13 Sept 2026

பாரம் தாங்கவா வாழ்க்கை?

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 35

பாரம் தாங்கவா வாழ்க்கை?

மாலைச் சூரியன் மரக்கிளைகளின் ஊடே வடிகட்டப்பட்டுத் திருவாரூர், திரு.வி.க பூங்காவின் சிமெண்ட் பெஞ்சின் மீது வெளிச்சக் கீற்றுகளைப் பரப்பியிருந்தது. அந்த அமைதியான சூழலில் அவன் அவளுக்காகக் காத்திருந்தான்.

சற்றுத் தொலைவில் அவளது வருகையைக் கண்டதும் புன்னகையுடன் வரவேற்றான். ஆனால், அகத்தின் அழுத்தம் முகத்தில் தெரிவதைப் போல ஓர் இறுக்கம். அவன் இதுவரை அவளிடம் காணாத முக வாட்டம்.

அவள் அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

அமர்ந்த வேகத்தில் தன் தலையில் சூடியிருந்த அந்தப் பெரிய சிவப்பு ரோஜாப் பூவைக் கழற்றி பெஞ்சின் மீது வீசினாள். அவளது முகம் அந்த ரோஜாப்பூவை விட மோசமாக வாடியிருந்தது.

"என்ன விஷயம்? இவ்வளவு சோர்வா இருக்க? இப்படி உன்னை ஒருநாளும் பார்த்ததில்லையே!" என்றான் அவன்.

"இன்றைக்கு முழு நாளும் அலுவலகத்துல வேலை. ஸ்டாண்டிங் டெஸ்க் குடுத்திருக்காங்க. உட்காரவே முடியல. முதுகு ஒடிஞ்சு போச்சு. அதுபோக, இந்தத் தலை வேறு பாரமா இருக்கு," என்று அலுத்துக்கொண்டாள் அவள்.

அவளது இடையைப் பார்த்தான் அவன். எப்போதுமே லேசாக ஒடியும் தன்மையுடன் இருக்கும் அது, இன்று அந்தச் சோர்வில் இன்னும் மெலிதாகத் தெரிந்தது.

அவன் அவளது தலையைக் பார்த்தான். அத்துடன் பெஞ்சின் ஓரத்தில் தனித்துக் கிடந்த ரோஜாவைப் பார்த்தான்.

சாதாரணமாகப் பூவை வாங்கும்போது காம்பைக் கிள்ளிவிட்டுத்தான் வைப்பாள் அவள். ஆனால் இன்று, அவசரத்தில் எதைப்பற்றியும் யோசிக்காமல், காம்புகளுடன் சேர்த்து அந்தப் பெரிய ரோஜாவை அப்படியே குத்திக் சொருகியிருந்திருக்கிறாள்.

அனிச்ச மலரின் காம்புகள் தாங்க முடியாத பாரம் என்று வள்ளுவர் எதைச் சொன்னாரோ, அந்த மென்மை அவளிடம் அப்படியே இருந்தது.

அவன் புன்னகையுடன் அவளது தோளைத் தொட்டுச் சொன்னான், "நீ என்னதான் பெரிய பிளானிங், பக்கா சிஸ்டமேடிக்குன்னு எவ்வளவு மாடர்னா யோசிச்சாலும், இந்தத் தமிழ் இலக்கியப் புலவர்கள் உன்னை மாதிரி ஆட்களைக் கரெக்டா கணிச்சு வச்சிருக்காங்க."

அவள் புருவத்தை உயர்த்தினாள். "என்ன ஆரம்பிக்கிறீங்க, மறுபடியும் உங்க தொல்காப்பியமா, திருக்குறளா?"

"திருக்குறள்தான்.

"அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு

நல்ல படாஅ பறை."                       (குறள், 1115)

அப்படின்னு வள்ளுவர் சொல்லியிருக்கார்."

"கொஞ்சம் உங்க வள்ளுவர் சொல்றதைப் புரியும்படி சொல்ல முடியுமா?

"அனிச்சப்பூவைக் காம்போட சேர்த்துத் தலையில வச்சா, அந்தப் பாரமே தாங்காம உன்ன மாதிரி ஆட்களோட இடை ஒடிஞ்சுடும்னு அந்தக் குறள்ல சொல்றார். இருக்குற பூவுலேயே ரொம்ப மென்மையானது அனிச்சப்பூ. அதை காம்பு கிள்ளாம வெச்சாவே அந்தக் கதின்னா, நீ ரோஜாப் பூவை வாங்கிக் காம்பு கிள்ளாம வெச்சிருக்கீயே.  அப்புறம் என்ன ஆகும் தெரியுமா? நீயே யோசிச்சுப் பார்!"

"அப்படி என்னதான் ஆகுமாம்?" அவளது முகத்தில் இருந்த வாட்டம் மறைந்து பதிலை அறிந்து கொள்ளும் நாட்டம் வந்தது.

"ஊரே கூடி உனக்குச் சங்கு ஊத வேண்டியதுதான்!"

"என்னது, சங்கு ஊதுறதா?" அவள் முறைத்தாள்.

"இல்லை, வள்ளுவர் காலத்துல இடை ஒடிஞ்சு விழுந்தா பறை அடிப்பாங்க. இப்போ உனக்கு இனி நல்ல பறைகள் ஒலிக்க மாட்டா, மியூசிக் பேண்ட்தான் கூப்பிடணும்!"

தனக்குள்ளிருந்த அத்தனை சோர்வையும் மன இறுக்கத்தையும் மீறி அவள் வெடித்துச் சிரித்தாள். "போங்க மிஸ்டர் வள்ளுவர்தாசனே! அனிச்சப்பூவை விட இந்த ஜோக்குதான் ரொம்பக் கொடூரமான பாரம்."

அவளது இந்தச் சிரிப்புக்குப் பின்னால், அவளது மனபாரம் மறைந்து போன சூழலைப் பார்த்த அவனுக்குள் ஒரு மெல்லிய அக்கறை நிழலாடியது. "வாழ்க்கை எவ்வளவு மென்மையானதுன்னு நம்ம தமிழ்ப் புலவர்கள் அப்பவே சொல்லிட்டாங்க. அப்படி மென்மையா வாழ வேண்டிய வாழ்க்கையை எதுக்கு டென்ஷன் நிறைந்த ஒரு வேலையால பாரமாக்கிக்கணும். அனிச்சப்பூவைக் காம்போட தாங்குறதே பாரம்ன்னா, இவ்வளவு டென்ஷனை மனசுல தாங்குறது எவ்வளவு பாரம்? நெனைச்சுப் பார்க்கவே முடியலையே!"

"சரிங்க புலவர் குல வாரிசே! பாரத்தை நெனைச்சு ரொம்பவே கவலைப்படாதீங்க. நான் கௌம்புறப்பவே ரெசிக்னேஷன் லெட்டர் கொடுத்துட்டேன். திருவாரூர் லைப்ரரில ஒரு வேலை இருக்கிறதா கேள்விப்பட்டு அதுக்கு அப்ளிகேஷனும் போட்டுட்டேன்."

அவன் சிரித்துக் கொண்டே, பெஞ்சின் மீது அவள் கழற்றி எறிந்த ரோஜாவின் காம்பைக் கிள்ளி அவளுக்குச் சூட்டினான்.

ஒரு கணம் யாரும் அக்கம் பக்கம் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்ட அவள் அவன் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment