21 Apr 2023

எப்போதிருக்கும் மரங்கள் நடப்பட்டவை அல்ல

வேக அப்பியாசங்கள்

வேகத்திற்கென வாகனங்கள் உருவாக்கப்படுகின்றன

வேகமாகச் செல்பவர்கள் வேகமாகவும்

மெதுவாகச் செல்பவர்கள் மெதுவாகவும்

வாகனங்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்

அவசர கால ஊர்திகளும்

அளவான வேகத்தில் செல்கின்றன

இறுதி ஊர்வல வாகனங்கள்

எப்போதும் மெதுவாகச் செல்கின்றன

வேகமாகச் சென்று மரணித்தவரின்

தவறைச் சுட்டிக் காட்டுவதைப் போல

*****

புத்தாண்டுக் குழப்பம்

புத்தாண்டும் பொங்கலும்

எத்தனைப் பேரை வாழ்த்து சொல்ல வைக்கிறது

வாழ்த்துகள் வந்து கொண்டே இருக்கின்றன

ஒரு காப்பு – பேஸ்ட்டில்

எல்லாம் சுபமாக முடிந்து விடுகின்றன

பதில் வாழ்த்து சொல்ல

எந்தக் காப்பி – பேஸ்ட்டைத்

தேர்ந்தெடுப்பது என்பதில்தான்

குழப்பம் ஆரம்பிக்கிறது

*****

எப்போதிருக்கும் மரங்கள் நடப்பட்டவை அல்ல

ஆங்காங்கே நடப்பட்ட மரக்கன்றுகள்

தண்ணீருக்காக ஏங்குகின்றன

மேய வரும் ஆடுகளை

மருட்சியோடு பார்க்கின்றன

ஒவ்வோராண்டும் அதே இடத்தில்

ஒவ்வொரு முறை நடப்படும் யாவும்

மாறாத அனுபவத்தைச் சந்தித்து

மற்றுமொரு மரக்கன்றுக்கு வழிவிட்டு

வேறு வழியின்றி மாண்டு போகின்றன

இருக்கின்ற மரங்களில் பல

நாம் நடாமல் வளர்ந்ததுதான் என்பதை

இப்போதில்லை என்றாலும்

எப்போதாவது நம்புங்கள்

*****

20 Apr 2023

இருப்பது போல இல்லாமல் இருக்கும் வாழ்க்கை

இருப்பது போல இல்லாமல் இருக்கும் வாழ்க்கை

மலடி என்று விவாகரத்து ஆன மாலதி

மறுமணமாகி இரட்டைக் குழந்தைக்குத் தாயானாள்

நான்கு ஆண் பிள்ளைகளைப் பெற்று விட்டதாய்ப் பெருமைபட்ட

நாகப்பன் நான்கு மருமகள்கள் வந்ததும் நடுத்தெருவில் நின்றான்

பணித்திறன் போதாதென்று பணிநீக்கம் செய்யப்பட்ட பரமசிவம்

பெட்டிக்கடை வைத்து சூப்பர் மார்கெட் முதலாளியானான்

சிறந்த ஊழியர் விருதை வருடம் தவறாமல் வாங்கிய

சிவனேசன் பென்சன் காசு போதாமல் ஏடிஎம் காவலாளியானான்

படிக்க லாயக்கில்லை என்று திட்டு வாங்கிய பரந்தாமன்

பதினைந்து பள்ளிக்கூடங்கள் கட்டி கல்வித் தந்தையானான்

கலெக்டர் ஆவான் என்று எதிர்பார்க்கப்பட்ட

கண்ணபிரான் வேலை தேடி அலுத்துப் போய் இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ட் ஆனான்

நீயெல்லாம் எங்கே உருப்பட போறே என்று

தெருவே காறி உமிழ்ந்த தென்னரசு கௌன்சிலரானான்

நல்லா வருவே என ஊரே வாழ்த்திய

நல்லதம்பி அற்பாயுசில் ஆம்புலன்சில் அடிபட்டுப் போய் சேர்ந்தான்

நாற்பத்தைந்து ஆகியும் மணமாகாமல் இருந்த நாகலிங்கம்

இரண்டு பெண்டாட்டிகளோடு குடித்தனம் நடத்துவதாகக் கேள்வி

இருபத்தைந்தில் மணமாகி இரண்டு குழந்தைக்குத் தந்தையான

இளங்கோவின் பொண்டாட்டி ஓடிப் போய் இருபது வருடங்கள் ஆகி விட்டன

இந்த வாழ்க்கையை என்னவென்று புரிந்து கொள்வது

நம்பிக்கைக்கு நம்பிக்கையின்மையும்

நம்பிக்கையின்மைக்கு நம்பிக்கையையும்

கலந்து கட்டி வைத்திருக்கும் வாழ்க்கையில்

நம்பிக்கையோடு இருப்பதும் நம்பிக்கையற்று இருப்பதும்

யாரோ ஒருவரின் கையில் இருப்பது போல இல்லாமலும்

இல்லாமலிருப்பது போல இருப்பதிலுமிருக்கிறது

*****

19 Apr 2023

தங்கத்தின் கதை

தங்கத்தின் கதை

பத்து மூட்டையோ

பனிரெண்டு மூட்டையோ

நெல்லைப் போட்டு

ஒரு பவுன் நகை வாங்கிய கதையைச்

சொல்லிக் கொண்டிருக்கிறார் தாத்தா

ஒரு வேலி நிலத்தை விற்று விட்டு

பத்து பவுனோ

பனிரெண்டு பவுனோ வாங்கிய கதையைச்

சொல்லிக் கொண்டிருக்கிறார் அப்பா

மாதா மாதம் வாங்குகின்ற

ஐயாயிரம் சம்பளத்தில்

ஐயாயிரத்தையும் மிச்சம் பண்ணினால்தான்

ஒரு பவுன் நகை வாங்க முடிகிற புதுக்கதையை

தாத்தாவிடமும் அப்பாவிடமும்

சொல்லிக் கொண்டிருக்கிறேன் நான்

*****

மழைக்கோபம்

பெய்த பேய் மழையில்

தலை நனையாமல் வந்தாலென்ன என்று

கோபித்துக் கொள்கிறாள் அம்மா

அலைபேசி நனையாமல்

எடுத்து வந்ததைப் பெருமையோடு

பேசிக் கொண்டிருக்கிறாள் மகள்

இந்த மழைதான்

அரை மணி நேரம் கழித்துப் பெய்திருந்தாலென்ன என்று

இப்போது மழையைக் கோபித்துக் கொள்கிறாள் அம்மா

*****

18 Apr 2023

சுற்றிச் சுழலும் விதி

சுற்றிச் சுழலும் விதி

சீழ்க்கைப் பிடித்தவன் காய்ச்சிய சாராயத்தை

வாங்கிக் குடிக்க எல்லாருக்கும் போட்டி

குடியைக் கெடுக்கிறதோ

குட்டிச் சுவராக்குகிறதோ

சீரழிக்கிறதோ சுடுகாட்டுக்குத் தூக்கிச் செல்கிறதோ

சமரசம் உலவும் இடங்களில்

டாஸ்மாக்கும் உண்டென்று சொன்னால்

பழங்கவிஞனுக்குக் கோபம் வராமல் இருக்க வேண்டும்

ஒரு நாள் திருந்தி விடுவான் என்ற நம்பிக்கையில்

மனையில் காத்துக் கிடக்கிறாள் ஒருத்தி

எத்தனை பேர் திருந்தினாலும்

புதிதாகக் கற்றுக் கொண்டு

ஒருவன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையில்

கடையைச் சாத்துகிறான் மதுக்கடை ஊழியன்

யாருடைய நம்பிக்கையையும் ஏமாற்றி விடாதபடி

காலந்தோறும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது விதி

*****

ஒரு நாள் விடுமுறை

ஒரு நாள் விடுமுறை கிடைத்தால்

எல்லா வேலைகளையும் முடித்து விடலாம்

வங்கியில் கொஞ்சம் வேலை

அஞ்சலகத்தில் கொஞ்சம் வேலை

நகராட்சி அலுவலகத்தில் கொஞ்சம் வேலை

ரேஷன் கடையிலும் கொஞ்சம் வேலை இருக்கிறது

அடையாள சான்றுகளில் திருத்த இணைக்க

சில பல வேலைகள் இருக்கின்றன

செய்வோம்என்று தள்ளிப் போட்ட வேலைகளும் இருக்கின்றன

விசாரிக்க வேண்டிய விஷேசங்கள் துஷ்டிகள் இருக்கின்றன

போய் பார்த்து விட்டு வர வேண்டிய

சில சொந்த பந்தங்கள் இருக்கின்றன

அத்தனைக்கும் ஒரு நாள் விடுமுறை போதாதெனினும்

ஒரு நாள் ஓய்வு தேவை என விண்ணப்பித்து

ஒரு நாள் விடுமுறை கிடைத்தால்

அத்தனை வேலைகளையும் முடித்து விடலாம்

*****

17 Apr 2023

தீவிரத்தை நோக்கி நகரும் சராசரிகள்

தீவிரத்தை நோக்கி நகரும் சராசரிகள்

போ

போய் வேலையைப் பார்

என்று சொல்லும் போது

எப்படிச் சொல்வது

நேற்று வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததை

நடப்பதெல்லாம் ஒரு நொடியில் நிகழ்ந்து விடுகிறது

விளக்கங்களுக்கு மணி கணக்கில் நேரம் தேவைப்படுகிறது

சராசரிகள் ஒரு நாளில் தீவிரத்தை நோக்கி

நகரத்தான் வேண்டியிருக்கிறது

நிஜமான தீவிர சிகிச்சைப் பிரிவு என்பது

நடைமுறையில் வேறு என்பது

உட்கார நாற்காலி இருந்தும்

நின்று கொண்டே இருக்கும்

அவஸ்தையில் உழல்பவர்களுக்கே புரியும்

*****

எல்லாருக்கும் ஒருவர்

இந்த அறைக் காற்றை

ஆயிரத்து எட்டாவது முறையாகச்

சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்

வாடகை எதுவும் செலுத்தாமல்

சிறுநீர் மலம் காற்றாடி விசிறி விடும் வியர்வை

உட்பட யாவற்றுக்கும் வாடகை கேட்கும் இவ்வறை

தினம் நான்கைந்தோ ஆறேழோ எட்டொன்பதோ

பத்து பதினொன்றோ பனிரெண்டு பதின்மூன்றோ

முறை வைக்காது இருபத்து நான்கு படிகள் ஏறி இறங்கும்

உழைப்பிற்கு யாரும் படி அளந்ததில்லை

சின்ன சின்ன வேலைகளைத் தொடர்ச்சியாகச் செய்து தந்ததற்கு

வீட்டுக்காரர் நயா பைசா படி அளந்ததில்லை

மாதா மாதம் ஐந்தாம் தேதி கடந்தால்

வாடகை கேட்டு வருபவர்

இருபத்து நான்கு படிகள் ஏறி இறங்கட்டும் என்பதற்காக

பத்து தேதி வரை வாடகையை இழுத்துக் கொண்டிருக்கிறேன்

படியேறி வந்து என்னைப் பார்ப்பதற்கும்

ஒருவர் இருந்து விட்டுப் போகட்டும்

உறவுகள் அற்று விட்ட மாநகரத்தில்

*****

16 Apr 2023

பொட்டலப் பாலுக்கு மாற்றுப் பால்

பொட்டலப் பாலுக்கு மாற்றுப் பால்

பால் பொட்டலங்கள் (பாக்கெட் பால்) உங்களை ஆச்சரியப்படுத்துகிறதா? உங்களை அது ஆச்சரியப்படுத்தாது. நீங்கள் உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் உற்றுப் பார்ப்பவராக இருந்தால் அது உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டும்.

மாடுகள் குறையப் போகிறது, மக்கள் பாலுக்காக அவதிப்படக் கூடாது என்பதற்காக எப்படியோ பால் பொட்டலங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். லூயி பாஸ்டர் இதற்கான அச்சாரத்தை எப்போதோ இட்டு விட்டார்.

நாம் நீண்ட காலம் மாடுகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தோம். கன்றுகளைக் கொன்று விட்டு அதன் வைக்கோல் பொம்மைகைளைக் காட்டி மாடுகளிடம் பாலைக் கறந்து கொண்டிருந்தோம். அதைப் பார்த்து உங்கள் உயிர்நேயம் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அப்படி ஒரு பாதிப்புக்கு நீங்கள் ஆளாகி விடக் கூடாது என்பதற்காகக் கூட பால் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம்.

எங்கள் ஊர் பால்காரர் பாண்டியண்ணனை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் அசல் பசுமாட்டுப் பாலைக் கொண்டு வருதாகச் சொல்லிக் கொண்டு பொட்டலப் பாலை ஊற்றிக் கொண்டு விற்றுக் கொண்டிருக்கிறார்.

மக்கள் பொட்டலப் பாலை நோக்கி நகர்ந்து விட்டாலும் அதற்கு எதிர்நிலையில் இருக்கும் கறந்த மாட்டின் பாலுக்கு ஒரு வியாபார இடம் இருக்கும் என்பதை உணர்ந்தவர் பாண்டியண்ணன். அவரது வியாபாரம் அதை நம்பித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

பொட்டலப் பாலின் விலை லிட்டருக்கு அறுபது ரூபாய்க்கு மேல். பாண்டியண்ணன் இன்னும் லிட்டர் நாற்பது ரூபாய்க்குத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பொட்டல பாலை வாங்கி ஊற்றினால் இது கட்டுபடியாகுமா என்று நீங்கள் கேட்கலாம்.

கட்டுபடியாவதற்கு நுட்பங்கள் இருக்கின்றன. பொட்டல பாலை வாங்கி ஊற்றி விட்டு நீங்கள் எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் விட்டுக் கொள்ளலாம். கூடவே வெள்ளை சர்க்கரையை (சீனியை) வாங்கிக் கொட்டி விட வேண்டும் என்ற நுட்பத்தை அவர் வைத்திருக்கிறார். இதனால் பாலுக்கு ஒரு பிசுபிசுப்பு மற்றும் கொழகொழ தன்மையும் அடர்வு கூடிய தன்மையும் வந்து விடுவதாக அவர் நுட்பத்தைக் கண்டறிந்து வைத்திருக்கிறார்.

பச்சிளம் குழந்தைகள் குடிக்கும் பாலில் இப்படிச் செய்யலாமா என்று நீங்கள் கேட்கலாம். நாம் மட்டும் யோக்கியமா என்ன? நம்மில் சிலர் பச்சிளம் குழந்தைகள் குடிக்க வேண்டாம் என்பதற்காகத் தாய்ப்பாலை நிறுத்தியவர்கள்தானே?

நம்மிடம் காசிருந்தால் பத்து மாதம் சுமந்து கஷ்டப்படாமல் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதைத்தானே விரும்புகிறோம். நம் குழந்தைகளுக்காக ஒரு தியாகத்தைச் செய்ய முடியாத நாம் பாலில் ஒரு பால்காரர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் எப்படி எதிர்பார்க்க முடியும்?

கொடுக்கின்ற காசுக்கு ஒரு நேர்மையை நாம் எதிர்பார்க்கலாம். நம்முடைய காசால் அந்த நேர்மையை மட்டும் வாங்கி விட முடியாது. நேர்மைக்குப் புறம்பான எவ்வளவோ விசயங்களை நம்முடைய காசால் வாங்கி விட முடியும். நேர்மை எப்போதும் நம்முடைய காசிடமிருந்து தப்பிக் கொண்டே போகும்.

ஒவ்வொரு நாளும் எவ்வளவு பால் பொட்டலங்கள் விநியோகம் ஆகின்றன? உண்மையில் அவ்வளவு பொட்டலங்களுக்கும் பால் கொடுக்கும் அளவுக்கு மாடுகள் இருக்கின்றனவா?

மாடுகள் இல்லாவிட்டாலும் அவ்வளவு பால் பொட்டலங்களை நிரப்பும் அளவுக்கு எப்படியோ பால் தயாராக வேண்டும். பால் பாக்கெட்டுகளுக்கு அப்புறம் தயிர் பொட்டலங்கள் இருக்கின்றன. தயிர் பொட்டலங்களைத் தொடர்ந்து வெண்ணெய் பொட்டலங்கள் இருக்கின்றன. வெண்ணெய் பொட்டலங்களைத் தொடர்ந்து நெய் புட்டிகள் இருக்கின்றன. பிறகு பன்னீர் போன்ற வகையறாக்கள் இருக்கின்றன.

இவை எல்லாம் எப்படியோ தயாராகின்றன. தொழிற்சாலைகள் இருந்த விட்டால் போதும் எப்படியும் தயாரித்து விடலாம். இவற்றின் இயற்கைத்தன்மை, உடலுக்கு உகந்த தன்மையைப் பற்றி நாம் கேள்வி எழுப்ப முடியாது. கேள்வி எழுப்பினால் இவற்றை நாம் உட்கொள்ள முடியாது.

இந்தப் பால் பொட்டலங்களுக்கு என்ன மாற்றுத் தீர்வு என்று நீங்கள் கேட்கலாம். தீர்வு அவ்வளவு கடினமானதா என்ன? நீங்கள் ஒரு மாடு வளர்க்கலாம். நீங்கள் நகரத்தில் இருபதுக்கு இருபது என்ற கொட்டடியில் இருந்தால் அது உங்களால் முடியாது. உங்கள் பசியைப் போக்கவே நீங்கள் அலைந்து கொண்டிருக்கும் போது மாட்டை மேய்த்து அலைந்து அதன் பசியைப் போக்க உங்களால் முடியாது.

கிராமத்திலும் மாடு வளர்ப்பு லாபகரமானதாக இல்லை. இல்லை என்று தெரிந்தாலும் வங்கிகள் கறவை மாட்டுக் கடன் கொடுப்பதை விட்டபாடில்லை. ஐம்பதாயிரத்துக்கு மாட்டுக்கடன் வாங்கி விடலாம். அதில் பதினைந்தாயிரத்தை நீங்கள் வெட்டி விட்டு அதாவது கையூட்டாகக் கைகழுவி விட்டு மீதி முப்பதினாயிரத்தை மாட்டை வாங்காமல் வேறு ஏதாவது ஒன்றிற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு உண்டான கடனுக்கான மானியத்தையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கணக்கில் எப்படிப் பதிவாகியிருக்கும் என்றால் இத்தனை லட்சம் மாடுகளுக்கு அதாவது கறவை மாட்டிற்கான கடன் வழங்கப்பட்டிருப்பதாக. அத்தனை எண்ணிக்கையில் நீங்கள் நகலெடுத்து நகலாக்கம் (காப்பி – பேஸ்ட்) செய்திருந்தால்தான் அது சாத்தியம்.

இங்கு மாடுகளே இல்லை என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ஆனால் இருக்கின்ற மாடுகளைக் கொண்டு, கறக்கின்ற பாலைக் கொண்டு கொள்முதல் நடந்து கொண்டு இருக்கும். அந்தப் பாலைக் கொண்டு மேற்கொண்டு எவ்வளவு அதிகமாகச் செய்து கொள்ள முடியும் என்பது தொழிற்சாலைகளுக்குத் தெரியும். அவை அந்த அளவுக்கு அதிமாக்கிக் கொள்ளும்.

நீங்கள் குடிக்கும் பாலில் மாட்டின் பால் சில சதவீதம் இருக்கக் கூடும். ஏதோ ஒரு குறிப்பிட்ட சதவீதமாக இருக்கிறது என்பதற்காக நீங்கள் திருப்தி பட்டுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு அந்த அளவுக்குக் கிடைத்தது கூட பெருங்கருணை சார்ந்த விசயம்தான். அது கூட இல்லையென்று போயிருந்தால் என்னதான் செய்திருப்பீர்கள்?

எனக்கு இதெல்லாம் வேண்டாம் என்றால் மற்றொரு தீர்வு இருக்கிறது. அதற்காகத்தான் நான் இந்தப் பத்தியை எழுதத் துவங்கினேன். இந்தப் பாலை நீங்களே தயாரித்துக் கொள்ளலாம். நம்பகமான பால். அதுதான் தேங்காய்ப் பால்.

மாட்டுப் பாலுக்கு நல்ல மாற்று இந்தத் தேங்காய்ப்பால். வயிற்றுக்கும் ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை செய்யக் கூடிய அருமையான பால். இந்தப் பத்தியைப் படித்த எவரேனும் அதையும் ஒரு வியாபார முறையாகச் செய்யத் துவங்கலாம். அப்படி ஏதாவது ஆரம்பமானால் அதன் நம்பகத்தன்மையை குறித்து எல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆகவேத்தான் ஒன்று சொல்கிறேன். அந்த நம்பகத் தன்மை குறித்த ஆய்வுகளுக்கு எல்லாம் செல்லாமல் நீங்களே தேங்காயை வாங்கி, துருவி, பிழிந்தெடுத்து உங்கள் சொந்தக் கைப்பக்குவத்திலேயே அந்தப் பாலைக் குடியுங்கள்.

இருக்கின்ற இடம் கொஞ்சமானாலும் ஒரு தென்னங்கன்றை நட்டு வையுங்கள். நீங்கள் அதிலிருந்து கிடைக்கப் போகும் தேங்காய்ப் பாலைக் குடிக்காவிட்டாலும் உங்கள் தலைமுறை குடிக்கும். ஒரு மாட்டை வளர்த்து பாலைக் கறந்து குடிப்பதை விட இந்தத் தேங்காய்ப்பால் முறை எளிமையானதுதான்.

நல்ல பாலைக் குடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தத் தேங்காய்ப் பால் முறைக்கு மாறிக் கொள்ளுங்கள். பொட்டலப் பாலே பரவாயில்லை என்று நினைப்பவர்கள் அப்படியே இருந்து கொள்வதை வேறு ஏதேனும் வழியிருக்கிறதா?

*****

14 Apr 2023

அப்படியே இயங்கிக் கொண்டிருக்கட்டும் உலகம்

அப்படியே இயங்கிக் கொண்டிருக்கட்டும் உலகம்

எந்த மனிதர்கள் மீதும்

பெரிதாக நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை

நம்பிக் கடன் கொடுக்கும் மனிதர்களை

நம்பாமல் இருப்பது எப்படியோ

டீக்கடை நாயர் எந்த நம்பிக்கையில்

நிற்கும் போதெல்லாம் டீ போட்டுத் தருகிறாரோ

பிரியாணிக்கடை பாயம்மா

எந்த நம்பிக்கையில் கேட்கும் போதெல்லாம்

பார்சலை எடுத்து நீட்டுகிறதோ

பெட்டிக்கடை பரமசிவம்

பார்த்த உடன் பீடிக்கட்டை

எடுத்துக் கொடுப்பதெல்லாம்

எந்த நம்பிக்கையில் சேருமோ

ஒற்றை ரூபாய் வைக்காமல்

பூசாரியிடம் பத்து ரூபாயை

வாங்கி வந்து விடும் போது

பனித்துளி தீப்பிடிப்பது போல பரபரவென ஆகி விடுகிறது

திரும்பி வராது என்ற நம்பிக்கை இருந்தும்

எந்த நம்பிக்கையில் இந்த உலகில்

கொடுக்கலும் வாங்கலும் நடக்கிறதோ

எனக்கு நம்பிக்கை இல்லை என்பது முக்கியமில்லை

அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு முக்கியம்

அப்படி இயங்கிக் கொண்டிருக்கட்டும் இந்த உலகம்

*****

வளர்ப்பு மிருகம்

நாயை வளர்க்கலாம்

அல்லது பூனையை வளர்க்கலாம்

ஆட்டை அல்லது மாட்டை வளர்க்கலாம்

கோழி வாத்து என்று

வளர்ப்பதன் விருப்பம் உங்கள் சுதந்திரம்

எதையும் வளர்க்காமல் இருந்தால்

உங்களையே நீங்கள்

ஒரு மிருகமாக வளர்த்துக் கொள்ளலாம்

*****