24 May 2018

'என்னமோ போ' என்பதற்கான 12 கருத்துருக்கள்


'என்னமோ போ' என்பதற்கான 12 கருத்துருக்கள்
            1. உதிர்க்கும் மரம் துளிர்க்கும். இளைப்பாறும் வயல் இரண்டு மடங்கு விளையும். தேக்கத்துக்குப் பின் ஒரு பாய்ச்சல் இருக்கும்.
            2. ஒரே விசயத்தில் மனம் இருக்க விரும்புவதில்லை. அவ்வபோது மாறிக் கொள்ளவே விரும்பும். அதற்கு இடம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு இடம் கொடுக்க மனம்தான் என்றாலும் அதற்கே மனமிருப்பதில்லை.
            3. ஆத்திரப்படுவதில் ஓர் அர்த்தமும் இல்லை. அதனால் விளைவுகள் அதி மோசமாகத்தான் போகுமே தவிர குறையாது. சாதுர்யமாக சிந்திக்கலாம். அது நல்ல பலனைத் தரும். இல்லாவிட்டால் கூட அப்படியே விட்டு விடலாம். நிலைமை அவ்வளவு மோசமாகாது.
            4. அறிந்த தளத்தில் நடக்கும் விசயங்களைக் கவனிக்கிறோம். அறியாத தளத்தில் நடக்கும் விசயங்களைக் கவனிக்கத் தவறி விடுகிறோம். அங்கிருந்துதான் எப்போதும் கல் வந்து விழும்.
            5. ரொம்பப் போட்டு அலட்டுவதற்கு எதுவுமில்லை. அது இறுக்கத்தில் கொண்டு போய் முடியலாம். அதுவும் இல்லாமல் எளிமையான காரியங்களையும் அது கடினமாக்கி விடும்.
            6. பேசும் போது கவனமாகப் பேசுவது கஷ்டம். பெரும்பாலும் பாசிட்டிவாகப் பேசி விடுவது ஈஸி. எளிமையான எஸ்கேப்!
            7. மனிதர்கள் ரொம்ப சுயநலமானவர்கள் என்பதால் அவர்களின் சுயநலத்திற்கு ஏதேனும் குந்தகம் நேர்ந்தால் கொதித்து எழுந்து விடுவார்கள். அதனால் குந்தகம் விளைவிக்காமல் செயல்படுவது கடினமாக இருக்கிறது.
            8. பொறுமையாகவும், அமைதியாகவும் இருந்தால் அதை விட சாதனை எதுவுமில்லை. அத்தனையும் அடையலாம். எப்படி என்றால் அதற்குள் அவசரப்பட்டவர்களும், அமைதியற்றவர்களும் மண்டையைப் போட்டு இருப்பார்கள்.
            9. அதிகமான எதிர்பார்ப்புகளை நிர்ணயித்துக் கொள்ளக் கூடாது. அதிகமான ஏமாற்றத்திற்கு உள்ளாகலாம். உச்சபட்ச முயற்சியிலும் இறங்கி விடக் கூடாது. மனமுறிவில் கொண்டு போய் நிறுத்தி விடும். சராசரியாக செயல்பட யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதால் அப்படி இருக்கலாம். போட்டிகள், பொறாமைகள் உண்டாகவே உண்டாகாது.
            10. மனச்சோர்வு திடீர் திடீர் என்று ஆட்கொண்டு விடும். அது இயல்புக்கு மீறிய ஒரு செயலைச் செய்ய முற்பட்டு செய்ய இயலாமையால் ஏற்படுவது. அப்போது அதில் எதிர்பார்ப்பு அதிகரித்து விடலாம். அதனால் ஏமாற்றமாக உணரலாம். மற்றபடி நாமாவது ஏமாறுவதாவது?
            11. நீ வெளிவந்தாலும் ஒன்றுதான், வெளிவராவிட்டாலும் ஒன்றுதான். புதைத்தப் பின் யார் தோண்டிப் பார்க்கப் போகிறார்கள்? முளைத்து வருவது உன் சாமர்த்தியம்!
            12. நான் யார் என்பதைக் காட்ட நினைத்தால் அவர்கள் யார் என்பதைக் காட்ட நினைப்பார்கள். நான் யார் என்பதைக் காட்டாமல் இருந்தால் அவர்கள் யார் என்று புரியாமலே அவர்களும் இருந்து விடுவார்கள்.
*****

3 comments:

  1. ஐயா... உடல்நலக் குறைவுக்குப் பின் உச்சபட்ச தத்துவங்களுடன் உங்கள் பதிவுகள் வருகின்றன..

    ReplyDelete
    Replies
    1. உச்சபட்ச தத்துவங்கள் என்று குறிப்பிடுவது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது ஐயா!
      அவைகள் எளிமையான கருத்துருக்களே!
      கண்டு கொள்ளப்படாத எளிமைகள்!
      ஒருவேளை அவைகள் உச்சபட்ச தத்துவங்களாகத் தோற்றம் தந்தால் அப்படித் தோற்றம் தராமல் இருக்க வேண்டும் என்பதே நம் எளிமையானப் பிரார்த்தனையாக இருக்க வேண்டும்.

      Delete
  2. நல்லது மகிழ்ச்சி ஐயா!

    ReplyDelete

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...