சுற்றிச் சுழலும் விதி
சீழ்க்கைப் பிடித்தவன் காய்ச்சிய
சாராயத்தை
வாங்கிக் குடிக்க எல்லாருக்கும்
போட்டி
குடியைக் கெடுக்கிறதோ
குட்டிச் சுவராக்குகிறதோ
சீரழிக்கிறதோ சுடுகாட்டுக்குத்
தூக்கிச் செல்கிறதோ
சமரசம் உலவும் இடங்களில்
டாஸ்மாக்கும் உண்டென்று சொன்னால்
பழங்கவிஞனுக்குக் கோபம் வராமல்
இருக்க வேண்டும்
ஒரு நாள் திருந்தி விடுவான்
என்ற நம்பிக்கையில்
மனையில் காத்துக் கிடக்கிறாள்
ஒருத்தி
எத்தனை பேர் திருந்தினாலும்
புதிதாகக் கற்றுக் கொண்டு
ஒருவன் வந்து விடுவான் என்ற
நம்பிக்கையில்
கடையைச் சாத்துகிறான் மதுக்கடை
ஊழியன்
யாருடைய நம்பிக்கையையும்
ஏமாற்றி விடாதபடி
காலந்தோறும் சுற்றிச் சுழன்று
கொண்டிருக்கிறது விதி
*****
ஒரு நாள் விடுமுறை
ஒரு நாள் விடுமுறை கிடைத்தால்
எல்லா வேலைகளையும் முடித்து
விடலாம்
வங்கியில் கொஞ்சம் வேலை
அஞ்சலகத்தில் கொஞ்சம் வேலை
நகராட்சி அலுவலகத்தில் கொஞ்சம்
வேலை
ரேஷன் கடையிலும் கொஞ்சம்
வேலை இருக்கிறது
அடையாள சான்றுகளில் திருத்த
இணைக்க
சில பல வேலைகள் இருக்கின்றன
செய்வோம்என்று தள்ளிப் போட்ட
வேலைகளும் இருக்கின்றன
விசாரிக்க வேண்டிய விஷேசங்கள்
துஷ்டிகள் இருக்கின்றன
போய் பார்த்து விட்டு வர
வேண்டிய
சில சொந்த பந்தங்கள் இருக்கின்றன
அத்தனைக்கும் ஒரு நாள் விடுமுறை
போதாதெனினும்
ஒரு நாள் ஓய்வு தேவை என விண்ணப்பித்து
ஒரு நாள் விடுமுறை கிடைத்தால்
அத்தனை வேலைகளையும் முடித்து
விடலாம்
*****
No comments:
Post a Comment