28 May 2018

கண்டுக்காதீங்க ப்ளீஸ்! (Five Points Management)


கண்டுக்காதீங்க ப்ளீஸ்! (Five Points Management)
            1. சில கேள்விகளுக்குப் பதில் இல்லை. அது மனதின் பயம் அல்லது சந்தேகம். அதற்குச் சாதுர்யமானப் பதிலைச் சொல்ல முனையக் கூடாது. அவர்களின் உளவியலைப் புரிந்து கொண்டு மரியாதையோடு கூடிய புகழும்படியானப் பதிலைச் சொல்ல வேண்டும். ஒருவரின் பயத்தையும், சந்தேகத்தையும் களைவதற்கு அதுதான் பதிலா என்றால் அதுதான் அந்த ஒருவருக்கு ஏற்ற பதில். மரியாதையும், பாராட்டும் குறையும் இடத்தில் அதுபோன்ற பயமும், சந்தேகமும் நிறையவே வரும்.
            2. சில சமயங்களில் அப்படித்தான் நடக்கும். அதற்கு எதுவும் செய்ய இயலாது. கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டு விட வேண்டும். அதை நோண்டி நோண்டி பார்ப்பது என்பது ஆறும் புண்ணை நோண்டி நோண்டிப் பார்ப்பதைப் போன்றது. நேர்மையாக இருக்கிறோம் என்பது எறியப்படும் கல்லுக்கு எப்படித் தெரியும், அதை எறிபவருக்கே தெரியாத போது.
            3. சில இடங்களில் மற்றவர்கள் தான் எனும் ஆணவத்தோடு பேச ஆரம்பிக்கும் போது, நாமும் தாம் எனும் ஆணவத்தோடு பேசத் தொடங்குவோம் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லாம் பழக்கதோஷம். அப்படி நேர்ந்து விடும். அப்படிப் பேசி அதில் எந்தப் பயனும் உண்டாகப் போவதில்லை. வீண் வம்பும், மன பேதங்களும்தான் மிச்சம்.
            தேவைப்படுவது புரிந்து கொள்வதற்கான தன்மையே. அதை எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது. அவர்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்பது புரியாமலே இங்கே பல பேர் இருக்கிறார்கள்.
            ஆக, தணிப்பதற்கானப் பேச்சு என்பது வேறு. இவ்வளவு கோபப்படுகிறீர்களே என்று சொல்வதை விட, கோபமே வராத உங்களுக்கு இவ்வளவு கோபம் வந்து விட்டதே என்று சொல்வதுதான் தணிப்பது என்பது. அதாவது தணிப்பது என்பது புத்திசாலிதனமான விளக்கங்கள் சொல்வது அல்ல, முகஸ்துதி செய்வதுதான்.
            4. சில நேரங்களில் தொழில்நுட்ப சாத்தியங்களைப் பார்க்கும் போது பிரமாண்டமாக இருக்கிறது. அப்படி ஒரு பிரமாண்டம் வாழ்விலும் சாத்தியம்தான். மனதுக்கு ஒத்து வராது. பிரமாண்டங்கள் இல்லாமல் இருப்பது மனதுக்கு நல்லது. ஆனால் அந்தப் பிரமாண்டங்கள் உருவானது எல்லாம் மனதில்தான் என்பதை நினைத்துப் பார்த்தால் அது அதை விட பிரமாண்டமாக இருக்கும்.
            5. சில பொழுதுகளில் செய்ய வருமோ? வராதோ? என்று நினைத்துக் கொள்ளலாம். செய்யத் துவங்கினால் அது வரும். ஆக செய்ய முடியுமா? முடியாதா? என்பது இல்லை. செய்யத் துவங்கினால் அது முடியும். செய்வதற்கு முன்னான மனநிலை வேறு. செய்யத் துவங்கி விட்டால் ஏற்படும் மனநிலை வேறு. அதனால் மனநிலைகளை நம்பி ஏமாற வேண்டாம். தொடங்கி விடுவது எல்லாவற்றையும் மாற்றி விடும். எத்தனையோ முன்முடிந்த பல முடிவுகளை அவைகள் தூள் தூளாக்கியிருக்கின்றன.
*****

2 comments:

  1. அருமையான எண்ணப் பதிவு

    ReplyDelete

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...