29 May 2018

வார்த்தைக் குறிப்பு

வார்த்தைக் குறிப்பு
வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்கப் போன
குழந்தை
வண்ணத்துப் பூச்சியாக திரும்பி வந்தது
பிடிக்க முடியாத குறும்புகளோடு
கானகமான வீட்டில் பறக்கும் அதை
பார்க்க பார்க்க
வண்ணத்துப் பூச்சியானவர்கள்
வண்ணத்துப் பூச்சியைப் பார்ப்பவர்கள்
வண்ணத்துப் பூச்சியாகிறார்கள் என்ற
எச்சரிக்கை வாசகத்தை எழுதி வைத்தனர்
வண்ணத்துப் பூச்சியைப் பார்ப்பதைத்
தவிர்ப்பது நல்லது என
முடிவெடுத்துக் கொண்டனர்
தங்கள் குழந்தைகளோடு
அவ்வாசகத்தைக் கடக்க முயன்ற மனிதர்கள்
*****

யானை பார்த்த கதை


யானை பார்த்த கதை
நான்கு குருடர்கள்
யானை பார்த்த கதை தெரியும்
என்ற ஒருவன்
நீயும் அப்படித்தான் என்றான்
அவர்களுக்குத் தெரிந்திருந்தால்
யானை பார்த்த கதை இல்லை
என்ற நான்
யானை பார்க்காத
அவன் கதையைச் சொல்லத் துவங்கினேன்.
*****

28 May 2018

கண்டுக்காதீங்க ப்ளீஸ்! (Five Points Management)


கண்டுக்காதீங்க ப்ளீஸ்! (Five Points Management)
            1. சில கேள்விகளுக்குப் பதில் இல்லை. அது மனதின் பயம் அல்லது சந்தேகம். அதற்குச் சாதுர்யமானப் பதிலைச் சொல்ல முனையக் கூடாது. அவர்களின் உளவியலைப் புரிந்து கொண்டு மரியாதையோடு கூடிய புகழும்படியானப் பதிலைச் சொல்ல வேண்டும். ஒருவரின் பயத்தையும், சந்தேகத்தையும் களைவதற்கு அதுதான் பதிலா என்றால் அதுதான் அந்த ஒருவருக்கு ஏற்ற பதில். மரியாதையும், பாராட்டும் குறையும் இடத்தில் அதுபோன்ற பயமும், சந்தேகமும் நிறையவே வரும்.
            2. சில சமயங்களில் அப்படித்தான் நடக்கும். அதற்கு எதுவும் செய்ய இயலாது. கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டு விட வேண்டும். அதை நோண்டி நோண்டி பார்ப்பது என்பது ஆறும் புண்ணை நோண்டி நோண்டிப் பார்ப்பதைப் போன்றது. நேர்மையாக இருக்கிறோம் என்பது எறியப்படும் கல்லுக்கு எப்படித் தெரியும், அதை எறிபவருக்கே தெரியாத போது.
            3. சில இடங்களில் மற்றவர்கள் தான் எனும் ஆணவத்தோடு பேச ஆரம்பிக்கும் போது, நாமும் தாம் எனும் ஆணவத்தோடு பேசத் தொடங்குவோம் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லாம் பழக்கதோஷம். அப்படி நேர்ந்து விடும். அப்படிப் பேசி அதில் எந்தப் பயனும் உண்டாகப் போவதில்லை. வீண் வம்பும், மன பேதங்களும்தான் மிச்சம்.
            தேவைப்படுவது புரிந்து கொள்வதற்கான தன்மையே. அதை எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது. அவர்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்பது புரியாமலே இங்கே பல பேர் இருக்கிறார்கள்.
            ஆக, தணிப்பதற்கானப் பேச்சு என்பது வேறு. இவ்வளவு கோபப்படுகிறீர்களே என்று சொல்வதை விட, கோபமே வராத உங்களுக்கு இவ்வளவு கோபம் வந்து விட்டதே என்று சொல்வதுதான் தணிப்பது என்பது. அதாவது தணிப்பது என்பது புத்திசாலிதனமான விளக்கங்கள் சொல்வது அல்ல, முகஸ்துதி செய்வதுதான்.
            4. சில நேரங்களில் தொழில்நுட்ப சாத்தியங்களைப் பார்க்கும் போது பிரமாண்டமாக இருக்கிறது. அப்படி ஒரு பிரமாண்டம் வாழ்விலும் சாத்தியம்தான். மனதுக்கு ஒத்து வராது. பிரமாண்டங்கள் இல்லாமல் இருப்பது மனதுக்கு நல்லது. ஆனால் அந்தப் பிரமாண்டங்கள் உருவானது எல்லாம் மனதில்தான் என்பதை நினைத்துப் பார்த்தால் அது அதை விட பிரமாண்டமாக இருக்கும்.
            5. சில பொழுதுகளில் செய்ய வருமோ? வராதோ? என்று நினைத்துக் கொள்ளலாம். செய்யத் துவங்கினால் அது வரும். ஆக செய்ய முடியுமா? முடியாதா? என்பது இல்லை. செய்யத் துவங்கினால் அது முடியும். செய்வதற்கு முன்னான மனநிலை வேறு. செய்யத் துவங்கி விட்டால் ஏற்படும் மனநிலை வேறு. அதனால் மனநிலைகளை நம்பி ஏமாற வேண்டாம். தொடங்கி விடுவது எல்லாவற்றையும் மாற்றி விடும். எத்தனையோ முன்முடிந்த பல முடிவுகளை அவைகள் தூள் தூளாக்கியிருக்கின்றன.
*****

27 May 2018

சொல்லத்தான் நினைக்கலாம்!


சொல்லத்தான் நினைக்கலாம்!
            1. சில குறிப்பிட்ட விளைவுகளைப் பார்க்கும் போது அது கிடைக்காமல் போனால் நிச்சயம் கோபம் ஏற்படத்தான் செய்யும். அப்படியெல்லாம் விளைவுகளை எதிர்பார்த்துக் கொண்டு வாழ வேண்டியதில்லை.
            2. மனிதர்கள் யாரை எப்போது எப்படி தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்பது தெரியாது. அதனால் அவர்களிடம் எச்சரிக்கையாக, கவனமாகப் பேச வேண்டும் என்பதல்ல பேசாமல் இருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
            3. வார்த்தைகளை நிதானமாகப் பேச வேண்டும். அதுதான் நல்லது. என்ன பேசுகிறார்கள் என்பதற்கான விளக்கத்தையும் அவ்வபோது கேட்டுக் கொள்ள வேண்டும். லாஜிக் ஆன கேள்விகளைக் கேட்கத் தவறக் கூடாது. அப்போதுதான் ஒரு மரியாதை கிடைக்கும். லாஜிக் தவறாகக் கூட இருக்கலாம்.
            4. பிடித்த மாதிரிதான் வாழ வேண்டும். அதற்குதான் வாழ்க்கை. என்ன பிடித்திருக்கிறது என்பது வெளியில் தெரியக் கூடாது.
            5. நல்லதைச் சொன்னாலும் கோபத்தில் சொல்லி விடக் கூடாது. அதைத் தவறாகப் புரிந்து கொள்ளும் உலகில் இருக்கிறோம்.
            6. எதற்காகவும் மிகுதியாக அலட்டிக் கொள்ள வேண்டாம். போகிறப் போக்கில் போய்க் கொண்டிருக்கவும். அப்படியே அதை விட்டு விடலாம் அல்லது அதுவே நம்மை விட்டு விடும்.
            7. யார் பெரியவர் என்ற எண்ணம் இருக்கிற வரை போட்டிகளும் இருக்கும், சண்டைகளும் இருக்கும். யார் சிறியவர் என்பதற்கானப் போட்டிகள், சண்டைகள் அவைகள்.
            8. சமாதானம் என்பது நீண்ட நேரம் சண்டை போட்டு விட்டோமே என்பதற்காக நாம் செய்து கொள்ளும் சால் சாப்புதான். பிறகுதான் மிக உக்கிரமான சண்டைகள் தொடங்குகின்றன.
            9. சண்டை என்று வந்து விட்டால் பீஷ்மராக இருந்தாலும் முள் படுக்கையில் படுப்பதைத் தவிர்ப்பது கடினம்.
            10. செய்வதற்கு முன் கடந்த கால அனுபவங்களை ஒரு முறை கலந்தாலோசிக்க வேண்டும். சென்ற முறை வாங்கிய அடி பலமாக இருக்கலாம்.
            11. எப்படி வேண்டுமானாலும் மாறிக் கொள்ளலாம். அது ஒரு பிரச்சனையில்லை. அதற்காகவே பிறந்துள்ளோம். பிறப்பின் நோக்கம் நிறைவேறாமல் போய் விடக் கூடாது.
            12. சிறிது நேரம் அதையே செய்து கொண்டிருந்தால் எதைச் செய்கிறோமோ அதில் ஆழ்ந்த கவனம் தானாக வந்து விடும். வன்முறைகள் எல்லாம் அப்படித்தான். கடைசியில் குற்ற உணர்ச்சி செத்து விடும்.
*****

26 May 2018

காக்கையின் அமுதம்


அழைப்பு
இலைகள் கையை ஆட்டி தடுத்தாலும்
மரத்தை விட்டு
பறவைகள் விலகுவதில்லை
மனிதர் கையை நீட்டி அழைத்தாலும்
பறவைகள் வருவதில்லை
*****
காக்கையின் அமுதம்
செத்துப் போய்
நாறிக் கிடக்கும் எலி
என்று சொல்லாதே
காக்கையின் பசி
என்று சொல்
மூக்கை மூடிக் கொண்டாவது
வாயைத் திறந்து
ஒரு காகத்தை அழை
*****

படைப்பாளன் என்ற முறையில்...

படைப்பாளன் என்ற முறையில்...
கவிதைக்கும் உரைநடைக்கும் இடையே
அல்லாடிக் கொண்டிருந்த படி
சற்றே நவீனமாக உடை அணிந்தவர்களிடம்
உலக இலக்கியம் கலந்து
அவர்களைச் சற்றே நயந்து
ஒரு வாய் டீ குடிப்பதற்காக
பேச நினைத்து கவிதைகளாய் உளறி
எழுத நினைத்து உரைநடையில் தடுமாறி
தன்னைத் தானே தீர்மானித்துக் கொள்ளும்
பெருவெளியில் தீர்மானமின்றி அலைந்து
அதுவாக அது எழுதிக் கொள்ளும் என்ற
நம்பிக்கையில் எது குறித்தும் கற்காமல்
இது நாள் வரை இருந்து விட்டதை எண்ணி
இதை வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும்
பின்னால் ஒரு பெருங்கூட்டம் வரும் என்று
அதற்கிடையில் அது செத்துக் கிடப்பதைப் பார்த்து
படைப்பாளன் என்ற முறையில்
சிரித்துக் கொள்வதைத் தவிர
வேறு மார்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை என்பவன்
கழிவறைத் தொட்டியில் வீசி எறிகிறான்
அணிய முடியாத மீசை வைத்த முகமூடியை
*****

பல நேரங்களில் பல மனிதர்கள்


பல நேரங்களில் பல மனிதர்கள்
            மாற்றம் என்பது மாறாததுதான், ஆனால் யாரையும் அவ்வளவு எளிதில் மாற்றி விட முடியாது. எவரும் தங்கள் மனநிலையை அவ்வளவு எளிதாக மாற்றிக் கொள்ள தயாராக இருக்க மாட்டார்கள்.
            தங்கள் மனநிலையே உயர்வானது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களை அவ்வளவு எளிதில் மாற்றி விட முடியாது. அப்படிப்பட்டவர்கள் தங்கள் மனநிலைகளால் இந்த உலகில் ஏற்படுத்தும் பிரச்சனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதனால் நேரும் சிக்கல்களும் கணக்கில் அடங்காதவை.
            அப்படிப்பட்டவர்களை நம்பி எந்த ஒன்றையும் செய்து விட முடியாது. அப்படி எதையாவது செய்தால் அவர்கள் அதற்கு எதிராக மாறி விடுவார்கள். அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்லது செய்யப் போவதாக நினைத்துக் கெடுதலில் மாட்டிக் கொண்ட நிகழ்வுகள் அநேகமாகி விடும்.
            அவர்களிடம் எதையும் சொல்ல வேண்டியதில்லை. சொன்னாலும் அவர்கள் எதையும் நம்பப் போவதில்லை. உண்மையைச் சொன்னால் பொய் என்பார்கள். உள்ளுணர்வால் எழுவதைச் சொன்னாலும் சந்தேகப்படுவார்கள். அவர்களிடம் நல்லது எதையாவது சொல்லி முட்டாள்பட்டம் வாங்குவது தேவையில்லாதது. அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் அர்த்தமில்லாதது. அவர்களைப் பொருத்த வரையில் அவர்கள் நினைப்பதுதான் சரியானது. அவர்கள் அப்படியே இருந்து கொள்ளட்டும்.
            அவர்கள் எமோஷனலாக ப்ளாக்மெயில் செய்யும் ஒவ்வொரு முறையும் தங்களின் சுய உருவத்தை நிர்சலனமாகக் காட்டுவார்கள். அதுபோன்ற நிலைமைகளில் அவர்களைச் சமாதானப்படுத்துவது பிரச்சனைகளின் உச்சகட்டம். அப்படி ஏதேனும் நிகழ்வுகள் நடக்குமானால் அவைகள் அபத்தத்தின் உச்சக்கட்டம். அதே போன்ற முட்டாள்தனத்தை அடுத்தடுத்தும் வழக்கம் போல நிகழ்த்தும் முட்டாள்தனமும் நிகழவே செய்யும். எப்படியாவது சமாதானப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணமாக இருக்கும். கடந்த காலத்தில் பாடம் கற்றுக் கொள்ளாத முட்டாள்தனமே அது. அது போன்று உணர்ச்சிகரமான மிரட்டுபவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டுமே தவிர, முட்டாள்தனமாக அல்ல. அவர்களை அவர்களின் போக்கில் விட்டு விடுவதுதான் அதற்குச் சிறந்த வழி. சரியான வழியும் கூட. சமயங்களில் அழுது கூட ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள். அது வெள்ளந்தியாக இருப்பது போலக் காட்டி அவர்கள் செய்த வன்முறை என்பது புரியவே நாளாகும்.
            இப்படி அவர்கள் செய்வது சரியில்லைதான். அவைகளைச் சரியாக்க முயன்றால் அதன் பின் எதுவும் சரியில்லாமல் போய் விடும் என்பதன் சூட்சமம் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. அப்படிப்பட்டவர்களிடம் போய் யாராவது உள்ளார்ந்த விருப்பங்களைத் தெரிவிப்பார்களா? அப்படி ஒரு பேதைத்தனமும் சில நேரங்களில் நடந்து விடும். அதற்கு அந்த உள்ளார்ந்த விருப்பத்தையே துறந்து விட்டு கம்பீரமாக இருப்பது மேலானது. கம்பீரமாக இருப்பது தனி அழகு, தனி இன்பமும் கூட. கொஞ்சம் அவசரப்படுபவர்களுக்கு இது புரிவது சற்று நாள் எடுக்கும் சமாச்சாரம்.
            நுட்பமாக யோசித்துப் பார்த்தால் அப்படிப்பட்டவர்கள் எல்லாவற்றிலும் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொண்டு இருப்பார்கள். இது புரியாமல் அவர்களை அணுகுவது என்பது நரியொன்றிடம் கோழி ஒன்று பிராது கொடுப்பதைப் போலாகி விடும்.
            அவர்கள் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக இருப்பது போல நடிக்கவும் செய்வார்கள். அந்த நடிப்பின் மூலம் நுட்பமான ஆதிக்கத்தை ஏற்படுத்த முனைவார்கள். இது புரியாமல் அவர்களின் பயந்தாங்கொள்ளித்தனத்திற்கு ஆறுதல் சொல்வதோ, தைரியப்படுத்துவதாக முயல்வதோ மற்றுமொரு அபத்தத்தின் உச்சக்கட்டம்.
            அவர்கள் மற்றவர்கள் செயலாற்ற வேண்டும் என்று தாங்கள் செயலாற்றாமல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது அவர்களுக்கு அவசியம். அப்போதுதானே அதில் புழுதி வாரி தூற்ற முடியும். குற்றம் குறைகளைச் சொல்ல முடியும். செயலாற்றாமல் இருப்பதை எதுவும் செய்யவில்லை என்ற ஒரு வகையில்தான் குறை கூற முடியும், வேறு எந்த வகையிலும் குறை கூற முடியாது என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பவர்கள் அவர்கள்.
            சிலரிடம் நல்லது என நினைத்துச் செய்து அது தனிப்பட்ட முறையில் கெடுதலாக முடிவதன் காரணம் என்ன? என்று கேள்வி கேட்டால் அதற்கானப் பதில்தான் மேலே விலாவாரியாக இருப்பது.
            அவர்கள் மனதளவில் ஒரு முடிவு எடுத்து விட்டவர்கள். அவர்களிடம் எதையும் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முடியாதது ஒரு துர்பாக்கிய நிலைதான். உலகின் பிரச்சனைகளே இப்படித்தான். ஒரு மனநிலைக்கும், உண்மையான, நியாயமான வேண்டுகோளுக்கும் இடையே நிகழும் போராட்டம்தான்.
*****