24 Jun 2025

ஏன் இந்த விவசாய முறை தவறானது?

ஏன் இந்த விவசாய முறை தவறானது?

இது லாபத்திற்கான விவசாய முறை. அந்த லாபம் விவசாயிக்கானதன்று என்றாலும் நிச்சயமாகத் தற்போதைய விவசாய முறை வாழ்க்கைக்கானது கிடையாது.

இது வாழ்க்கைக்கான விவசாய முறை என்றால், இவ்வளவு ரசாயனங்களைப் பயன்படுத்தாது. முக்கியமாகக் களைக்கொல்லிகளைப் பயன்படுத்தாது.

இந்தக் களைக்கொல்லிகள் என்ன செய்திருக்கின்றன தெரியுமா?

மூலிகைகளை அழித்திருக்கின்றன. ஆடுகள், மாடுகளுக்கான உணவை அழித்திருக்கின்றன. எத்தனையோ புழு, பூச்சிகளை அழித்து விட்டன. பல்லுயிர்ப் பெருக்கத்தைக் காலி செய்து விட்டன. நெற்பயிரைக் கூட சுணங்க வைத்திருக்கின்றன.

எவ்வளவோ பேர் உழைத்த விவசாயம் இன்றில்லை. பல பேர் என்பதற்குப் பதிலாக இயந்திரங்கள் உழைக்கின்றன.

களைக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள் மூலமாக உருவாகும் விளைபொருட்கள் உடலுக்கு ஊறு விளைவிப்பன என்பது நிரூபணமாகி விட்டது. என்றாலும் நாம் ஏன் இந்த விவசாயத்தை நிறுத்த முடியவில்லை.

நாம் யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்? நம்மையேவா?

ஒரு கேள்விக்கான பதிலை இப்படி கேள்வியிலேயே முடிப்பது கொடுமையானதுதான் இல்லையா?

*****

23 Jun 2025

இது ராஜபாட்டை!

ராஜபாட்டை

யாரோ சிலர்தான் மருத்துவர்கள் ஆகிறார்கள்

யாரோ சிலர்தான் பொறியாளர்கள் ஆகிறார்கள்

யாரோ சிலர்தான் ஆட்சியராகிறார்கள்

யாரோ சிலர்தான் நட்சத்திரமாக மின்னுகிறார்கள்

இந்த யாரோ சிலருக்காக

எல்லாரும் வாழ்க்கையைப் பணயம் வைக்கிறார்கள்

தங்கள் சுயத்தை இழக்கிறார்கள்

சந்தோசத்தைத் தனித்தன்மையை இழந்து விட்டு

நிராசைகளைச் சுமக்கிறார்கள்

ஆயிரத்தில் ஒருவராக

லட்சத்தில் ஒருவராக

கோடியில் ஒருவராக

முயல்வதை விட

நீங்கள் ஏன் நீங்களாக முயலக் கூடாது

எல்லாரும் மருத்துவரானால்

யாருக்கு யார்தான் மருத்துவம் பார்ப்பது

எல்லாரும் பொறியாளர் ஆனால்

யாருக்கு யார்தான் வீடு கட்டுவது

எல்லாரும் ஆட்சியரானால்

யாருக்கு யார்தான் ஆட்சி செய்வது

நீங்கள் விரும்பும் வழியில் செல்லுங்கள்

யாரோ விரும்பச் சொல்லும் வழியில் செல்லாதீர்கள்

இன்னொருவருக்காக நீங்கள் வேறொருவர் ஆனால்

நீங்கள் ஓர் அடிமை

உங்கள் விருப்பமான வழியில் நீங்கள் ஓர் அடிமையானாலும்

நீங்கள் ஒரு ராஜா

*****

22 Jun 2025

நாட்டில் எத்தனையோ தரமான சம்பவங்கள்!

யோசிக்க யோசிக்க அறிவைத் தாண்டியும் ஆச்சரியம் தரக் கூடிய விசயங்களில் ஒன்று :

கல்வியின் மூலம் கற்றுக் கொள்ளும் மனிதர்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அன்பு, சகோதரத்துவம், கூட்டுக்குடும்பம் என்று ஒவ்வொன்றையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.

எங்கள் கிராமத்தில் படிக்காதவர்களும் அரைகுறையாகப் படித்தவர்களும் எப்படி கடைசி வரை பெற்றோர்களைப் பாதுகாத்தார்கள் என்பதும், படித்து வேலைக்குப் போனவர்கள் எல்லாம் எப்படி பெற்றோர்களை மறந்து தனிக்குடித்தனம் போனார்கள் என்பதும் இப்போது வரை யோசிக்க யோசிக்க ஆச்சரியமாக இருக்கிறது.

*****

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் ஆன கதைக்கு ஓர் உதாரணம் :

இணைய வழியில் (ஆன்லைனில்) ஆடைகள் வாங்குவதை எதற்குச் சிறந்த உதாரணமாகக் கூறலாம்? இணைய வழியில் (ஆன்லைனில்) நாம் பார்க்கின்ற ஆடைகள் ஒன்றாகவும், நமக்குப் பொட்டலம் கட்டி (பார்சலில்) வருகின்ற ஆடைகள் வேறொன்றாகவும் இருக்கின்றன. பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் ஆன கதைக்கு அதுதான் தற்காலத்திற்கான சரியான உதாரணமாக இருக்கும்.

*****

மரண மாசு என்றால் என்றால் என்ன தெரியுமா?

மாசுபட்ட நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடம். முதலிடம் பிடிக்கும் நாளே மரண மாசு.

*****

அண்மைக் காலமாக ஞாயிற்றுக் கிழமையில் ஏற்பட்டுள்ள மாற்றம் :

விடுமுறை நாளிலிருந்து முகூர்த்த நாளாகி விட்டது ஞாயிற்றுக் கிழமை.

*****

சின்ன சின்ன ஆசை என்பதெல்லாம் 90களின் குழந்தைகளின் (90s கிட்ஸ்களின்) காலம் என்றாகி விட்டது. பெரிய பெரிய ஆசைகளே இரண்டாயிரமாவது ஆண்டுகளின் குழந்தைகளின் (ஜென் இசட்டுகளின்) காலம் என்றாகி விட்டது. அப்படி ஒரு பெரிய பெரிய ஆசை :

ஆயுளுக்குள் ஒரு சுங்கச் சாவடிக்கு உரிமையாளராகி விட வேண்டும்.

*****

இந்தியாவும் தமிழகமும் ஒரே இடத்தில் இருப்பதற்கான புள்ளிவிவரத் தரவு :

உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் நாடுகளின் பட்டியலில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் மாநிலங்களின் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

என்ன ஒரு ஒற்றுமை. இந்தியாவும் இரண்டாம் இடம். தமிழகமும் இரண்டாம் இடம்.

*****

21 Jun 2025

இந்தி படித்தால்தான் வருங்காலத்தில் அரசு வேலைகளா?

இந்தி படித்தால்தான் வருங்காலத்தில் அரசு வேலைகளா?

இந்தி படித்தால்தான் வருங்காலத்தில் அரசு வேலைகள் என்றால்… ஏன் இளைஞர்கள் ஆங்கில பயிற்சி வகுப்புகளுக்குச் செல்கிறார்கள்? கணினிநிரல் மொழி எழுத கற்றுக் கொள்கிறார்கள்? செயற்கை நுண்ணறிவில் புதிது புதிதாகக் கற்றுக் கொள்ள விழைகிறார்கள்? நீட் தேர்வுக்கும், ஜேஇஇ தேர்வுக்கும் அவ்வளவு சிரமப்பட்டு உயிரியியலையும், கணிதவியலையும், இயற்பியலையும், வேதியியலையும் கற்றுக் கொண்டு கிடக்கிறார்கள்?

சிஏ படிப்பிற்காகப் படாதபாடு பட்டு படிப்பவர்களையெல்லாம் என்ன சொல்வது? அவர்கள் எல்லாம் இந்தியை மட்டும் படித்து சுலபமாக அரசு வேலை வாய்ப்புகளைப் பெறாமல் ஏன் நகைச்சுவை தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

அது சரி வடமாநிலங்களில் இந்தி பேசும் அனைவரும் அரசு வேலையில் இருக்கிறார்களா? அல்லது இந்தி தெரிந்தாலே அரசு வேலையில் இருப்பது போலத்தானோ என்னவோ!

முத்தமிழ் வளர்ந்த தமிழ் நிலத்தில் மூன்றாவது மொழியாகத் தமிழ் ஏன் இருக்கக் கூடாது என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது?

இந்தப் பிள்ளைகளுக்கு இருமொழிக் கொள்கையில் இங்கிலீஷையே நுழைக்க முடியவில்லை. மும்மொழிக் கொள்கையில் ஹிந்தியும் என்றால்… மேரா நேம் இஸ் தமிழ்வாலா.

ஹிந்தியால் பள்ளிக்கூடங்கள் இப்படி ஒரு பிரச்சனையைச் சந்திக்கக் கூடும்.

மும்மொழிக் கொள்கை என்றால் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தமிழ், ஆங்கிலச் செய்திகளோடு ஹிந்தி செய்தியும் வாசிக்க வேண்டும். தமிழில் வாசித்ததை அப்படியே ஆங்கிலத்தில், ஆங்கிலத்தில் வாசித்த்தை அப்படியே ஹிந்தியில். ஒரே செய்தியை மூன்று முறை கேட்க வேண்டும்.

ஏன் ஹிந்தி என்றால், அதற்கு இப்படியும் கீழ்கண்ட காரணங்கள் சொல்லப்படலாம்.

இரண்டு என்று இரட்டைப்படையில் இருப்பதால் அது நாட்டிற்கு நல்லதில்லை. மூன்று என்று ஒற்றைப்படையில் இருந்தால் நல்லது நடக்கலாம். அதனால் மூன்றாவது ஹிந்தி மொழியும் கற்க வேண்டும். ஹிந்தி எதற்கு என்றால் அமெரிக்கா அதிபர் டிரம்பிடம் பேச உதவுவதற்காக. அமெரிக்க அதிபர் டிரம்பின் மொழி ஹிந்தி. அவர் விரைவில் ஹிந்தியைச் சர்வதேச மொழியாக்குவார். அப்போது ஹிந்தி தெரியாதவர்கள் எல்லாம் அமெரிக்காவில் வேலை பார்க்க முடியாது. டிரம்ப் ஹிந்தி தெரியாத அமெரிக்கர்களைக் கை கால்களில் விலங்குகள் இட்டு நாடு கடத்துவார். நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறதல்லவா.

ஹிந்தி கற்பதற்கான அவசியம் குறித்து பலவித கற்பிதங்கள் கீழ்கண்டவாறும் பரப்பப்படலாம்.

ஹிந்தி தெரிந்தால் எல்லா நாடுகளுக்கும் போகலாம். இந்தியாவிற்குள்தானே எல்லா நாடுகளும் இருக்கின்றன. உலக நாடுகள் அனைத்துமே ஹிந்தியைக் கற்க ஆர்வம் காட்டுகின்றன. கனடா அதிபரின் தோல்விக்குக் காரணம் அவருக்கு ஹிந்தி தெரியாததுதான்.

ஹிந்தி பேசி டீக்கடை போடும் போது டீயும் வடையும் சுடச்சுட வேகமாக விற்பனை ஆவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பானிபூரியும் பேல்பூரியும் விற்க ஹிந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசர சட்டம் பலரை ஹிந்திப் படிக்கத் தூண்டியிருக்கிறது.

ஹிந்தி திணிப்பின் தாக்கம் முடிவில் இப்படியும் வெளிப்படலாம்.

முதியோர் கல்வித் திட்டத்தில் ஹிந்தியில்தான் கற்பிக்கப்படும் என்கிறார்கள். அந்தத் தள்ளாத வயதில் எதைக் கற்பித்தால் என்ன? கண்ணும் புரியாமல், காதும் கேட்காமல் ஹிந்தி கற்பது சுலபமாக இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.

விரைவில் இந்தி – ஆங்கிலம் – ஹிந்தி அகராதிகளை லிப்கோவும் மணிமேகலைப் பிரசுரமும் வெளியிடக் கூடும்.

தாகம் எடுத்தால் தண்ணீர் என்று கேட்பதா? வாட்டர் என்று கேட்பதா? பானி என்று கேட்பதா? என்று யோசிப்பதற்குள் மூச்சு முடிந்து விடும்.

4000க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை என்பதில் என்ன பெருமை இருக்கிறது? தமிழும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது, இந்தியும் தெரியாது என்பது பெருமையின் பட்டியலில் வந்து விடும்.

முடிவில் இதன் மோசமான அங்கதம் இப்படித்தான் இருக்கும்.

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? என்று எடுத்துச் சொன்னால் இங்கிலீசால் மட்டும் கெடலாம், ஹிந்தியால் கெடக்கூடாதா என்கிறார்கள்.

தமிழை ஆட்சி மொழியாக்குங்கள் என்றால், ஆட்சி மொழிதானே? தமிழ் ஆட்சி மொழி. ஹிந்தி பேச்சு மொழி. ஆஹாஹாஹா என்று சிரிக்கிறார்கள்.

அவர்கள் ஹிந்தியைத் திணிக்கிறார்கள். நம்மால் ஏன் தமிழைத் திணிக்க முடியவில்லை.

ஹிந்தி படித்தால்தான் அரசு வேலை வாய்ப்பு என்கிறார்கள். வருங்காலத்தில் அரசு வேலைவாய்ப்புகள் என்பதைக் கேட்கும் போதே சிரிப்பு சிரிப்பாகத்தான் வருகிறது.

*****

20 Jun 2025

கடன் வாங்கும் முன்…

கடன் வாங்கும் முன்…

கடன் வாங்கும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் என்னென்ன தெரியுமா?

இப்படி ஒரு கேள்வியைக் கடன் வாங்குவதற்கு முன் உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இவ்வளவு விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், கடன் வாங்காமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு நீங்கள் வந்தாலும் வந்து விடுவீர்கள்.

விவரங்களைத் தெரிந்து கொள்ளாமலோ, விவரமில்லாமலோ கடனை வாங்கினால், ‘கடன் கொண்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று இலங்கை வேந்தனுக்குச் சொல்லப்பட்ட உவமை உங்களுக்கும் சொல்லப்பட வேண்டியதாகி விடும்.

கடன் வாங்கும் முன் பின்வரும் விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் விவரங்களை அறியாத அறியாமையே கடனைக் காலைச் சுற்றிய பாம்பாக மாற்றி விடும். அவ்விவரங்களாவன,

1. கடன் குறித்த அனைத்து விதிமுறைகள். ஏனென்றால் விதிமுறைகளைக் காட்டியே கடன் கொடுத்த நிறுவனங்கள் மிரட்டுகின்றன.

2. கடன் வழங்குவதற்கான மறைமுகக் கட்டணங்கள். ஏனென்றால் நீங்கள் கேட்ட கடன்தொகை ஒன்றாகவும், உங்களுக்கு வழங்கப்படும் கடன்தொகை வேறொன்றாகவும் இருப்பதற்கு இதுவே காரணம்.

3. கடனைத் திரும்ப செலுத்த ஆகும் காலம். ஏனென்றால் இதை அறிந்து கொள்ளாவிட்டால் உங்கள் ஆயுள் முழுவதும் கடன் தவணைத் தொகையைக் கட்டுவதிலே செலவழிந்து விடும்.

4. கடனுக்கான வட்டி விகிதம். ஏனென்றால் இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் திடீரென உங்கள் கடனுக்கான தவணைத் தொகை ஏன் அதிகரிக்கிறது என்பதற்கான காரணத்தை உங்களால் தெரிந்து கொள்ள முடியாது.

5. மாதத் தவணைத் தொகை. ஏனென்றால் இதைத் தெரிந்து கொண்டால்தான் தவணைத் தொகைப் போக மற்ற செலவினங்களை உங்களால் திட்டமிட முடியும்.

6. மாதாந்திர தவணைத் தொகை அட்டவணை. ஏனென்றால் இப்படி ஓர் அட்டவணையை நீங்கள் கேட்டு வாங்கி விட்டால் உங்களிடமிருந்து கூடுதலாகப் பிடிக்கப்படும் தொகையை நீங்கள் ஆதாரத்தோடு கேள்வி கேட்க முடியும்.

7. தவணை தவறினால் விதிக்கப்படும் அபராதம். ஏனென்றால் இதைத் தெரிந்து கொண்டால் தவணை தவறாமல் நீங்களும் கட்டுவீர்கள். கூடுதல் அபராதங்களை நிறுவனங்களாலும் வசூலிக்க முடியாது.

8. கடனை இடையில் முடிப்பதற்கான வாய்ப்புகள். ஏனென்றால் இதைத் தெரிந்து கொண்டால் கடனை இடையில் முடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத கடன்களை நீங்கள் தவிர்த்து விடலாம்.

9. கடனைக் கட்டத் தவறினால் எடுக்கப்படும் நடிவடிக்கைகள். ஏனென்றால் இதை நீங்கள் அறிந்து கொண்டு விட்டால் அந்த நிறுவனத்திடமிருந்து நீங்கள் கடனை வாங்கலாமா வேண்டாமா என்பதை முடிவெடுத்து விடலாம். இல்லையென்றால் கந்துவட்டிக் கும்பலிடம் மாட்டிக் கொண்ட நிலை ஏற்பட்டு விடும்.

10. கடன் பெற்றோரின் அனுபவங்கள். ஏனென்றால் இதை நீங்கள் விசாரித்து அறிந்து கொண்டால்தான் நீங்கள் சரியான நிறுவனத்திடமிருந்து கடன் வாங்குகிறீர்களா என்பதே புரிய வரும். இல்லையென்றால் கடனுக்காக அந்த நிறுவனம் உங்கள் மானம் மரியாதை உட்பட அனைத்தையும் காலி செய்யத் தயங்காது.

இந்தப் பத்து விவரங்களையும் நன்கு தெரிந்து கொண்டு கடன் வாங்குங்கள். அதை விட இன்னொரு முக்கியமான பதினொன்றாவது விவரம் என்னவென்றால், இயன்றவரை கடன் வாங்குவதைத் தவிர்த்து விடுங்கள். அப்படித் தவிர்த்து விட்டால் மேற்படி பத்து விவரங்களுமே உங்களுக்குத் தேவைப்படாது.

*****

19 Jun 2025

பிரியாணிக்குப் பதில் ஒரு பிளாஸ்டிக் நாற்காலி!

பிரியாணிக்குப் பதில் ஒரு பிளாஸ்டிக் நாற்காலி!

என்னிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்பவரிடம்

கடன் கேட்கச் சொல்லிப் பார்க்கிறது மனது.

*****

உலகமே ஒரு கிரமமாகி விட்டது

கிராமத்து வேலி சண்டை, வரப்புச் சண்டை போல

உலகத்திலும் சண்டைகள் அதிகமாகி விட்டன.

*****

டாஸ்மாக் இல்லாத தமிழகம் எப்படி இருக்கும்?

மனித வளத்தில் பாஸ்மார்க் பெற்ற தமிழகமாக இருக்கும்.

*****

அமெரிக்கா தொடங்கி வைத்த வர்த்தகப் போர்

அமெரிக்காவே தோற்றுப் போகும் போது முடிவுக்கு வரும்.

*****

பங்சாங்கமே பார்க்க வேண்டியதில்லை

அனைவரும் விரும்பும் முகூர்த்த நாள்

ஞாயிற்றுக் கிழமை.

*****

அசோகர் காலத்திற்கும் நம் காலத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.

அசோகர் காலத்தில் சாலை ஓரத்தில் மரங்கள் நடப்பட்டன.

நம் காலத்தில் சாலை விரிவாக்கத்திற்காகச் சாலை ஓரங்களில் நின்றிருக்கும் மரங்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்படுகின்றன.

*****

பொதுக்கூட்டங்கள்தான் காலந்தோறும் எப்படியெல்லாம் மாறி விட்டன.

ஒரு பொதுக்கூட்டத்துக்குப் போனால் முன்பெல்லாம் இருநூறு ரூபாயும் பிரியாணியும் கிடைத்தது. இப்போதெல்லாம் ஒரு பிளாஸ்டிக் நாற்காலி கிடைக்கிறது.

*****

18 Jun 2025

வாழ்க்கையின் பொழுதுபோக்கு

வாழ்க்கையின் பொழுதுபோக்கு

ஒரு காலத்தில் கதைப் புத்தகம் படிப்பதை

பொழுதுபோக்காகக் கொண்டார்கள்

அடுத்து வந்தக் காலத்தில் வானொலி கேட்பதை

பொழுதுபோக்காகக் கொண்டார்கள்

அதற்கடுத்து வந்தக் காலத்தில் தொலைக்காட்சி பார்ப்பதை

பொழுதுபோக்காகக் கொண்டார்கள்

அதற்கும் அடுத்து வந்தக் காலத்தில் இணையத்தில் உலாவுவதை

பொழுதுபோக்காகக் கொண்டார்கள்

அதற்கும் அடுத்து வந்தக் காலத்தில் சமூக ஊடகங்களில் மேய்வதை

பொழுதுபோக்காகக் கொண்டார்கள்

முழுவதும் அதிலேயே மூழ்கி

கண்களை மனதைக் கண்டதையும் கெடுத்துக் கொண்டவர்கள்

கெடுத்துக் கொண்டே இருந்தார்கள்

எதையும் கண்டு கொள்ளாமல் போனவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்

டாஸ்மாக் அருகில் குடிக்காதவர்களும் இருக்கிறார்கள்

டாஸ்மாக்கிற்குத் தொலைவில் குடிப்பவர்களும் இருக்கிறார்கள்

அவரவர் மனம் அவரவர் விருப்பம் அவரவர் வாழ்க்கை

அறிவுரைகளுக்கும் ஆதங்கங்களுக்கும் எப்போதும் குறைவிருக்காது

நடப்பது நடந்து கொண்டிருக்கும்

மாறுவது மாறிக் கொண்டிருக்கும்

ஓர்மையோடு இருப்பவர்கள் இருப்பார்கள்

ஓர்மையின்றி அழிபவர்கள் அழிவார்கள்

புத்தி வந்து திருந்துபவர்கள் திருந்தாவர்கள்

திருந்தாதவர்களுக்காகப் பிரார்த்திப்பவர்கள் பிரார்த்திப்பார்கள்

மாறி மாறிச் சுழலும் வாழ்க்கை

நன்றாக இருப்பவர்கள் நாசமாகப் போவார்கள்

நாசமாய்ப் போனவர்கள் நன்றாக இருப்பார்கள்

மாற்றமின்றியும் மாண்டு போகுபவர்கள் போவார்கள்

சுழல்வது மட்டும் மாறாது

*****