பிரச்சனை என்னும் இலவச இணைப்பு!
சொல்லப்போனால்,
"வாழ்நாளில் வரும் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டு, அதன்பிறகு நிம்மதியாக
வாழ வேண்டும்" என்று நினைப்பதை விட ஒரு மிகப்பெரிய அறியாமை இந்த உலகத்தில் வேறு
எதுவும் இருக்க முடியாது.
குடும்பம்
ஒரு பக்கம் அவுட் ஆப் ஆர்டர் ஆகி, வேலை இன்னொரு பக்கம் கொலப்ஸ் ஆகி, மனம் துண்டு துண்டாக
உடைந்து சிதறும் போதுதான் மனிதனுக்கு உண்மையான ஞானம் பிறக்க வேண்டும்.
ஆனால்
நாம என்ன செய்கிறோம்? "ஐயோ, இந்த ஒரு பிரச்சனை மட்டும் தீர்ந்தால் போதும்டா சாமி"
என்று நேர்ந்துகொண்டு, அடுத்த கோயிலுக்கு தேங்காய் உடைக்க ஓடுகிறோம்.
அங்கேதான்
வாழ்க்கையின் மிகப் பெரிய ஆப்பு காத்திருக்கிறது.
வாழ்க்கை
என்பது ஒரு ரேஷன் கடை க்யூ போன்றது. ஒரு பிரச்சனைக்கு நீங்கள் தீர்வு என்ற டோக்கனை
வாங்கி வெளியே கதவைத் திறந்தால், அடுத்த பிரச்சனை இன்முகத்தோடு "ஹாய், அடுத்து
நான்தான்!" என்று க்யூவில் நின்று கொண்டிருக்கும்.
நீங்கள்
முதல் பிரச்சனையோடு மல்லுக்கட்டி ஜெயித்துவிட்டுத் திரும்பிப் பார்ப்பதற்குள், இரண்டாவது
பிரச்சனை தன் சொந்தக்காரர்களையும் கூட்டிக் கொண்டு வந்து செட்டில் ஆகியிருக்கும்.
மனிதர்கள்
அவ்வளவு மோசமானவர்களா என்றால், "ஆமாம், அதில் எந்த சந்தேகமும் இல்லை!" என்று
சொல்லிவிட்டு நகர்ந்து போய்க்கொண்டே இருக்கலாம். அல்லது, அவர்களை நல்லவர்கள் என்று
நம்பிய நம்மை விட மோசமான முட்டாள்கள் யாரும் இல்லை என்றும் வைத்துக்கொள்ளலாம்.
இதில்
மனிதர்களைச் சரி செய்கிறேன், சூழ்நிலையைச் சரி செய்கிறேன் என்று கிளம்புவது, சுனாமி
வரும்போது வாட்டர் ப்ரூப் குடை பிடித்துக் கொண்டு நிற்பதற்குச் சமம்.
அதனால்,
பிரச்சனைகளைத் தீர்க்க நினைக்காதீர்கள். அவற்றுடன் சகிப்புத்தன்மையோடு வாழப் பழகிக்
கொள்ளுங்கள். பழக பழக இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று உங்களுக்கே தோன்ற ஆரம்பித்து
விடும்.
வீட்டில்
கணவரோ மனைவியோ கத்தத் தொடங்கினால், "சரி, இது இந்த வாரத்திற்கான ஷெட்யூல்ட் அலாரம்"
என்று நினைத்துக்கொண்டு டீயை ஆற்றிப் பருகக் கற்றுக்கொள்ளுங்கள்.
வேலை
போனால் "சரி, திங்கட்கிழமை காலையில் அலாரம் வைக்காமல் தூங்க ஒரு வாய்ப்பு"
என்று எண்ணிக்கொள்ளுங்கள்.
மனம்
துண்டு துண்டாக உடைந்தால், அந்தத் துண்டுகளைச் சேர்த்து வைத்து பஸ்ஸில் விளையாடப் பழகிக் கொள்ளுங்கள்.
பிரச்சனையை
நீங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்காத போது, அது கடுப்பாகி வேறு யாரையாவது தேடி ஓடிவிடும்.
கடைசியாக
ஒரு பின்குறிப்பு என்னவென்றால், நான் மேலே சொன்ன எதையும் நம்பாதீர்கள். ஏன், "நாமெல்லாம் ரொம்ப ஒழுங்காத்தான் வாழ்கிறோம்"
என்று உங்கள் மனம் சொல்வதைக் கூட நீங்கள் நம்ப வேண்டிய அவசியமில்லை.
எப்படியும்
பிரச்சனைகள் தீரப் போவதில்லை. அப்புறம் என்ன? அவற்றுடன் சேர்ந்து வாழப் பழகிக்கொண்டு
ஜாலியாக இருங்கள்! நீங்கள் ஜாலியாக இருப்பதைப் பார்த்து அந்தப் பிரச்சனைகள் நெஞ்சு
வெடித்துச் சாகட்டும்!
*****

No comments:
Post a Comment