இருப்பது போல இல்லாமல் இருக்கும் வாழ்க்கை
மலடி என்று விவாகரத்து ஆன
மாலதி
மறுமணமாகி இரட்டைக் குழந்தைக்குத்
தாயானாள்
நான்கு ஆண் பிள்ளைகளைப் பெற்று
விட்டதாய்ப் பெருமைபட்ட
நாகப்பன் நான்கு மருமகள்கள்
வந்ததும் நடுத்தெருவில் நின்றான்
பணித்திறன் போதாதென்று பணிநீக்கம்
செய்யப்பட்ட பரமசிவம்
பெட்டிக்கடை வைத்து சூப்பர்
மார்கெட் முதலாளியானான்
சிறந்த ஊழியர் விருதை வருடம்
தவறாமல் வாங்கிய
சிவனேசன் பென்சன் காசு போதாமல்
ஏடிஎம் காவலாளியானான்
படிக்க லாயக்கில்லை என்று
திட்டு வாங்கிய பரந்தாமன்
பதினைந்து பள்ளிக்கூடங்கள்
கட்டி கல்வித் தந்தையானான்
கலெக்டர் ஆவான் என்று எதிர்பார்க்கப்பட்ட
கண்ணபிரான் வேலை தேடி அலுத்துப்
போய் இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ட் ஆனான்
நீயெல்லாம் எங்கே உருப்பட
போறே என்று
தெருவே காறி உமிழ்ந்த தென்னரசு
கௌன்சிலரானான்
நல்லா வருவே என ஊரே வாழ்த்திய
நல்லதம்பி அற்பாயுசில் ஆம்புலன்சில்
அடிபட்டுப் போய் சேர்ந்தான்
நாற்பத்தைந்து ஆகியும் மணமாகாமல்
இருந்த நாகலிங்கம்
இரண்டு பெண்டாட்டிகளோடு குடித்தனம்
நடத்துவதாகக் கேள்வி
இருபத்தைந்தில் மணமாகி இரண்டு
குழந்தைக்குத் தந்தையான
இளங்கோவின் பொண்டாட்டி ஓடிப்
போய் இருபது வருடங்கள் ஆகி விட்டன
இந்த வாழ்க்கையை என்னவென்று
புரிந்து கொள்வது
நம்பிக்கைக்கு நம்பிக்கையின்மையும்
நம்பிக்கையின்மைக்கு நம்பிக்கையையும்
கலந்து கட்டி வைத்திருக்கும்
வாழ்க்கையில்
நம்பிக்கையோடு இருப்பதும்
நம்பிக்கையற்று இருப்பதும்
யாரோ ஒருவரின் கையில் இருப்பது
போல இல்லாமலும்
இல்லாமலிருப்பது போல இருப்பதிலுமிருக்கிறது
*****
No comments:
Post a Comment