அப்படியே இயங்கிக் கொண்டிருக்கட்டும் உலகம்
எந்த மனிதர்கள் மீதும்
பெரிதாக நம்பிக்கை இருப்பதாகத்
தெரியவில்லை
நம்பிக் கடன் கொடுக்கும்
மனிதர்களை
நம்பாமல் இருப்பது எப்படியோ
டீக்கடை நாயர் எந்த நம்பிக்கையில்
நிற்கும் போதெல்லாம் டீ போட்டுத்
தருகிறாரோ
பிரியாணிக்கடை பாயம்மா
எந்த நம்பிக்கையில் கேட்கும்
போதெல்லாம்
பார்சலை எடுத்து நீட்டுகிறதோ
பெட்டிக்கடை பரமசிவம்
பார்த்த உடன் பீடிக்கட்டை
எடுத்துக் கொடுப்பதெல்லாம்
எந்த நம்பிக்கையில் சேருமோ
ஒற்றை ரூபாய் வைக்காமல்
பூசாரியிடம் பத்து ரூபாயை
வாங்கி வந்து விடும் போது
பனித்துளி தீப்பிடிப்பது
போல பரபரவென ஆகி விடுகிறது
திரும்பி வராது என்ற நம்பிக்கை
இருந்தும்
எந்த நம்பிக்கையில் இந்த
உலகில்
கொடுக்கலும் வாங்கலும் நடக்கிறதோ
எனக்கு நம்பிக்கை இல்லை என்பது
முக்கியமில்லை
அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு
முக்கியம்
அப்படி இயங்கிக் கொண்டிருக்கட்டும்
இந்த உலகம்
*****
வளர்ப்பு மிருகம்
நாயை வளர்க்கலாம்
அல்லது பூனையை வளர்க்கலாம்
ஆட்டை அல்லது மாட்டை வளர்க்கலாம்
கோழி வாத்து என்று
வளர்ப்பதன் விருப்பம் உங்கள்
சுதந்திரம்
எதையும் வளர்க்காமல் இருந்தால்
உங்களையே நீங்கள்
ஒரு மிருகமாக வளர்த்துக்
கொள்ளலாம்
*****
No comments:
Post a Comment