நிலையை மாற்றும்.
            தம்முடைய மனதுக்கும் இதே போன்ற நிலை பொருந்தும். மனம் கோபப்பட, கோபப்பட அப்படியே இருந்து விடுவது. அந்த நிலையிலேயே நின்று விடுவது. இதனால் மனநிலை மேலும் சிக்கலாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
            விசயம் அவ்வளவுதான். மனநிலையை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொள்ளக் கூடாது என்பதுதான். மேலும் மேலும் சிக்கலாக்கினால் மனம் அடுத்தடுத்த கட்டங்களுக்குத் தாவும். அடுத்தடுத்த சிக்கலான மனநிலைகள் உருவாகி, செயல்கள் சிக்கல் மிகுந்ததாக உருமாறும்.
            மனதை எளிமையாக வைத்திருப்பது அருமையான வழி. மனமே இல்லாமல் இருப்பது அதை விட அருமையான வழி.
            எல்லா கோபங்களுக்கும், வெறுப்புகளுக்கும், சிக்கல்களுக்கும் இது அருமையான வழி. அவைகள் அப்படியே நிற்கட்டும். அவைகளில் ஏதேனும் செய்ய அவைகள் மேலும் சிக்கலானதாக மாறுமே தவிர எளிமையாகாது.
            மண்ணை நோண்டலாம். புண்ணை நோண்டலாமா? அது போலத்தான். அப்படியே விட்டால் புண் ஆறி விடும். அப்படியே இருந்து விட்டால் மனமும் ஆறி விடும்.
            இது புரிந்தால் நல்லது. புரியா விட்டால் இன்னும் நல்லது. புரியாது போனால் நீங்கள் இது குறித்து எதுவும் மனதில் செய்யவில்லை. அதுதான் செய்தி. அதை அதைத்தான் இது சொல்ல வருகிறது.
            கோபங்கள், கவலைகள், வெறுப்புகள் இவைகள் எல்லாம் நீர்க்குமிழிகள். மெனக்கெட்டு உடைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவைகளாகவே உடைந்து விடும்.
*****

2 comments:

  1. சிறந்த படைப்பு
    தொடருவோம்

    ReplyDelete
    Replies
    1. தொடர்வோம்! நன்றிகள் பல!

      Delete

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...