31 Aug 2026

ஸ்டெத்தாஸ்கோப் அறியாத மருத்துவம்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 22

ஸ்டெத்தாஸ்கோப் அறியாத மருத்துவம்

விளமல், நவஜீவன் மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டு அருகே இருந்த மருத்துவர் அறை. ஏசி ஜில்லென்று உடலை உலுக்கியது.

அவன் டாக்டரின் ஸ்டெதாஸ்கோப்பை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நெஞ்சில் ஏதோ இனம்புரியாத பாரம், ஒருவித அடர்த்தியான அழுத்தம். கடந்த ஒரு வாரமாகவே உடம்பில் எந்த உறுப்பும் ஒன்றுக்கொன்று ஸிங்க் ஆகாத மாதிரி ஒரு படபடப்பு.

"பிபி நார்மல், ஈசிஜியும் பெர்பெக்ட். ஆனா ஏதோ ஒரு கெமிக்கல் இம்பேலன்ஸ் உடம்புக்குள்ள இருக்கு. கடுமையான ஸ்ட்ரெஸ்னு நினைக்கிறேன். நான் ஒரு ஆன்டி டிப்ரஸன்ட் தர்றேன், சாப்பிட்டுப் பாருங்க," என்றார் டாக்டர், கம்ப்யூட்டரில் கீபோர்டைத் தட்டியபடியே.

மருத்துவப் புத்தகங்களில் இல்லாத, பார்மஸி மருந்து அட்டைகளில் கிடைக்காத நோய் அது என்பதை அவன் மட்டுமே அறிவான்.

மருத்துவமனையை விட்டு வெளியே வந்து தன் ராயல் என்பீல்ட் புல்லட்டை ஸ்டார்ட் செய்தான். திருவாரூர் மாலையின் புழுக்கமும் டிராபிக்கும் அவனை மேலும் சோதித்தன. விளமல் ரவுண்டானா சிக்னலில் சிவப்பு விளக்கு எரிய, புல்லட்டை நிறுத்திக் கியரைக் குறைத்தான்.

பக்கத்தில் வந்து நின்ற ஒரு பிங்க் நிற ஸ்கூட்டியைத் எதேச்சையாகப் பார்த்தான். அங்கே அவள் நின்றிருந்தாள்.

அவள் ஹெல்மெட்டின் முன் கண்ணாடியை லேசாக உயர்த்தி, தலையைச் சிலிர்த்துக்கொண்டாள். காதில் அணிந்திருந்த ரேடியோ ஹெட்போனில் ஓடும் ஏதோ ஒரு பாட்டுக்கு விரல்களால் ஸ்கூட்டியின் ஹேண்டில்பாரில் தாளம் போட்டுக்கொண்டிருந்தாள். மாலையின் சிக்னல் வெளிச்சத்தில், அவள் காதில் அணிந்திருந்த அந்தச் சிறிய வைரத் தோடு பளிச்சென்று மின்னியது.

கடந்த மாதம் நடந்த அந்த அற்பச் சண்டை, இருவரிடமும் உறைந்து கிடந்த ஈகோ, அப்புறம் யாருமே எதிர்பார்க்காத அந்த பிரேக் அப் என நினைவுகள் அதிவேகமாக மனக்கண் முன் வந்து சென்றன.

அவன் ஹெல்மெட்டுக்குள் இருந்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது பார்வை மெதுவாகத் திரும்பி, இவன் பக்கமாக வந்தது. ஒரு அரை நொடி அவளது கண்கள் லேசாக விரிந்தன. இவனை அடையாளம் கண்டுகொண்ட கணத்தில், ஒரு மெல்லிய, அழகான புன்னகை அவள் உதட்டின் ஓரத்தில் அரும்பியது.

அந்த ஒரே ஒரு நொடி.

அவனின் நெஞ்சில் அடைத்துக்கொண்டிருந்த ஏதோ ஒரு பெரும் பூட்டு கிளிக் எனத் திறந்தது. அடைத்துக்கொண்டிருந்த மூச்சு சீரானது. தலைபாரம் சட்டெனக் கரைந்து காணாமல் போனது. கைகளில் இருந்த நடுக்கம் நின்று, உடம்பில் ஒரு புது ரத்த ஓட்டம் பாய்ந்தது.

டாக்டர் கொடுத்த ட்ரான்கிலைஸர், விட்டமின் மாத்திரைகள், கார்டியாலஜிஸ்ட் ரிப்போர்ட் என உலகத்தின் எந்த மருத்துவமும் செய்யாத அற்புதத்தை, அவளது அந்த ஒரு நொடிப் பார்வை நொடிப் பொழுதில் செய்துவிட்டது.

புல்லட்டை அப்படியே ஓரம் கட்டிப் பக்கவாட்டில் சைட் ஸ்டாண்டில் நிறுத்தினான். பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்தான். அவளே நோய், அவளே மருந்து என அவன் தட்டச்சு செய்ய கூகுள் குரோம் 1102 ஆவது குறளைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து கண் முன் நிறுத்தியது.

“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோய்க்குத் தானே மருந்து.”               (குறள், 1102)

நோயைக் கொடுத்தவளேதான் அதற்கான மருந்தை வைத்திருக்கிறாள். இதற்கு வள்ளுவரின் மருத்துவம்தான் சரி, இன்றைய மருத்துவர்களின் மருத்துவம் சரிபட்டு வராது என அவன் மனம் சொல்லியது.

சிக்னல் பச்சையாக மாற, அவளுடைய ஸ்கூட்டி மெதுவாக நகர்ந்து முன்னால் சென்றது. அவன் ஒரு சிறு புன்னகையுடன் தன் புல்லட்டை ஸ்டார்ட் செய்து, அவளது ஸ்கூட்டியைப் பின்தொடர ஆரம்பித்தான்.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment