28 Sept 2017

அமைதியும் பொறுமையும் அனுதினமும் வேண்டும்!

அமைதியும் பொறுமையும் அனுதினமும் வேண்டும்!
            பயங்கர மன இறுக்கமாக இருக்கும். சூழல் புரியாமல் அவரவர் பிரச்சனைகளை முன்னிருத்துவார்கள். அதில் நியாய தர்மங்களை வேறு சேர்த்துக் கொள்வார்கள்.
            சுத்தமாகவே அந்தச் சூழல் பிடிக்காது. மனம் பிடித்து வெளியே தள்ளும். சிறு சிந்தனை கூட அந்த நேரத்தில் நிறைய சக்தியை உறிஞ்சும். மனச்சோர்வு கொள்ளச் செய்யும்.
            எதுவும் செய்ய முடியாதது போலத் தோன்றும். ஆனால், அந்த இடத்தில் சுருண்டு விடக் கூடாது. ஆம்! செய்ய ஆரம்பித்து விட்டால் எந்தச் செயலும் தானாக வந்து விடும். அதற்காகவெல்லாம் ரொம்ப சிக்கலாக யோசித்துக் கொண்டு சிரமப்பட வேண்டாம்.
            நமக்குப் பிடித்த மாதிரி இருந்தால் எல்லாம் இன்பமாக இருக்கும். நாம் வாழ்க்கையில் இன்பம் இல்லாமல் இருந்தால், பிடித்தமில்லாத வேலையை நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
            பிடித்தமில்லாத வேலையைச் செய்யும் போது தூக்கம் வருகிறது. கொட்டாவி வருகிறது. சற்று அந்த வேலையை விலக்கி விட்டு வந்தால் வந்த கொட்டாவியும், தூக்கமும் போயே போய் விடும். விசயம் அவ்வளவுதான்.
            நமது அதிகப்படியான மனஅழுத்தம் காரியங்களை மேலும் கடினமாக்கும். காரியங்களைச் சுலபமாக்குவதில் நமது இலகுவான மனநிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது.
            பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்து விட்டால், அதே நிலையில் ஒரு செயலையும் செய்ய ஆரம்பித்து விட்டால் நிகழ்பவைகளும் அது போலவே அமைகின்றன. அதற்கு மாறாக இருந்தாலோ, செய்தாலோ நிகழ்வுகளும் அவ்வாறே அமைகின்றன.

*****

பாம்பு கதை

பாம்பு கதை
பாம்புகள் குறித்த கதைகள்
பிரமாண்டமாக இருக்கின்றன
பழிவாங்கும் பாம்புகள்
தெய்வாம்சப் பாம்புகள் என்று
ஒவ்வொரு கதையும்
பேய்ப்படம், சாமிப்படம் போல
விதவிதமானவை
பாம்பு குறித்த பயம் கொண்ட
பட்டினத்துவாசி ஒருவர்
தான் அதை டிஸ்கவரி சேனலில் பார்ப்பதோடு சரி
நேரில் பார்த்ததில்லை என்கிறார்
அவரைப் பாம்பு போல் நினைத்து
படை நடுங்கிக் கொண்டிருக்கும்
அவரது குடும்பத்தினருக்குத் தெரியும்
பட்டினத்தில் பாம்புகளின் வடிவம் வேறு என்பது
இந்நேரம் மனிதப் பாம்புகள் குறித்த
நிறைய கதைகள் பேசிக் கொண்டிருக்கக் கூடும்
நிஜப் பாம்புகள்.

*****

கடினக் காலத்தைக் கடத்தல்

கடினக் காலத்தைக் கடத்தல்
            சில செயல்களைச் செய்யும் போது ஏன்தான் இந்தச் செயலை ஆரம்பித்தோம் என்று எண்ணம் தோன்றுவதுண்டு. சில செயல்கள் அப்படி அந்த அளவுக்கு மன இறுக்கம் தருவதாக உள்ளது.
            ஆனால், அந்தச் செயல் முடிந்த பிறகு அந்த மன இறுக்கம் தானாகவே விலகி விடும். இதற்குப் போயா இவ்வளவு மன இறுக்கம் கொண்டோம் என்று எண்ணவும் தோன்றும்.
            ஆக, அந்தக் காலத்தைக் கடத்தல்தான் எல்லாம். அந்தக் காலத்தைக் கடப்பதற்குக் கூட எதுவும் செய்ய வேண்டாம். நாம் பாட்டுக்கு இருந்தால் அதுவாகக் கடந்து போய் விடும். கடினமான காலங்களை அப்படித்தான் கடக்க வேண்டும்.
            மனதைப் போட்டு எதையாவது செய்தால் பிரச்சனை. அதனதனை அதனதன் போக்கில் விட்டு விட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதுவதுவாக ஒரு முடிவுக்கு வந்து விடும்.
            சில செயல்களில் நாம் முடிவைத் தேடிக் கொண்டு போக வேண்டியதில்லை. முடிவு தானாக வரும்.

*****

யசோதராவின் ஓலம்

யசோதராவின் ஓலம்
அந்த நள்ளிரவில்
யசோதரா வெளியேறினாள்
காடு, மலை கடந்து அலைந்து திரிந்து
போதி மரத்தடியில்
ஞானமடைந்த போது
போதி மரத்திலிருந்து
மொத்த உலகமும்
ஞானம் பெற்றது
புத்தர் தான் பெற்ற ஞானத்திற்காக
முதல் முறையாக
தலை குனிந்தார்.

*****

பொறுத்திருத்தலையும் கற்றுக் கொள்ள வேண்டும்!

பொறுத்திருத்தலையும் கற்றுக் கொள்ள வேண்டும்!
            தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்த செயலை சில பொழுதுகளில் செய்ய முடியாத நிலை ஏற்படுவது உண்டு. செய்ய முடியாத தடைபட்ட அந்த நிலையைக் கண்டு கலங்க வேண்டியதில்லை. இத்தனை நாள் முடிந்த செயல் இன்று முடியவில்லையே என்று ஏங்க வேண்டியதில்லை.
            செய்ய முடியாத நிலை அந்தச் செயலுக்கான ஓய்வுக்காலம். அது சில காலம் நீடிக்கும் எதுவும் சில காலம் என்பது போல. அது இயற்கையாக அமைந்த ஓய்வுக்காலமும் கூட.
            இயற்கையிலேயே அப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பிரேக் இருக்கிறது. அந்தத் தடைக்காலத்தில் செயலைச் செய்ய வேண்டுமே என்று மீறிக் கொண்டு செய்ய முயல வேண்டியதில்லை.
            தொடர் முயற்சி, கடின உழைப்பு என்பது நல்ல விசயம். அதை அந்தத் தடைக்காலத்தில் முயன்று பார்க்க வேண்டாம். காத்திருப்பு பலன் கொடுக்கும். மீண்டும் மனம் உற்சாகம் அடையும். அப்போது அதன் வேகம் இரட்டிப்பாக இருக்கும். கடின உழைப்பு என்பது ஆர்வத்தோடு செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மன இறுக்கத்தோடு செய்வதாக இருக்கக் கூடாது.
            வாழ்க்கையில் பொறுத்திருக்கவும் வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டிய காலக் கட்டம் அது.

*****

27 Sept 2017

சமாதானம் உண்டாவதாக!

சமாதானம் உண்டாவதாக!
            ஆண்களுக்கு ஏன் பெண்களின் உடலில் உரசுவதில் அப்படி ஓர் அலாதி இன்பம்? பேருந்து என்றால் சொல்லவும் வேண்டுமோ! பெண்களின் இடையில் கிள்ளுபவர்கள் வரை பல வகையறாக்கள் முளைத்து விடுகிறார்கள்.
            எவ்வளவோ விஞ்ஞானம் வந்து விட்டது என்கிறார்கள், தொழில்நுட்பத்தில் நம்மை யாரும் அசைக்க முடியாது என்கிறார்கள். வயிறுப் பிதுங்கியது போல் கூட்டமாகச் செல்லும் பேருந்தைக் குறைக்க முடிகிறதா?
            உட்கார்ந்து செல்லும் பேருந்து பயணங்களைப் பெரும்பாலும் கனவில் மட்டுந்தான் காண முடிகிறது. பெரும்பாலானப் பயணங்கள் நின்று கொண்டுதான் அதுவும் தாள முடியாத நெரிசலில் மீள முடியாத நெருக்கடிகளோடுதான் நிகழ்கின்றன. இப்படித்தான் பெண்களின் மேல் உரசுவதற்கும், அவர்களைச் சீண்டுவதற்கும் இந்த நாட்டில் களம் அமைத்துக் கொடுக்கிறார்கள் வளர்ச்சி, வளர்ச்சி என்று வாய் கிழிய கத்துபவர்கள்.
            அப்படிப்பட்ட ஒரு பேருந்து பயணத்தில்தான் ஒரு பெண் தன் இடையில் கை வைத்து தேய்த்த ஒரு ஆண்மகனை(!) போட்டுப் பொளந்து கட்டினாள். அவள் அடித்த அடியின் சத்தம் நடத்துனரின் விசிலை விட பலமாக பேருந்து முழுவதும் கேட்டது. ஓட்டுநரோ எதுவும் நடக்காதது போல வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட கடமை உணர்ச்சி குறையாத ஓட்டுநர்களால்தான் தமிழ்நாட்டின் பயணங்கள் தடை படாமல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
            கடைசியில் சுற்றி இருந்தவர்கள் சமாதானப்படுத்தி, நடத்துநரும் தன் பங்குக்கு நிலைமையைச் சகஜமாக்கி அந்த ஆண் மகனைப் பின் இருக்கைப் பகுதிக்கு கொண்டு வந்து அமரச் செய்து இயல்பானப் பேருந்து பயணத்தைத் தொடரச் செய்தார்கள்.
            யாருக்கும் பேருந்தைக் காவல் நிலையத்துக்கு விட வேண்டும் என்று மருந்துக்குக் கூட தோன்றவில்லை. காவல் நிலையம் என்றால் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கால தாமதம் ஆகி விட்டால்... என்ன செய்வது? அந்தப் பெண் அந்த ஆண் மகனை அடிக்கும் போதே எல்லாவற்றையும் யோசித்து வைத்திருந்திருப்பார்கள் போல. அத்தனை பேரும் சொல்லி வைத்தாற் போல மெளனமாக அதைப் பற்றிப் பேசுவதைக் கூட வெகு கவனமாகத் தவிர்த்தார்கள். அதே பேருந்து பழுதுபட்டு நின்று விட்டால் அரை மணி நேரம் என்ன இரண்டு மணி நேரம் வரை அப்படியே நிற்பார்கள்.
            கடைசி இருக்கையில் அமர வைக்கப்பட்ட நம் ஆண்மகனோ மாப்பிள்ளை போல ஜம்மென்று அமர்ந்த படி மிலுக்காக பயணித்துக் கொண்டிருந்தான்.
            இது நமது பேருந்துப் பயணங்களின் பாரம்பரிய குல வழக்க முறையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்!

*****

முளை

முளை
பத்து கிராமத்து வயல்களைத்
தின்று செரித்த
நகரத்துப் ப்ளாட்டில்
புல் பூண்டு கூட
முளைக்கவில்லை.

*****