தங்கத்தின் கதை
பத்து மூட்டையோ
பனிரெண்டு மூட்டையோ
நெல்லைப் போட்டு
ஒரு பவுன் நகை வாங்கிய கதையைச்
சொல்லிக் கொண்டிருக்கிறார்
தாத்தா
ஒரு வேலி நிலத்தை விற்று
விட்டு
பத்து பவுனோ
பனிரெண்டு பவுனோ வாங்கிய
கதையைச்
சொல்லிக் கொண்டிருக்கிறார்
அப்பா
மாதா மாதம் வாங்குகின்ற
ஐயாயிரம் சம்பளத்தில்
ஐயாயிரத்தையும் மிச்சம் பண்ணினால்தான்
ஒரு பவுன் நகை வாங்க முடிகிற
புதுக்கதையை
தாத்தாவிடமும் அப்பாவிடமும்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
நான்
*****
மழைக்கோபம்
பெய்த பேய் மழையில்
தலை நனையாமல் வந்தாலென்ன
என்று
கோபித்துக் கொள்கிறாள் அம்மா
அலைபேசி நனையாமல்
எடுத்து வந்ததைப் பெருமையோடு
பேசிக் கொண்டிருக்கிறாள்
மகள்
இந்த மழைதான்
அரை மணி நேரம் கழித்துப்
பெய்திருந்தாலென்ன என்று
இப்போது மழையைக் கோபித்துக்
கொள்கிறாள் அம்மா
*****
No comments:
Post a Comment