சமாதானப் பிரியர்களின் கவனத்துக்கு...
சில பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்பது
புரிபடுவது அவ்வளவு எளிது இல்லை. சுற்றி இருப்பவர்கள் பெரிய குழப்பத்தில் ஆழ்த்தி விடுவார்கள்.
பெரும்பாலும் சொல்வதைக் காது கொடுத்து கேட்க மாட்டார்கள், கேட்டாலும் அவர்கள் போக்கிற்கு
எதையாவது செய்து வைத்து வழி சொன்னவர் மேல் போட்டு விட்டுப் போய் விடுவார்கள்.
சில தொடர் நிகழ்வுகளைப் பார்க்கும் போது
ஒவ்வொன்றிற்கும் பின்னும் நிறைய கேள்விகள் தொக்கி நிற்பது புரியும்.
முதலில் சமாதானப்படுத்துவதின் தவறுகளைப்
புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவரின் நடத்தையை, மனப்போக்கைப் புரிந்து கொள்ள
நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது.
ஒருவரைச் சமாதானப்படுத்துவது ஒன்றும் பெரிய
வேலை இல்லை. சமாதானப்படுத்தும் பொழுதுகளில் அவர்கள் சமாதானமாக இருக்கலாம். தொடர்ந்து
அவ்வாறு இருப்பார்களா என்பது கேள்விக்குறி. மேலும் யாரைச் சமாதானப்படுத்துகிறோமோ
அவர்கள் ஆழம் பார்த்துக் கொண்டும் இருப்பார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சமாதானம் கொஞ்சம் கஷ்டம்தான். சமாதானப்
பிரியர்கள் கத்திக் குத்துகள் எல்லாம் வாங்கியிருக்கிறார்கள். துப்பாக்கிக் குண்டுகளையும்
விழுங்கியிருக்கிறார்கள்.
*****
குற்ற உணர்ச்சியைக் கற்றுத் தருபவர்கள்
கற்றுத் தருபவர்கள் குற்ற உணர்ச்சியை மையமாகக்
கொண்டு ஒரு புரிதலை உருவாக்குகிறார்கள். எதைச் செய்தாலும், எதைக் கேட்டாலும் கேட்டுக்
கொண்டுதான் செய்ய வேண்டும் என்கிறார்கள். ஏதாவது தவறாக நடந்து விட்டால் அதற்கு கற்பவரைத்தான்
காரணம் சொல்கிறார்கள். அதற்குக் கற்பவரும் ஒரு காரணமாக இருக்கலாம். கற்பவர் மட்டுமே
காரணமாக எப்படி இருக்க முடியும்? அதுவும் அறியாமல் நிகழ்ந்ததாக இருக்கலாமே தவிர, அறிந்து
நிகழ்ந்ததாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்கள் குற்ற உணர்ச்சியை உருவாக்குவதில் வெற்றி
பெற்று விடுவார்கள்.
சுதந்திரமான மனநிலை என்பது அனைத்துச் சாதகங்களையும்
பதற்றம் இல்லாமல், படபடப்பு இல்லாமல் பார்ப்பதுதான். தனக்கு உகந்த ஒன்றை அதிலிருந்து
தேர்ந்து கொள்வதுதான்.
எந்த எண்ணத்திற்கும் யாரும் அடிமை அன்று.
அவரவர் விருப்பத்துக்கும், தேவைக்கும் தேர்ந்தெடுத்து செயல்படுத்திக் கொள்ளும் உரிமையும்
சுதந்திரமும் அவரவர்க்கு இருக்கிறது.
நடப்பதென்னவோ ஒருவரை ஓர் எண்ணத்தின் அடிமையாக
மாற்றுவதே பரவலாக நடைபெறுகிறது.
*****
No comments:
Post a Comment